#அறிவியல்-அறிவோம்: பாதுகாப்பாக வெடிப்போம் பட்டாசு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 06, 2018

#அறிவியல்-அறிவோம்: பாதுகாப்பாக வெடிப்போம் பட்டாசு!



தீபாவளியையும் பட்டாசையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. விபத்தில்லாத, உடல் பாதிப்பில்லாத தீபாவளிதான் எல்லோருக்கும் இனிக்கும். பாதுகாப்பு, முன்னெச்சரிக்கையை நாம் எந்த அளவு கடைப்பிடிக்கிறோம் என்பதைப் பொறுத்தே அது அமையும். பட்டாசு வெடிக்கும்போதும், கையாளும்போதும் ஏற்படும் பாதிப்புகளை எப்படிச் சமாளிப்பது, பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

பட்டாசுகளைக் கையாளும்போதும், வெடிக்கும்போது கவனக் குறைவாகவோ அல்லது அலட்சியம் காரணமாகவோ பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம். இவற்றிலிருந்து எப்படித் தற்காத்துக் கொள்வது, முன்னெச்சரிக்கை யாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய ஆலோசனைகள்
பாதிப்புகளின் வகைகள்

# பட்டாசைக் கண்டு பயந்து விழுந்து ஏற்படும் காயம்
# பட்டாசைக் கவனக்குறைவாகக் கையாளுவதால் ஏற்படும் தீக்காயம்.
# அதிகச் சத்தத்தின் காரணமாக ஏற்படும் பாதிப்பு
# புகை, ரசாயனக் கலந்த கலவையால் ஏற்படும் பாதிப்பு.
# அதிக ஒளி வெள்ளத்தை ஏற்படுத்தும் பட்டாசுகளால் ஏற்படும் பாதிப்பு.
தீக்காயம்

பட்டாசுகள் வெடித்துச் சிதறும் போதும், அலட்சியமாகப் பட்டாசுகளைக் கையாளும்போதும் பலருக்கும் தீக்காயம் ஏற்படுவதுண்டு. உடலில் எங்கேயாவது தீக்காயம் ஏற்பட்டால், காயம் உள்ள இடத்தில் துணி படாத வகையில், அவற்றை அகற்றிவிட வேண்டும். காயம் ஏற்பட்ட இடத்தில் குளிர்ந்த நீரால் சுத்தம் செய்ய வேண்டும். காயம் தீயால் ஏற்பட்டதா அல்லது பட்டாசில் கலந்துள்ள ரசாயனம் காரணமாக ஏற்பட்டுள்ளதா என்பது நமக்குத் தெரிய வாய்ப்பில்லை.
அதனால், சோப்பு போட்டுக் கழுவ வேண்டாம். சிலர் மை, உப்பு ஆகியவற்றைக் காயத்தின் மீது வைத்துத் தேய்ப்பார்கள். இது காயத்தில் தொற்றை ஏற்படுத்திவிடும். எனவே, கவனமாக இருக்கவும். கழுவிய பிறகு ஈரத் துணியால் காயத்தைச் சுற்றிக் கொண்டால் போதுமானது. இந்த முதலுதவியைச் செய்த பிறகு நேரடியாக மருத்துவ மனைக்குச் சென்றுவிட வேண்டும்.

கண்களில்
கண்ணில் தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாகக் கண்ணைக் கழுவ வேண்டும். கண்ணைக் கசக்கக் கூடாது. நீங்களாகவே கடையில் கண் சொட்டு மருந்தை வாங்கிப் பயன்படுத்துவதைவிட, மருத்துவரிடம் காட்டிக் காயத்தின் தன்மையைப் பார்த்து மருந்து எடுத்துக்கொள்வதுதான் நல்லது.
புகை அலர்ஜி

சிலருக்குப் புகை ஒவ்வாமை இருக்கும். அதிகப் புகை வெளிவரும் பட்டாசுகளை வெடிக்கும்போது புகை ஒவ்வாமை இருப்பவர்களுக்கும், ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு உள்ளவர்களுக்கும் மூச்சு திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். குறிப்பாக, குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் இந்தப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.
மூச்சுத் திணறல், மூச்சிளைப்பு உள்ளவர்கள் அதிகப் புகை வரும் பட்டாசுகளை வெடிக்காமலும், வெடிக்கும் இடத்தில் இருந்து நன்றாகத் தள்ளி நிற்பதும் அவசியம். மாசுக் காற்றை வடிகட்டும் முகமூடியை முகத்தில் அணிந்துகொள்வது, இந்தப் பாதிப்பில் இருந்து தப்பிக்க உதவும்.
வலிப்பு, தலைவலி
அதிக வெளிச்சத்தை உருவாக்கும் பட்டாசுகள் வலிப்பு நோயாளி களுக்கு ஆகாது. குறிப்பாக, இரவு நேரத்தில் அதிக ஒளி வெள்ளத்தைப் பார்க்கும் வலிப்பு நோயாளிகளுக்கு வலிப்பு ஏற்படலாம். எனவே, வலிப்பு நோய் பாதிப்பு உள்ளவர்கள் இந்த வகைப் பட்டாசுகளை வெடிக்காமலும், பார்க்காமலும் இருக்க வேண்டும்.
அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் ஒற்றைத் தலைவலி, டென்ஷன் தலைவலி பாதிப்பு உள்ளவர்களுக்குக் கூடுதல் தலைவலியை உண்டாக்கிவிடும். அதிக ஒலியை உள்வாங்காமல் இருப்பதற்காக ஒலி அடைப்பான் மூலம் காதை அடைத்துக் கொள்வது, தலைவலி வராமல் தடுக்கும்.
கர்ப்பிணிகளுக்கு...

அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் கருவில் உள்ள சிசுவுக்கு ஆகாது. அதிக ஒலியை உணரும் சிசு, இயக்கத்தை அதிகப்படுத்திவிடும். இது குழந்தைக்கு நல்லதல்ல. எனவே, கர்ப்பிணிப் பெண்கள் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளில் இருந்து, விலகி இருப்பது நல்லது.
பொதுவான பாதிப்பு
அதிக ஓசை காரணமாகக் காது கேளாமை, தூக்கமின்மை, உயர் ரத்தஅழுத்தப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். காதுகளைப் பாதுகாத்துக் கொள்ள 85 டெசிபல் அளவுக்கு மேல் ஒலி எழுப்பும் பட்டாசுகளைத் தவிர்க்க வேண்டும். இதய நோயாளிகள் அதிக ஓசையைக் கேட்பதால் பாதிப்புக்கு ஆளாகலாம்.

பட்டாசுகளை அதிகம் கையாளும் குழந்தைகளுக்குக் கையில் பட்டாசு மருந்து படும். அந்த நிலையில், கைகளை நன்றாகக் கழுவாமல் உணவு உண்பது போன்ற செயல்களைச் செய்தால் வயிற்றுக் கோளாறுகள் ஏற்படும். அதனால் குழந்தைகள் கை கழுவுவதைப் பெற்றோர் உறுதிப்படுத்த வேண்டும்.
(சீ.ஹரிநாராயணன்)

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews