அறிவுக் கண்ணை திறக்கும் பார்வையற்ற ஆசிரியர்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 30, 2019

அறிவுக் கண்ணை திறக்கும் பார்வையற்ற ஆசிரியர்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
பார்வைக் குறைபாட்டை ஒரு பொருட்டாகவே கருதாமல், தான் பயிற்றுவிக்கும் பாடங்களில் மாணவர்களை 100 சதவீதம் தேர்ச்சி பெறச் செய்து சாதனை படைத்துள்ளார் நாமக்கல் மாவட்டம் வேப்பநத்தம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் கா.அருள்.வழக்கமாக அறிவியல் பாடங்கள் பயிலும் மாணவர்களே பள்ளி அளவில் முதல் மாணவர்களாக வரும் நிலையை மாற்றி, என்.புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் வணிகவியல், கணக்குப்பதிவியல் பயிலும் கலைப் பிரிவு மாணவர்களும் முதலிடம் பிடிக்கும் நிலையை உருவாக்கி, பிற ஆசிரியர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார் இவர். அவரை சந்தித்தோம்.“எனது தந்தை காளியண்ணன், நாமக்கல் நல்லிபாளையத்தைச் சேர்ந்தவர். இலங்கையில் நகைக்கடை நடத்தி வந்தார். அங்கு போர் ஏற்பட்ட சமயத்தில் கடையை அப்படியே விட்டுவிட்டு, மீண்டும் சொந்த ஊரான நாமக்கல்லுக்கு வந்துவிட்டார். பின்னர், அம்மாவின் ஊரான வேப்பநத்தம் புதுார் கிராமத்தில் மளிகைக் கடை நடத்தினார். எனக்கு இரண்டு வயதிருக்கும்போது தந்தை இறந்துவிட்டார்.
இதனால், தாயார் காளியம்மாள்தான் மிகவும் கஷ்டப்பட்டு என்னை வளர்த்தார்.பிறக்கும்போதே எனக்குப் பார்வைக் குறைபாடு இருந்தது. மருத்துவர்களிடம் காண்பித்தபோது, குணப்படுத்த முடியாது என்று கைவிரித்துவிட்டனர். ஏதோ ஒரு உருவம் செல்வதுபோல இருக்கும். ஆனால், யார் என்று தெரியாது. பழக்கமானால், அவர் யார் என்பதை அடையாளம் கண்டுகொள் வேன். இந்தக் குறைபாடு காரணமாக தொடக்கப் பள்ளியில் என்னைச் சேர்க்க மறுத்துவிட்டனர்.இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பள்ளியில் சேர்க்கப்பட்டேன். ஆசிரியர்கள் உதவியுடன் தொடக்க கல்வியை முடித்தேன். தொடர்ந்து, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை திருச்சி வடுகார்பேட்டையில், பார்வைக் குறைபாடு கொண்ட மாணவர்கள் தங்கிப் பயிலும் விடுதியில் தங்கி, அங்குள்ள தனியார் பள்ளியில் பயின்றேன்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 453 மதிப்பெண்ணும், பிளஸ் 2 தேர்வில் 1,038 மதிப்பெண்ணும் பெற்றேன். தொடர்ந்து, திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.காம்., எம்.காம், எம்.ஃபில். பயின்றேன். தஞ்சை ஒரத்தநாட்டில் ஆசிரியர் கல்வியை முடித்தேன்.அம்மா விவசாயக் கூலி வேலை செய்து படிக்க வைத்ததால், கல்லூரிப் படிப்பு முடித்தவுடன், ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்து அம்மாவின் சுமையை இறக்கிவைக்க வேண்டுமெனக் கருதினேன். இதையடுத்து, விடுதி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுக்குத் தயாரானேன். 2012-ல் குரூப் 4, குரூப் 2 ஆகிய போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றேன். பணிக்கான உத்தரவும் வந்தது.எனினும், ஆசிரியர் தேர்விலும் வெற்றி பெற்றதால், நான் ஆசிரியப் பணியை தேர்வு செய்தேன். அதே ஆண்டு ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன். இடமாற்றம் காரணமாக 2013-ல் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட என். புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியில் சேர்ந்தேன். 11, 12-ம் வகுப்புகளில் வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல் பாடங்களை நடத்துகிறேன்.
வணிகவியல், கணக்குப்பதிவியல்... பொதுவாக என்னைப் போன்ற பார்வைக் குறைபாடு உள்ள ஆசிரியர்கள், தமிழ் அல்லது வரலாறு பாடத்தில் பட்டம் பெறுவர். ஆனால், வணிகவியல், கணக்குப் பதிவியல் பாடத்தில்ஆர்வம் இருந்ததால், நான் அவற்றைத் தேர்வு செய்தேன்.2014-ல் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய, வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல் மாணவர்கள் அனைவருமே தேர்ச்சிபெற்றனர். இதுபோல, தொடர்ச்சியாக அந்த இரு பாடங்களிலும் மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், 6 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர். இதுதவிர, வணிகவியல், கணக்குப்பதிவியல் பயிலும் கலைப் பிரிவு மாணவர்களே, பள்ளி அளவில் முதல் மதிப்பெண்ணும் பெற்று வருகின்றனர். நடப்பாண்டும், பள்ளியில் முதலிடம் பிடித்தவர் எனது மாணவர்தான் என்றார் கா.அருள் பெருமையுடன்.
உதவும் நவீன தொழில்நுட்பம்! “பார்வை நன்றாக இருக்கும் ஆசிரியர்களே, மாணவர்களை கட்டுப்படுத்த திண்டாடும் நிலையில், நீ்ங்கள் எவ்வாறு சமாளிக்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு, “மாணவர்களிடம் அன்பாகப் பழகுவதே இதற்கு முக்கியக் காரணம். மேலும், பாடங்களை அப்டேட் செய்ய, தற்போதைய தொழில்நுட்பம் பெரிதும் உதவுகிறது. இதை பயன்படுத்தி, பாடங்களை நடத்துகிறேன்.பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது, பிறர் சொல்லக்கேட்டும், டேப்ரிக்கார்டரில் பதிவு செய்யப்படும் ஆடியோவை வைத்தும் பாடம் படித்தேன். தற்போதுள்ள நவீனத் தொழில்நுட்பம், என்னைப் போன்ற பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு மிகவும் பயனாக உள்ளது. எதிர்காலத்தில் சிறந்த மாணவர்களை உருவாக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள். தொடர் பயிற்சியின் மூலம், எனது பணிகளை யாருடைய உதவியுமின்றி, நானே செய்து வருகிறேன்” என்கிற ஆசிரியர் கா.அருளுக்கு, மனைவி பிரியா மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews