கோடை விடுமுறை நாள்களை வீணாகக் கழிக்கும் மாணவர்கள் மத்தியில், நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள், ஒரு குறும்படம் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
மயிலாடுதுறை மறையூர் சாலையில் உள்ள எவரஸ்ட் கேம்பிரிட்ஜ் பள்ளியில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 படிக்கும் 6 மாணவர்கள் ஒன்று சேர்ந்து, 27 நிமிடங்கள் ஓடும் 'ஸ்கூலுக்கு டைம் ஆச்சி' என்ற குறும்படத்தைத் தயாரித்துள்ளனர்.
தினந்தோறும் படிக்க வற்புறுத்தும் தனது தந்தைமீது அதிருப்தி அடைந்த மாணவன், தனது தந்தையும் தன்னைப்போல பள்ளிக்கு வந்து தனது துன்பத்தை உணர வேண்டும் என்று கடவுளிடம் வரம் கேட்பதாகவும், அதன்பின் தன் தந்தை படும் சிரமத்தை உணர்ந்து மனம் திருந்தி, தானாகவே அந்த மாணவன் படிக்கத் தொடங்கிவிடுவதாகவும் இந்தக் குறும்படம் அமைந்துள்ளது.
இந்தக் குறும்படத்தை இப்பள்ளியின் மாணவன் ரியாஸ் அகமது இயக்கியுள்ளார். 10-ம் வகுப்பு மாணவன் ரோனக், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தள்ளார்.
மாணவர்கள் அரவிந்த், ஹாசன் ரிலா ஆகியோர் படத் தொகுப்புப் பணியையும், சாய்ராம் கிஷன் என்ற மாணவன் இசை அமைப்பையும் திறம்படச் செய்துள்ளனர்.
இப்படத்திற்கான கதையை விகாஷ் ராஜ் என்ற மாணவன் எழுதியுள்ளார்.
நடிப்பு, இசை, இயக்கம் ஆகிய துறைகளில் தனித் திறமைகொண்ட மாணவர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் பள்ளி படிப்பை மட்டுமே கற்க வற்புறுத்தாமல், அவர்களது தனித் திறமையையும் கண்டறிந்து வளர்க்க முயற்சிக்கும் விதமாகப் பள்ளி நிர்வாகம் இப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளது.
மாணவர்களோடு, இப்பள்ளியின் செயலாளர் அருளா ஆசிரியராகவும், முதல்வர் ரகுநாதன் கடவுளாகவும், மற்ற ஆசிரிய, ஆசிரியைகள் பல்வேறு பாத்திரங்களில் நடித்துள்ளார்கள் என்பது மிகவும் சிறப்பானது.
குறும்படத்தை சிறப்பாக உருவாக்கியுள்ள மாணவர்களுக்குப் பாராட்டு தெரிவித்துள்ள பள்ளி நிர்வாகத்தினர், இக்குறும்படத்தை போட்டிக்கு அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் மத்தியில் இப்படத்திற்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது என்பது இப்படத்தின் பெருமைக்குச் சான்று.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.