அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தாமல் பேச்சு நடத்த வேண்டும்! அன்புமணி ராமதாஸ் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 09, 2018

Comments:0

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தாமல் பேச்சு நடத்த வேண்டும்! அன்புமணி ராமதாஸ்


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தாமல் பேச்சு நடத்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு அடுத்தக்கட்டமாக நாளை மறுநாள் முதல் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை அறிவித்துள்ளது. அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தமிழக ஆட்சியாளர்கள் ஆண்டுக்கணக்காக எந்த நடவடிக்கையும் எடுக்காதது மிகவும் கண்டிக்கத்தக்கது.

அரசு ஊழியர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தினால், அவர்களை அழைத்து பேச்சு நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவதும், நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளாக இருந்தால் அவை குறித்து அரசு ஊழியர் சங்கத்தினரிடம் விளக்கி சமரசம் செய்வது தான் வழக்கமாகும். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பினாமி அரசு, அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் பேச்சு நடத்துவதற்கு பதிலாக அவர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடும் அணுகுமுறையை கடைபிடித்து வருகிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்; ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்; தொகுப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்; அரசு பணியிடங்களை குறைப்பது குறித்து பரிந்துரைப்பதற்கான குழுவை கலைப்பதுடன், அரசு பள்ளிகளை மூடும் முடிவை கைவிட வேண்டும் ஆகிய 5 கோரிக்கைகளை முன்வைத்து தான் அரசு ஊழியர்கள் -ஆசிரியர்கள் கூட்டமைப்பு போராடி வருகிறது. இந்த கோரிக்கைகள் அனைத்தும் மிகவும் நியாயமானவையாகும்.

ஆனால், இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றும் எண்ணம் தமிழக அரசுக்கு கொஞ்சமும் இல்லை. மாறாக பொய்யான வாக்குறுதிகளை அளித்து அரசு ஊழியர்களை ஏமாற்றும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. உதாரணமாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 15 ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது. கடந்த 2011-ஆம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்தார்.

எனினும், ஐந்தாண்டு ஆட்சியில் அத்திட்டத்தை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காத ஜெயலலிதா, 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில வாரங்கள் முன்பாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிந்துரைக்க சாந்தா ஷீலா நாயர் தலைமையில் குழு அமைத்தார். 6 மாதங்களில் அக்குழு அறிக்கை தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், 30 மாதங்களாகியும் அந்தக் குழு அறிக்கை தாக்கல் செய்யவில்லை. 

அதுமட்டுமின்றி அக்குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற இ.ஆ.ப. அதிகாரி ஸ்ரீதர் நியமிக்கப்பட்டு அதன் பதவிக்காலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவடைந்து விட்ட நிலையில் அக்குழு இப்போது செயல்பாட்டில் உள்ளதா? என்பது கூட தெரியவில்லை. இக்குழுவின் அறிக்கையை விரைவில் தாக்கல் செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும், கண்டனம் தெரிவித்தும் அதை தமிழக ஆட்சியாளர்கள் இன்னும் செவிமடுக்க வில்லை. இது எந்த வகையில் நியாயம்?

மற்ற கோரிக்கைகள் குறித்தும் பேச்சு நடத்த அரசு தயாராக இல்லை. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் கடந்த மாதம் 5-ஆம் தேதி போராட்டம் நடத்திய நிலையில், அவர்களை அழைத்து பேச மறுத்து விட்ட தமிழக அரசு அமைச்சர் ஜெயக்குமார் பெயரில் ஊடகங்களில் விளம்பரம் வெளியிட்டது. அரசு ஊழியர்களுக்கு அள்ளிக் கொடுப்பதால் தான் அரசு கடன் சுமையில் சிக்கியிருப்பதைப் போன்றும், அதனால் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்றும் அந்த விளம்பரத்தில் அரசு கூறியிருந்ததை ஏற்க முடியாது. அதுமட்டுமின்றி, தலைமைச்செயலகத்தை முற்றுகையிடச் சென்ற அரசு ஊழியர்களை பயங்கரவாதிகளாகக் கருதி கடற்கரைச்சாலையில் பல இடங்களில் கம்பி முள்வேலித் தடுப்பு அமைத்து தடுத்தது. பல இடங்களில் பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்களை கைது செய்தது.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews