'ஆதார்' இல்லாத ஆசிரியர்களுக்கு தேசிய விருது கிடையாது!
ஆசிரியர்களுக்கான தேசிய விருது வழங்குவதில், புதிய கட்டுப்பாடுகளை, மத்திய அரசு அறிவித்துள்ளது. 'ஆதார்' இல்லாவிட்டால் விருது கிடையாது; சி.பி.எஸ்.இ., தவிர, மற்ற தனியார் பள்ளிகளுக்கும் விருது இல்லை என, தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஒட்டி, பள்ளி ஆசிரியர்களுக்கு, செப்., 5ல், தேசிய மற்றும் மாநில அளவில் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான தேசிய விருதுக்கு, ஜூன், 15 முதல், 30 வரை, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த ஆண்டு, தேசிய விருது பெறும் நடைமுறைகளில், அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம்:
இதுவரை, மொத்தம், 374 விருதுகள் வழங்கப்பட்டன. அவற்றில், 20 விருதுகள், சமஸ்கிருதம், அரபு மற்றும் பெர்ஷியன் மொழி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த முறை, விருதுகளின் எண்ணிக்கை, 374ல் இருந்து, தேசிய அளவில், 145 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதில், 29 மாநிலங்களுக்கு, 120; ஏழு யூனியன் பிரதேசங்களுக்கு, 8; சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் உள்ள, மத்திய அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, 17 விருதுகள் வழங்கப்படும் தமிழகத்திற்கு, இதுவரை வழங்கப்பட்ட, 22 விருதுகள், ஆறாக குறைக்கப்பட்டுள்ளன.
அரசு மற்றும் அரசு உதவி பள்ளி ஆசிரியர்கள் மட்டும், விருதுக்கு விண்ணப்பிக்கலாம். தனியார் பள்ளிகளில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தமிழக பாடத்திட்டத்தில் உள்ள, சுயநிதி பள்ளிகளும், மெட்ரிக் பள்ளிகளும் விண்ணப்பிக்க முடியாது. அதேபோல், தொடக்கப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என, விருதுகள் பிரிக்கப்படாதுl மாவட்ட பரிந்துரைக் குழுவுக்கு, இதுவரை, முதன்மை கல்வி அதிகாரி தலைவராக இருந்தார்.
இனி, மாவட்ட கலெக்டர் தலைமையில், குழு இயங்கும். மத்திய அரசின், சி.பி.எஸ்.இ., அல்லது கேந்திரிய வித்யாலயாவை சேர்ந்த, ஒருவர் பிரதிநிதியாக இருப்பார்l விண்ணப்பித்த ஆசிரியரின் பள்ளிக்கும், அவர் சார்ந்த இடத்துக்கும் சென்று, மாவட்ட கமிட்டியினர் நேரில் ஆய்வு செய்து, அறிக்கை தர வேண்டும். லஞ்ச ஒழிப்பு அல்லது கண்காணிப்பு துறையின் சான்றிதழையும், ஆசிரியர் பெற வேண்டும்l மாநில கமிட்டிக்கு, இதுவரை, பள்ளிக் கல்வி இயக்குனர் தலைவராக இருந்தார்.
இந்த ஆண்டு, பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர், தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக் கல்வி இயக்குனர், கமிட்டியின் உறுப்பினர் செயலராக மாற்றப்பட்டுள்ளார்l விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள், வகுப்புகளை, 'கட்' அடித்திருக்க கூடாது. ஆசிரியர்களுக்கான பயிற்சிகளில், தவறாமல் பங்கேற்றிருக்க வேண்டும். 'டியூஷன்' என்ற, வணிக ரீதியான கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டிருக்கக் கூடாது. 'ஆதார்' எண் கட்டாயம் இருக்க வேண்டும். ஆதார் இல்லாதவர்கள், விருதுக்கு விண்ணப்பிக்கவே முடியாது.இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.