ஒருதலைக்காதல் வெறியாட்டம்... பலியாகும் அப்பாவி மாணவிகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 31, 2019

ஒருதலைக்காதல் வெறியாட்டம்... பலியாகும் அப்பாவி மாணவிகள்


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459


``யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே...’’

காதல் என்றவுடன் சட்டென நினைவிற்கு வரும் குறுந்தொகை பாடல் இது. அறிந்திடாத ஒருவனிடம் மனம் பறிகொடுத்த பெண், தன்னை விட்டு காதலன் நீங்கிடுவானோ என்ற அச்சமுறுகிறாள். அவளுக்கு காதலன் ஆறுதல் அளித்து,  செம்மண் நிலத்தோடுச் சேர்ந்த நீரை பிரிக்க முடியாதது போல நம் நட்பு நீங்காது என்கிறான். காதலைப் பாடாத கவியில்லை. அப்படியெழுதினால் அது கவியில்லை என்பார்கள். தமிழ் இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை, திருக்குறள், அகநானூறு நூல்கள் காதலைப்  பாடித்திளைக்கின்றன.

கொலைகளும், தற்கொலைகளும்...
காதலென்பது உணர்வு மட்டுமல்ல. கற்பொழுக்கத்துடன் கூடியதென்றே ஈராயிரம் ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. காதலுக்காக உயிரை விட்ட எத்தனையோ அமரகாவியங்கள் உள்ளன. தீவிரவாதத்தால் உயிரிழந்தவர்களை விட காதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம். 2001- 15ம் ஆண்டு வரை காதல் காரணமாக 38,585 கொலைகளும், 79,189 தற்கொலைகளும் நடந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் காதலுக்காக உயிரைக் கொடுக்கக்கூடியவர்கள் பெண்கள் அதிகம்.
வெறி கொள்ளும் காதல்!
மனம் விரும்பினால் காதலுக்காக உயிரைக் கொடுப்பவர்களில் பெண்கள் தான் அதிகம் என்கிறது புள்ளிவிபரக்கணக்கு. ஆனால், தான் விரும்பியதால், தன்னை விரும்ப வேண்டும் என்பதற்காக பெண்களைக் கொலை செய்வதில் ஆண்கள் தான் அதிகம் என்ற அதிர்ச்சிகரமான சம்பவங்கள் இந்தியா முழுவதும் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக நடக்கும் ஒருதலைக்காதல் கொலைகள் பெற்றோர்களையும், சமூகத்தையும் அன்றாடம் பதற வைக்கிறது.
கழுத்தை அறுத்த காதல்
கடந்த மாதம் கடலூர் குறிஞ்சிப்பாடி அருகே பள்ளி வகுப்பறையில் அமர்ந்திருந்த ஆசிரியை ரம்யாவை, ராஜசேகர் என்ற வாலிபர் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். காதலித்தவளை கொலை செய்யும் மனநிலை எப்படி ஏற்படுகிறது? விருட்சம் குப்பத்தைச் சேர்ந்த ராஜசேகர் 2 ஆண்டுகளாக ரம்யாவை ஒருதலையாக காதலித்துள்ளார். அதை வெளிப்படுத்திய போது, ரம்யா ஏற்க மறுத்தார். இதனால் தொடர்ந்து ரம்யாவிற்கு தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து ரம்யா பெற்றோரிடம் புகார் செய்துள்ளார். ஆத்திரமடைந்த ராஜசேகர், பள்ளிக்குள் நுழைந்து ரம்யாவை கொலை செய்துள்ளார். அவரை 3 நாட்களாக தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், மரத்தில் தூக்கு போட்டு ராஜசேகர் தற்கொலை செய்து கொண்டார்.

வகுப்பறையில் கொலை
2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கரூரில் இயங்கிவரும் தனியார் பொறியியல் கல்லூரியிலும் இதே போன்ற ஒரு சம்பவம் நடைபெற்றது. இக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தவர் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வெங்களுரை சேர்ந்தவர் உதயகுமார். இதே கல்லூரியில் 2ம் ஆண்டு படித்துவந்த சோனாலியை ஒரு தலையாய் காதலித்துள்ளார். ஏற்க மறுத்த சோனாலியை கட்டையால் தலையில் கடுமையாக தாக்கினார். படுகாயமடைந்த அவர், மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
வகுப்பறையில் எரித்துக்கொலை
2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோட்டயத்தில் நடந்த இச்சம்பவம் கேரளாவையே உலுக்கியது.
கேரள மாநிலம் கொல்லம் அருகே நீண்டகரை பகுதியைச் சேர்ந்தவர் ஆதர்ஷ். பிசியோதெரபி படித்து முடித்துள்ளார். இவரது கல்லூரியில் ஆலப்புழா அருகே ஹரிப்பாடு பகுதியை சேர்ந்த லட்சுமி, நான்காம் ஆண்டு பிசியோதெரபி படித்து வந்தார். இவரை ஒருதலையாய் காதலித்த ஆதார்ஷ், வகுப்பறையில் இருந்த லட்சுமி மீது பெட்ரோலை ஊற்றினார்.

 பின்னர் தனது உடலிலும் பெட்ரோலை ஊற்றி, தீ வைத்துக் கொண்டு, லட்சுமியைக் கட்டி பிடித்தார். இதில் லெட்சுமி உடலிலும் தீப்பற்றி கொண்டது. தீயை அணைக்க முயன்ற 2 மாணவர்கள் படுகாயமடைந்தனர். இவர்கள் நான்கு பேரும் கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் லட்சுமி, ஆதர்ஷ் உயிரிழந்தனர்.
பத்தாம் வகுப்பு மாணவி கொலை
திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் அருகே நல்லிக்கவுண்டன்பாளையம் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் ஆனந்தன் ஒருதலையாக காதலித்துள்ளார். பலமுறை மாணவியிடன் தன் காதலிப்பதாக ஆனந்தன் கூறியும், அதை அவர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தன், மாணவியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
விழுப்புரம் அருகே உள்ள வ.பாளையத்தை 17 வயது மாணவி பிளஸ் 2 படித்து வந்தார். இவரை மாம்பழப்பட்டு பகுதியைச் சேர்ந்த மினிபஸ் டிரைவர் செந்தில் ஒருதலையாக காதலித்து வந்தார். கடந்த 2016ம் ஆண்டு ஜீலை மாதம் நவீனாவின் வீட்டிற்கு செந்தில் பெட்ரோல் கேனுடன் சென்று தீக்குளித்தார். எரியும் நெருப்புடன் நவீனாவை கட்டிப்பிடித்தார். இதில் இருவரும் உடல் கருகினர்கள். முதலில் செந்திலும், அடுத்ததாக நவீனாவும் மருத்துவனையில் உயிரிழந்தனர்.
மாணவி எரித்துக் கொலை
மதுரை, திருமங்கலத்தை அடுத்த நடுவக்கோட்டையைச் சேர்ந்த 14 வயது சிறுமி அச்சம்பட்டி அரசுப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்துவந்தார். இவரை நடுவக்கோட்டையைச் சேர்ந்த பாலமுருகன் ஒருதலையாக காதலித்துள்ளார். இதை மாணவி ஏற்க மறுத்தார். 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பள்ளி சென்று கொண்டிருந்த மாணவியை நடுரோட்டில் பெட்ரோலை ஊற்றி பாலமுருகன் தீவைத்தார். படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நெல்லை மாவட்டம் வள்ளியூர் தனியார் துணிக்கடையில் வேலை பார்த்தவர் மெர்சி. இவரை ரவீந்திரன் ஒருதலையாய் காதலித்துள்ளார்.
அதை ஏற்க மறுத்த மெர்சியை ரவீந்திரன் குத்திக்கொலை செய்தார்.

