பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட காளப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஆனந்குமாருக்கு சர்வதேச அமைப்பின் சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.
ஹரியாணா மாநிலம், குருக்ராம் என்ற இடத்தை தலைமை இடமாகக் கொண்டு உலகளவில் ஆசிரியர்கள் நலன், கல்விசார் செயல்பாடுகள், ஆசிரியர்களுக்கு புத்துணர்வு பயிற்சிகள், கருத்தரங்கம், மாநாடு ஆகியவற்றை நடத்திடும் தன்னார்வ தொண்டு நிறுவனமான அலார்ட் நாலேஜ் சர்வீஸ் என்ற உலகளாவிய அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் சிறந்த கல்வியாளர்கள், பள்ளி, கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் தாளாளர்களைத் தேர்வு செய்து குளோபல் ஆசிரியர் என்ற விருதை வழங்கி வருகிறது. நடப்பாண்டில் அனைத்து வகை ஆசிரியர்களிடம் இருந்தும் இவ்விருதினைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
இதற்கு சுமார் 28 நாடுகளைச் சேர்ந்த ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.
அதில் தகுதியான 450 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் ஆனந்தகுமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அண்மையில் தில்லியில் நடந்த சர்வதேச ஆசிரியர்கள் மாநாட்டில் இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது. விருது பெற்ற ஆனந்த குமாரை பெரியநாயக்கன்பாளையம் வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஜெ.பி.கிருஷ்ணமூர்த்தி, சுதா நந்தகுமார், தலைமை ஆசிரியர்கள் வனஜா குமாரி, சுவாமிநாதன் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.