பிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டத்தை மாற்றும் பணிகள் நவம்பர் 15-க்குள் நிறைவடையும்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 29, 2017

Comments:0

பிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டத்தை மாற்றும் பணிகள் நவம்பர் 15-க்குள் நிறைவடையும்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தகவல்


பிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டத்தை மாற்றும் பணிகள் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் நிறைவடையும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஈரோடு, திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல் நாடக விழாவை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடக்கிவைத்துப் பேசியதாவது:
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, பள்ளி மாணவ, மாணவிகளுக்காக எண்ணற்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. வேலைவாய்ப்பை உருவாக்கவும், மத்திய அரசு கொண்டு வருகிற அனைத்துத் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் தொலைநோக்குப் பார்வையோடு 412 இடங்களில் பயிற்சி மையங்கள் அமைக்கப்படுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. இனிவரும் கல்வி ஆண்டுகளில் கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களை மாணவ, மாணவிகள் சந்திக்கவுள்ளனர். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் மாணவ, மாணவிகள் தயார்படுத்தப்படுவர்.
மேலும், மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் அட்டை வழங்கப்படவுள்ளது. 244 பாடப் பிரிவுகளில் மாணவ, மாணவிகள் படிக்கும்போது சிறப்பான வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. மனதில் எண்ணுகிற எண்ணங்களை வெளிப்படுத்தும் வகையில் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கு நல்ல முறையில் கல்வியைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

மாநில அளவிலான இந்த அறிவியல் நாடக விழாவில் கலந்துகொள்ள இருக்கும் 32 மாவட்டங்களைச் சேர்ந்த 256 மாணவ, மாணவிகள் சிறப்பாகத் தங்களது நடிப்புத் திறமையையும், சமூதாய சிந்தனையையும் நாடகங்களில் காண்பித்து பங்குபெற வேண்டும்.
விழாவில், இறுதியில் தேர்வு செய்யப்பட்ட 2 சிறந்த குழுக்கள் தென்னிந்திய அளவில் நடைபெறும் அறிவியல் நாடக விழாவில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்படும் என்றார். விழாவில், ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக செயலர் கே.வி.இராமலிங்கம், மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர், ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் செல்வகுமார சின்னையன், எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பான திட்டங்களால் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் விளங்கும். பிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டங்களை மாற்றும் பணிகள் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் நிறைவடைந்துவிடும். பாடத் திட்டங்களை மாற்றி அமைப்பதற்கான குழுவில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி, சிறந்த கல்வியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வரும்போது, அரசுப் பள்ளி ஆசிரியர்கள், பேராசிரியர்களின் குழந்தைகளையும் அரசுப் பள்ளியில் சேர்க்க முன்வரும் நிலை ஏற்படும். கிராமப்புறங்களில் பின் தங்கியுள்ள மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு 31 சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 500-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறுவது தவறான தகவல் என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews