தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஐஏஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான பயிற்சி மையமும், நடமாடும் நூலகமும் விரைவில் அமைக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் குடும்ப பொருளாதார நிலை காரணமாக உயர்கல்வியில் சேர இயலாத மாணவ, மாணவிகளுக்கு ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி படிக்க விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி.விசுவநாதன் தலைவராக கொண்டு செயல்படும் அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதன்மூலம், கடந்த 6 ஆண்டுகளில் 3,911 மாணவ, மாணவிகளுக்கு ரூ.3.74 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாண்டிற்கான இரண்டாம் கட்ட கல்வி உதவித்தொகை வழங்கும் விழா விஐடியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 1,294 மாணவ மாணவிகளுக்கு ரூ.80 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கி பேசியதாவது, அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளையின் உறுப்பினர்களின் பங்களிப்பை பார்க்கையில் அவர்களின் மனிதநேயத்தை காணமுடிகிறது.
அதேபோல், பயன்பெறும் மாணவர்களின் முகத்தை காணும்போது அவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதை காட்டுகிறது. அறக்கட்டளையின் இந்த பணிகளுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உயர்கல்வியை பொருத்தவரை தமிழகம் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. நாட்டில் உயர்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை 27 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் அதன் அளவு 44.3 சதவீதமாக இருந்தது, தற்போது 47.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒரு கல்விக்கூடம் திறப்பது ஆயிரம் சிறைச்சாலைகளை மூடுவதற்கு சமம் ஆகும். அடித்தட்டு மக்கள் உயர இதுபோன்ற நிகழ்வுகள் மக்களுக்கு தேவைப்படுகிறது.
தமிழகத்தில் பள்ளிக்கல்வியின் தரம் உயர ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சுமார் ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வில் பங்கேற்க நீட் தேர்வு 412 மையங்கள் மூலமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
அடுத்தாண்டு குறைந்தது ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேரும் வகையில் பயிற்சி வழங்கப்படும்.மேலும், மாவட்டந்தோறும் குடிமைப் பணிகளுக்கான பயிற்சி மையமும்,‘நாடமாடும் நூலகமும் விரைவில் அமைக்கப்பட உள்ளது. தவிர, பிளஸ் 2 முடித்தாலே வேலைவாய்ப்பு உறுதி என்ற நிலையை ஏற்படுத்திட பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.
முன்னதாக, அறக்கட்டளை தலைவரும் விஐடி வேந்தருமான ஜி.விசுவநாதன் தலைமை வகித்து பேசியதாவது, நாட்டில் கல்வி வளர்ந்தால் தான் அந்த நாடு வளர்ந்த நாடாக விளங்க முடியும். ஆனால், நம்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் 2.5% சதவீதம் பேர் மட்டுமே உயர்கல்விக்கு செல்லும் நிலை உள்ளது.
இது அமெரிக்காவில் 60 சதவீதமாக விளங்குகிறது. அந்நாட்டை போல நாமும் உயர முடியும். இதற்கு உயர்கல்வி படிக்க தகுதியுள்ள அனைவருக்கும் உயர்கல்வி வழங்கப்பட வேண்டும். இதனை கருத்தில் கொண்டே அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டது.
இந்த அறக்கட்டளை சார்பில் இதுவரை 4158 மாணவ மாணவியருக்கு ரூ.5 கோடி அளவிற்கு உயர் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு அரசு ஊழியர்கள், அலுவலர்கள், ஆசிரியர்கள் உதவ முன்வரவேண்டும். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் தரம் உயர வேண்டும் என்றால் அதற்கு அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். அத்துடன், கல்வியின் தரம் உயர ஆசிரியர் பணியிடத்துக்கு குறைந்தபட்ச தகுதியை நிர்ணயிப்பதுடன், பணியில் சேரும் ஆசிரியர்களுக்கு கடுமையான பயிற்சிகளும் அளித்திட வேண்டும் என்றார் அவர்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.