👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பும் பணியை 6 மாதங்களுக்குள் முடிக்கப்பட்டுவிட வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
இந்த 6 மாதங்களில், அரசு அனுமதி பெறுவது, விளம்பரம் செய்வது, தேர்வுக் குழுவை அமைப்பது என ஒவ்வொன்றுக்கும் கால நிர்ணயம் செய்தும் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில், தரமான உயர் கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காகவும், ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காகவும் யுஜிசி அவ்வப்போது வழிகாட்டுதல்களை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் ஒவ்வொரு நிலைக்குமான கால அவகாசத்துக்கான வழிகாட்டுதலை யுஜிசி தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி, யுஜிசி-யின் குறைந்தபட்ச கல்வித் தகுதி வழிகாட்டுதல் 2018-இன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தியிருப்பதோடு, காலிப் பணியிடங்களை நிரப்பும் பணி முழுமையும் 6 மாதங்களுக்குள் முடிக்கப்பட்டுவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதில், பேராசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பும் பணியைத் தொடங்கிய 15 நாள்களுக்குள், பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு துறையிலும் அடுத்த 6 மாதங்களில் காலியாகப்போகும் பேராசிரியர் பணியிடங்கள் எத்தனை? எந்த இடஒதுக்கீடு ரோஸ்டர் அடிப்படையில் காலியிடம் நிரப்பப்பட உள்ளது என்பன உள்ளிட்ட விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும்.
அடுத்து, உயர் கல்வி நிறுவனம் வெளியிட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு சம்பந்தப்பட்ட அரசுத் துறையிடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பித்த 30 நாள்களில், சம்பந்தப்பட்ட அரசுத் துறை அதற்கான அனுமதி வழங்கவேண்டும். அவ்வாறு 30 நாள்களில், சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லையெனில், காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அனுமதி கிடைத்ததாகவே கருத்தில் எடுத்துக்கொள்ளலாம்.
இந்த அனுமதி கிடைத்ததும், அடுத்த 15 நாள்களுக்குள் தேசிய நாளிதழ் மற்றும் வேலைவாய்ப்பு செய்தி இதழ்களில் விளம்பரம் வெளியிடப்படவேண்டும். அதன் பின்னர் தேர்வுக் குழு அமைக்கவேண்டும். இந்தத் தேர்வுக் குழு அமைப்பதும், அந்தக் குழு உறுப்பினர்கள் தேர்வுப் பணியைத் தொடங்குவதும் காலிப் பணியிட விளம்பரம் வெளியிட்ட 30 நாள்களுக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
விண்ணப்பங்களை பெறுதல், பரிசீலித்தல், நேர்முகத் தேர்வு அழைப்புக் கடிதம் அனுப்புதல் பணிகளை அடுத்த ஒரு மாதத்தில் முடிக்கவேண்டும். பின்னர், ஐந்தாவது மாதத்தில், நேர்முகத் தேர்வை நடத்தி, தகுதியானவர்களை பேராசிரியர் பணிக்குத் தேர்வு செய்யவேண்டும். இறுதியாக, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியிடம் ஒப்புதல் பெறுதல், நியமன ஆணை வழங்குதல் மற்றும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளை ஆறாவது மாதத்தில் முடிக்கவேண்டும் என யுஜிசி வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது
.
இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் துரைசாமி கூறியது:
யுஜிசி அவ்வப்போது வெளியிட்டு வரும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, பல்கலைக்கழகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அதுபோல, பேராசிரியர் தேர்வுக்கான கால வரையறையையும், ஏற்கெனவே மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதலின் அடிப்படையில் பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது. இப்போது யுஜிசி வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலும் பின்பற்றப்படும். மேலும், பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 200-க்கும் அதிகமான பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையை பல்கலைக்கழகம் மேற்கொள்ள உள்ளது.
மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு என்ற புதிய இடஒதுக்கீடு கொள்கை அடிப்படையில் பணியிடத் தேர்வு நடத்துவதா? அல்லது பல்கலைக்கழகம் ஏற்கெனவே பின்பற்றி வரும் இடஒதுக்கீடு நடைமுறையில் தேர்வை நடத்துவதா? என்ற குழப்பம் எழுந்துள்ளது. மேலும், பல்கலைக்கழகம் இதுவரை 200 புள்ளி ரோஸ்டர் அடிப்படையில் ஒவ்வொரு துறையையும் ஒரு யூனிட்டாக கணக்கிட்டு பேராசிரியர் தேர்வும், இடஒதுக்கீடும் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.
இந்த முறை காரணமாக, குறிப்பிட்ட சமூகத்தினர் அந்தத் துறையில் பணி வாய்ப்புப் பெற நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகும். எனவே, இப்போது ஒட்டுமொத்த பல்கலைக்கழகத்தையும் (அனைத்துத் துறைகளையும்) ஒரே யூனிட்டாகக் கருத்தில் கொண்டு பேராசிரியர் தேர்வையும், இடஒதுக்கீடையும் நடைமுறைப்படுத்துமாறு புதிய வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இந்த குழப்பங்களுக்கு தீர்வு காணும் வகையில், இந்த புதிய நடைமுறைகள் குறித்து அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அரசின் அனுமதி கிடைத்ததும், உடனடியாக முன்னுரிமை அடிப்படையில் ஒவ்வொரு துறையாக காலிப் பணியிடங்களை நிரப்பும் பணியை பல்கலைக்கழகம் தொடங்கிவிடும். அடுத்த ஒரு வார காலத்தில் அரசின் அனுமதி கிடைத்துவிடும் என பல்கலைக்கழகம் எதிர்பார்க்கிறது என்றார் அவர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U