மூவரை எரித்த கொடூரம்
சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் அஸ்வினி. கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த அழகேசன் விடாமல் விரட்டி தொந்தரவு செய்து வந்தார். இதனால் தனது வீட்டை ஜாபர்கான் பேட்டைக்கு அஸ்வினி மாற்றினார். பலமுறை தன்னை காதலிக்குமாறு அழகேசன் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதுகுறித்து அஸ்வினி புகார் அளித்ததன் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் 2018ம் ஆண்டு மார்ச் மாதம் கல்லூரி வாசலிலேயே அஸ்வினியை கத்தியால் சரமாரியாக அழகேசன் குத்தினார். படுகாயமடைந்த அஸ்வினி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் இந்துஜா. பி.டெக் படித்து முடித்து பொறியாளராக பணியாற்றி வந்தார். அவருடன் படித்த ஆகாஷ், படிப்பை பாதியிலேயே விட்டுள்ளார். படிக்கும் போது இருவரும் பழகியுள்ளனர். 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்துஜாவிற்கு திருமண ஏற்பாடு நடந்தது. இதையறிந்து அவரது வீட்டிற்கு சென்று ஆகாஷ் தகராறு செய்துள்ளார். 
இதற்கு இந்துஜாவின் தாய் ரேணுகா, சகோதரி நிவேதா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்போது திடீரென இந்துஜா மீது ஆகாஷ் பெட்ரோலை ஊற்றி தீவைத்தார். சம்பவ இடத்திலேயே இந்துஜா உடல் கருகி பலியானார். ஆத்திரம் அடங்காத ஆகாஷ், இந்துஜாவின் தாய் ரேணுகா, சகோதரி நிவேதா ஆகியோர் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்தார். இதில் இருவரும் படுகாயமடைந்தனர்.

இப்படி பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறையின் அளவு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. தற்போது நவீன காலம் என்பதால், சமூக ஊடங்களில் உள்ள பெண்களுக்கு எதிரான வன்முறை அளவிற்கு அதிகமாக நடந்து வருகிறது. வினுப்பிரியா என்ற பெண்ணின் படத்தை ஆபாச மார்பிங் செய்து வெளியிட்ட காரணத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
காதல் என்ற பெயரில் திருமண வயது நிரம்பாத சிறுமிகளை பலாத்காரம் செய்யும் கும்பல் ஒருபுறம் என்றால், ஒருதலைக்காதலால் தன்னை விரும்பாத பெண்ணை வெட்டி, எரித்துக் கொல்லும் கும்பல் மறுபுறம். ஒரு பெண் தன் கணவரைத் தேர்ந்தெடுக்க முழு உரிமை பெற்றவள் என்பதுடன், ஆணின் விருப்பத்தை மறுதலிக்கும் உரிமையும் உண்டு என்று சமூகம் உணராத வரை இப்படியான கொலைகள் தொடரத்தான் செய்யும். அப்படியான மனநிலை வீடுகளில் மட்டுமின்றி வீதிகளிலும் உருவாக வேண்டும். அதற்கான பணியை சட்டமும், காவல்துறையும் இணைந்து செய்ய வேண்டும்.

தமிழகத்தை உலுக்கிய வழக்குகள்
ஒரு தலைக்காதல் படுகொலை என்றவுடன் வினோதினி பெயர் உடனடியாக ஞாபகத்திற்கு வரும். காரைக்கால் கோட்டுச்சேரி திருவேட்டக்குடியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர், பொறியாளர் வினோதினியை (23) ஒருதலையாய் காதலித்து வந்துள்ளார். இதை வினோதினி ஏற்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ்குமார், வினோதினி மீது ஆசிட் வீசினார். இதில் வினோதியின் பார்வை பறிபோனது. மூன்று மாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வினோதினி 2013ம் ஆண்ட பிப்ரவரி 12ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இவ்வழக்கில் சுரேஷ்குமாருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர் சுவாதி. 2016ம் ஆண்டு ஜீன் 2ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலையாளி என்று கைது செய்யப்பட்ட ராம்குமார், புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். ஒரு தலைக்காதலால் சுவாதி கொல்லப்பட்டார் என்பது தான் போலீசாரின் வழக்கு.
ஆசிரியை வெட்டிக்கொலை
தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி காலை வழக்கம் போல் மாணவர்கள் வகுப்புக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆசிரியை பிரான்சினா பள்ளிக்கூட வளாகத்தில் உள்ள சர்ச்சில் வழிபட்டுக் கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் வந்த மர்மநபர் ஒருவர், அரிவாளால் ஆசிரியை பிரான்சினாவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினார். ரத்த வெள்ளத்தில் மிதந் பிரான்சினா சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
போலீசார் விசாரணையில், பிரான்சினாவை வெட்டியது அதே பகுதியைச் சேர்ந்த சீகன் என்று தெரிய வந்தது. இவர் பிரான்சினாவை ஒருதலையாக காதலித்துள்ளார். பிரான்சினாவுக்கு திருமணம் உறுதியானது. தனக்கு கிடைக்காதவர் வேறு யாருக்கும் கிடைத்துவிடக் கூடாது என்ற வெறியேறிய சீகன், பிரான்சினாவை வெட்டி படுகொலை செய்தது தெரிய வந்தது. அங்கிருந்து தப்பியோடிய சீகன், தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேவை உளவியல் மையங்கள்

