தினமும் ஒரு திருக்குறள் பற்றி அறிவோம்: படம் மற்றும் தமிழறிஞர்களின் விளக்க உரைகளுடன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 12, 2018

தினமும் ஒரு திருக்குறள் பற்றி அறிவோம்: படம் மற்றும் தமிழறிஞர்களின் விளக்க உரைகளுடன்



கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.


பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
கெடுப்பதூஉம் - பூமியின்கண் வாழ்வாரைப் பெய்யாது நின்று கெடுப்பதூஉம்; கெட்டார்க்குச்சார்வாய் மற்று ஆங்கேஎடுப்பதூஉம்-அவ்வாறு கெட்டார்க்குத் துணையாய்ப் பெய்து முன் கெடுத்தாற் போல எடுப்பதூஉம்; எல்லாம் மழை - இவை எல்லாம் வல்லது மழை. ('மற்று' வினை மாற்றின்கண் வந்தது, ஆங்குஎன்பது மறுதலைத் தொழிலுவமத்தின்கண் வந்த உவமச்சொல். கேடும் ஆக்கமும் எய்துதற்கு உரியார் மக்கள் ஆதலின், 'கெட்டார்க்கு என்றார்'. 'எல்லாம்' என்றது, அம்மக்கள் முயற்சி வேறுபாடுகளால் கெடுத்தல் எடுத்தல்கள் தாம் பலவாதல் நோக்கி. 'வல்லது' என்பது அவாய் நிலையான் வந்தது. மழையினது ஆற்றல் கூறியவாறு.)

மணக்குடவர் உரை:
பெய்யாது நின்று எல்லாப் பொருளையுங் கெடுப்பதும் அவை கெடப் பட்டார்க்குத் துணையாய்த் தான் பெய்து பொருள்களெல்லாவற்றையும் அவ்விடத்தே யுண்டாக்குவதும் மழை. இஃது இரண்டினையுஞ் செய்யவற்றென்றவாறு.

தேவநேயப் பாவாணர் உரை:
கெடுப்பதூஉம் - பெய்யாதுநின்று பண்பாட்டிலும் தொழிலிலும் மக்களைக் கெடுப்பதும்; கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே எடுப்பதூஉம் - அங்ஙனங் கெட்டார்க்குத் துணையாகப்பெய்து முன்பு கெடுத்தது போன்றே பின்பு அவரைத் தூக்கிவிடுவதும்; எல்லாம் மழை - ஆகிய எல்லாம் செய்வது மழையே. "தனக்குமிஞ்சித் தானம்".

ஆதலால், வளமில்லாக் காலத்தில் வள்ளன்மை இல்லாதாரின் பண்பாடு கெடுவதும், விளைபொருளும் கருவிப்பொருளும் இல்லாக்காலத்தில் வணிகர் கைத்தொழிலாளர் ஆகியோரின் தொழில் கெடுவதும், இயல்பாதலாலும்; மழையில்லாப் பஞ்சக்காலம் நெடிதுங் குறிதுமாக இடையிடை நேரினும், பின்பு இறைவனருளால் மீண்டும் மழைபெய்து மக்கட்பண்பாடும் தொழிலும் முன்போல் திருந்துவதனாலும்; கெடுப்பதும் எடுப்பதுமாகிய இரு முரண்பட்ட செயலையும் மழை செய்வதாகக் கூறினார். ஆயினும், காலத்திற்கேற்ப மக்கள் நிலைமை மாறும் என்பதும், இடையிடை நிற்பினும் அறுதியாய் நின்றுவிடாது உலகம் அழியும் வரை மழைபெய்துவரும் என்பதும், மழை பெய்யாமைக்கு ஏதேனும் ஒரு கரணியம் இருத்தல்வேண்டும் என்பதும், குறிப்பாக உணர்த்தப்பெறும் உண்மைகளாகும். செல்வமிழந்தவரைக் கெட்டார் என்பது இருவகை வழக்கிலுமுண்டு. கெடுப்பதூஉம், எடுப்பதூஉம் என்பன இன்னிசையளபெடை. 'மற்று' வினைமாற்றிடைச் சொல். 'ஆங்கு' உவமையுருபு.

கலைஞர் உரை:
பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:
பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்.

Translation
'Tis rain works all: it ruin spreads, then timely aid supplies; As, in the happy days before, it bids the ruined rise.


Explanation
Rain by its absence ruins men; and by its existence restores them to fortune

Transliteration
Ketuppadhooum Kettaarkkuch Chaarvaaimar Raange Etuppadhooum Ellaam Mazhai


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews