ஆசிரியர்களை பயிற்சி வகுப்பு எடுப்பதாக அழைத்து வந்து இந்துத்துவ பிரசாரம் செய்வதாக சர்ச்சை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 23, 2018

ஆசிரியர்களை பயிற்சி வகுப்பு எடுப்பதாக அழைத்து வந்து இந்துத்துவ பிரசாரம் செய்வதாக சர்ச்சை

திருப்பூரில் அரசுப் பள்ளி ஆசிரியர்களை பயிற்சி வகுப்பு எடுப்பதாகக்கூறி வரவழைத்துவிட்டு, அவர்களிடம் இந்துத்துவ பரப்புரையைச் செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை மற்றும் இதிகாச சங்காலன சமிதி என்ற அமைப்பும் இணைந்து திருப்பூரில் உள்ள நடுநிலைப் பள்ளிகள் மற்றும் தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு `வரலாற்று அறிவியல் பயிற்சிப் பட்டறை’ என்ற வகுப்பை இன்று நடத்தினார்கள்.
திருப்பூர் ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்பில் மாவட்டம் முழுவதுமிருந்து சுமார் 700 ஆசிரியர்கள் கலந்துகொண்டார்கள். பின்னர், பயிற்சி வகுப்பில் பேசத் தொடங்கிய இதிகாச சங்காலன சமிதியினர், ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட இதிகாசங்களைப் பற்றிக் கூறியும், அவை சார்ந்த கருத்துகளை விவரித்தும் ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றினார்கள். ஆனால், அவை அனைத்தும் பள்ளிப் பாடத்திட்டத்துக்கு சற்றும் தொடர்பே இல்லாத விஷயங்களாக இருந்ததால் ஆசிரியர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும், இதிகாச புராண சம்பவங்களை உதாரணம் காட்டுவது எனப் பயிற்சி வகுப்பு முழுவதும் இந்துத்துவ பரப்புரையைச் செய்ததாக மட்டுமே இருந்திருக்கிறது
இதுகுறித்து நம்மிடம் பேசிய பயிற்சியில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் சிலர், ``ஆயுதபூஜை மற்றும் வார விடுமுறை எனத் தொடர்ந்து 4 நாள்கள் பள்ளிக்கூட விடுமுறைக்குப் பிறகு, இன்றுதான் பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. இந்தநிலையில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வகுப்பு நடத்துவதாகக் கூறி மாவட்டம் முழுவதுமிருந்து 700 ஆசிரியர்களைக் கட்டாயமாக இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளச் சொன்னார்கள். அதற்காக மாவட்டக் கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கையும் விடப்பட்டது. கல்வி தொடர்பான கற்பித்தல் குறித்த பயிற்சி வகுப்பாக இருக்கும் என்றுதான் நாங்களும் கலந்துகொண்டோம். ஆனால், முழுக்க முழுக்க இந்துத்துவ பரப்புரையை மட்டுமே நடத்தினார்கள்.
இந்த வகுப்பு எதற்காக நடத்தப்பட வேண்டும், யாரைத் திருப்திப்படுத்த இந்த ஏற்பாடுகளைச் செய்தார்கள் என்று தெரியவில்லை. இந்த வகுப்பை நடத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்திக்கு ஏன் இவ்வளவு ஆர்வம் என்றும் புரியவில்லை. நம் கல்வி சூழலுக்கும் தமிழக அரசு பாடத்திட்டத்துக்கும் துளியும் சம்பந்தமில்லாத இந்தப் பயிற்சி வகுப்பால் ஆசிரியர்களுக்கோ எங்களின் வழியாக மாணவர்களுக்கோ எந்தவித பயனும் இல்லை’’ என்றனர். இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தியிடம் விளக்கம் கேட்டோம்.
``நம் பாரம்பர்யத்தையும் பண்பாட்டையும் பற்றி ஆசிரியர்கள் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பயிற்சி வகுப்பை ஏற்பாடு செய்தோம். ராமாயணம், மகாபாரதம் மட்டுமல்ல, பொதுவான நம் பண்பாட்டைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். நம்முடைய வேர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது’’ என்றார்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews