தமிழகத்தைப் போல 7 பாடங்கள் அல்லாமல், வெறும் 5 பாடங்கள் மட்டுமே இருப்பதால் ஆந்திரா, தெலங்கானாவுக்குச் சென்று பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஐஐடி-க்களில் சேர வேண்டும் என்பதற்காக ஆந்திரம், தெலங்கானா சென்று பள்ளிப் படிப்பை மேற்கொள்ளும் கலாசாரம் தமிழகத்தில் தொடர்ந்து பெருகி வருகிறது.
இவ்வாறு பிற மாநிலங்களுக்குச் சென்று பிளஸ்-1, பிளஸ்-2 படித்து வரும் மாணவர்களுக்கு தமிழகத்தில் உயர் கல்வி படிக்க மாநில ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிப்பதற்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்டது.
இதில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்களில் 3 பேர் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை மட்டுமே தமிழகத்தில் படித்துள்ளனர். அதன் பிறகு, இவர்கள் ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் உள்ள பள்ளிகளில் சேர்ந்து பிளஸ்-2 வரை படித்துள்ளனர்.
தமிழகத்தைப் பொருத்தவரை பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு மொத்தம் 6 பாடங்கள் வைக்கப்படுகின்றன. முதல் மொழிப் பாடம், இரண்டாம் மொழிப் பாடம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் என ஆறு பாடங்களை தமிழக மாணவர்கள் படித்தாக வேண்டும். பிளஸ்-2 வகுப்பில் எந்தப் பிரிவை எடுத்தாலும் 6 பாடங்கள்தான்.
ஆனால், ஆந்திரம், தெலங்கானாவில் பெரும்பாலான பள்ளிகள் ஐஐடி சேர்க்கைக்காக முன்னுரிமை அளித்து, அதற்காக பள்ளி பாடத் திட்டத்தையே மாற்றியமைத்துள்ளன. பிளஸ்-2 வகுப்புக்கு வெறும் 5 பாடங்கள் மட்டுமே. ஆதாவது ஆங்கிலம், சமஸ்கிருதம், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய 5 பாடங்கள் மட்டுமே அவர்கள் படிக்கின்றனர். அதிலும், வகுப்பில் பெரும்பாலும் பள்ளி பாடங்கள் நடத்தப்பட மாட்டாது. ஐஐடி நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மட்டுமே நடத்தப்படுகின்றன.
அண்ணா பல்கலைக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்ட பி.இ. தரவரிசைப் பட்டியலில் 8 ஆவது இடம் பிடித்த என்.ஏ.நிஷா, 9 ஆம் இடம் பிடித்த எஸ்.நிதிஷ்குமார், 10 ஆம் இடம்பிடித்த ஏ.ஏ.மணிகண்டன் மூவரும் ஆந்திரத்தில் பிளஸ்-2 வரை படித்துள்ளனர். ஐஐடி-யில் படிக்க வேண்டும் என்ற லட்சியத்தில் இதுபோல ஆந்திரம் சென்று படித்த இவர்களில், மணிகண்டன் மட்டும் மும்பை ஐஐடி-யில் இடம் கிடைத்துச் சேர்ந்துள்ளார். மற்ற இருவரும் கலந்தாய்வில் பங்கேற்று அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரியில் இடத்தைத் தேர்வு செய்ய உள்ளனர்.
பொது அறிவை வளர்க்கும் பாடங்களுக்கு முக்கியத்துவம் அல்லாமல், பொது நுழைவுத் தேர்வு ஒன்றையே மையமாக வைத்து வகுப்புகள் நடத்தப்படும் ஆந்திரத்துக்குச் சென்று பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் கலாசாரம் கடந்த சில ஆண்டுகளாக தமிழக மாணவர்களிடையே பெருகி வருகிறது.
இந்த மாணவர்களுக்கு தமிழத்தில் உயர்கல்வியில் முன்னுரிமை அளிக்கப்படுகின்றபோது, தமிழகத்திலும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பாடங்களின் எண்ணிக்கையை 5-ஆக குறைக்க வேண்டும். இல்லையெனில் ஆந்திரத்தில் படித்து வருபவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் கூறியது:
பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அல்லது, பள்ளிப் படிப்பின் கடைசி 5 ஆண்டுகள் தமிழகத்தில் படித்திருக்க வேண்டும். இல்லையெனில், விண்ணப்பதாரரின் தாய், தந்தையர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகவும், பள்ளிப் படிப்பை அவர் பிற மாநிலங்களில் மேற்கொண்டவராகவும் இருந்தால் இருப்பிடச் சான்றிதழை அவர் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த அரசாணைப் படியே கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது என்றனர்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.