👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
காவல்துறையினரின் தபால் வாக்குகள் 100 சதவீதம் பதிவு; அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 50% தபால் வாக்குகள் பதிவாகவில்லை: மே 23 காலை 6 மணி வரை அவகாசம்
தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், 100 சதவீதம் தபால் வாக்குகளைப் பதிவு செய்துள்ள நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தபால் வாக்குகள் இன்னும் 50 சதவீதம் பதிவாகவில்லை என்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில், கடந்த 18-ம்தேதி மக்களவைப் பொதுத்தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மத்திய அரசு ஊழியர்கள் என 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்தல் பணிக்காகநியமிக்கப்பட்டனர். காவல்துறையைச் சேர்ந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்ட காவலர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதுதவிர, அரசு ஊழியர்கள் அல்லாதோரும் தேர்தல் பணியாற்றினர். இவர்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையில் தங்கள் தொகுதியைவிட்டு வெளியில் சென்று வாக்குச்சாவடியில் பணியாற்றியோருக்கு தபால் வாக்குப்படிவங்கள் வழங்கப்பட்டு, தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. குறிப்பாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, அவர்களுக்கு தேர்தல் பயிற்சி வழங்கப்பட்ட மையங்களிலும், காவலர்களுக்கு சிறப்பு மையங்களிலும் வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. தபால் வாக்கைப் பொறுத்தவரை, படிவத்தை பூர்த்தி செய்து, தாங்கள் சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் நேரிலோ, தபால் மூலமோ வாக்கு எண்ணிக்கை நடக்கும் மே.23-ம் தேதி காலை 6 மணிவரை அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தபால் வாக்கு தவிர, சொந்த தொகுதியில் தேர்தல் பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவலர்கள் மற்றும் அரசு பணியில் அல்லாத வீடியோகிராஃபர்கள், இணையதள இணைப்பு வழங்குபவர்கள், வாகன ஓட்டுநர்களுக்கு இ.டி.சி. படிவம் வழங்கப்பட்டது. அந்தப் படிவத்தை பயன்படுத்தி, தாங்கள் பணியாற்றும் அந்த வாக்குச்சாவடியிலேயே சம்பந்தப்பட்டவர்கள், வாக்களிக்க வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்த வகையில், தமிழகத்தில் 100 சதவீதம் தபால் வாக்குகளை காவலர்கள் பதிவு செய்து அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியதாவது:தமிழகத்தில் கடந்த ஏப்.23-ம்தேதி நிலவரப்படி, தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2 லட்சத்து 61 ஆயிரத்து 592 பேருக்கு தபால் வாக்குப்படிவங்கள் வழங்கப்பட்டன. அதில், ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 632 தபால் வாக்குப் படிவங்களைப் பூர்த்தி செய்து வழங்கியுள்ளனர்.
இதுதவிர, அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அல்லாதவர்கள் என 1 லட்சத்து 18 ஆயிரத்து 398 பேருக்கு தேர்தலின்போது இடிசி படிவம் வழங்கப்பட்டுள்ளது. இதில் எத்தனை பேர் வாக்களித்தனர் என்ற விவரம் இன்னும்கிடைக்கவில்லை. காவல்துறையினரைப் பொறுத்தவரை, 90 ஆயிரத்து 2 தபால் வாக்குப்படிவங்கள் வழங்கப்பட்டன. இவர்கள் அனைவரும் வாக்களித்து விட்டனர்.
இவ்வாறு சத்யபிரத சாஹு தெரிவித்தார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U