பெண்களுக்கு ஏற்படும் இப்படியான பிரச்னைகளைக் களைய பள்ளி, கல்லூரிகள் உளவியல் ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட வேண்டும். கல்வி என்பது மாணவர்களின் உளவியல் சார்ந்த விஷயமாகும். அவர்களுக்கு கல்வி நிலையங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் நடக்கும் விஷயங்களை உரத்துப் பேசுவதற்கான இடங்கள் இல்லாததால், இப்படியான கொலைகள் அதிகரிப்பதாக பேராசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
12 வயதில் மனச்சிதைவு
மதுரையைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணர் முனைவர் ராணி சக்கரவர்த்தி கூறுகையில், ``இன்றைய சமூகத்தில் ஒரு குழந்தை உள்ள வீடுகள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, அக்குழந்தை கேட்கும் எதுவும் உடனடியாக கிடைக்கிறது. தான் கேட்டது கிடைக்கிறது என்பதால், தான் நினைப்பது கிடைக்கவேண்டும் என்று குழந்தை நினைக்கிறது. இது தான் குழந்தைகள் குற்றம் செய்ய துவக்கமாக உள்ளது. 
வீடுகளில் குழந்தைளிடம் பெற்றோர் மனம் விட்டு பேச வேண்டும். விளையாட்டு, பாடல் என குழந்தைகளுக்கு பிடித்தமான விஷயங்களில் ஆர்வம் காட்டச் செய்ய வேண்டும். ஆனால், இன்றைய பெற்றோர்கள், குழந்தைகள் செய்யும் குற்றங்களை மறைக்கப் பார்க்கிறார்கள். இதனால் 12 வயதிலேயே குழந்தைகள் மனச்சிதைவு நோய்க்கு ஆளாகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குழந்தைகளை சமூகத்தில் நல்லவர்களாக உருவாக்குவதில் பெற்றோரின் பங்கு அளப்பரியது.
அதேபோல கல்வி நிலையங்களில் மதிப்பெண் இயந்திரங்களாக குழந்தைகளை மாற்றாமல், விளையாட்டுடன் சேர்ந்த கல்வியை போதிக்க வேண்டும். விளையாட்டில் வெற்றியோ, தோல்வியோ உண்டு. அதை சந்திக்கும் குழந்தைகளுக்கு விட்டுக் கொடுக்கும் மனநிலையுடன், உதவி செய்யும் எண்ணமும் உருவாகும். இன்றைய சமூக, கல்வி முறையில் குழந்தைகள் அன்புக்கு ஏங்குகின்றன. அவர்களுக்கு வீடுகளில் பெற்றோரும், பள்ளிகளிலும் ஆசிரியர்களும் ஆறுதல் அளிக்க வேண்டும். ஏனெனில் இன்றைய குழந்தைகள் தான் நாளைய சமூகம். அப்படி வளர்க்கப்படாத குழந்தைகள் தான், தனக்கு கிடைக்காத எதுவும் இருக்கக்கூடாது என்ற நிலையில் கொலையிலும், தற்கொலையிலும் ஈடுபடுகின்றனர்...’’ என்று கூறினார்.

Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews