IFHRMS சொத்து விவரம்: அரசு ஊழியர்களுக்கு ஒருமுறை நிவாரணம் மற்றும் கால அவகாசம் கோரி தேசிய ஆசிரியர் சங்கம் கடிதம்!
IFHRMS மூலம் சொத்து விவரங்களை பதிவிடுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை களைய அரசு ஊழியர்களுக்கு ஒருமுறை நிவாரணம் (One Time Relief) மற்றும் கால அவகாசம் வழங்கக் கோரி தேசிய ஆசிரியர் சங்கம் தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளது.
சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது சொத்து விவரங்களை IFHRMS இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்வதில் உள்ள நடைமுறை சிக்கல்களை சுட்டிக்காட்டி, அதற்கு உரிய கால அவகாசம் மற்றும் ஒருமுறை நிவாரணம் (One Time Relief) வழங்க வேண்டும் என தேசிய ஆசிரியர் சங்கம் (தமிழ்நாடு) சார்பில் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அரசு விதிகளும் ஊழியர்களின் எதார்த்த நிலையும்:
தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, அனைத்து அரசு ஊழியர்களும் தங்களது சொத்து கணக்கினை வரும் 31.10.2026-க்குள் IFHRMS மென்பொருள் மூலம் காண்பிக்க வேண்டும் என்ற உத்தரவை தேசிய ஆசிரியர் சங்கம் கொள்கை ரீதியாக வரவேற்றுள்ளது. இருப்பினும், அரசு ஊழியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் இது போன்ற அரசு விதிகள் மற்றும் நடத்தை விதிகள் குறித்த முறையான பயிற்சிகளோ அல்லது வழிகாட்டுதல் கருத்தரங்கங்களோ இதுவரை எந்தவொரு துறையிலும் நடத்தப்படவில்லை என்பதை சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கையிருப்பில் வைத்திருக்க வேண்டிய பணம், கடனாக பெறக்கூடிய தொகை, இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகனம் வாங்குதல், வீடு கட்டுவதற்கு அரசிடமோ அல்லது வங்கியிலோ கடன் பெறுதல், தங்க நகை வாங்குதல் மற்றும் குடும்பத் தேவைகளுக்காக மொபைல் போன், கணினி வாங்குதல் போன்ற அன்றாட அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு கூட யாரிடம் அனுமதி பெற வேண்டும்? சொத்துக்களின் மதிப்பு கூடுதல் மற்றும் தேய்மானம் ஆகியவற்றை எவ்வாறு கணக்கிட வேண்டும்? என்பது குறித்த தெளிவான புரிதல் தற்போதைய அரசு ஊழியர்களுக்கு அரசு தரப்பில் முறையாக வழங்கப்படவில்லை என கடிதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
நடைமுறை சிக்கல்களும் மக்கள் சேவையில் ஏற்படும் பாதிப்பும்:
தற்கால நடைமுறைக்கு ஒத்துவராத மற்றும் சிக்கல்கள் நிறைந்த விதிகளினால், ஊழியர்கள் அனைவரும் இவ்விதிகளை முழுமையாகப் பின்பற்றுவது கடினமாக உள்ளது. விதிகள் என்பது அரசு ஊழியர்கள் நேர்மையாகவும், மன நிறைவுடனும் பணியாற்றுவதற்காக உருவாக்கப்பட வேண்டுமே தவிர, அவர்களை பல்வேறு மன உளைச்சல்களுக்கும் சிக்கல்களுக்கும் உள்ளாக்குவதாக இருக்கக் கூடாது என சங்கம் வலியுறுத்தியுள்ளது.
விதிகள் பற்றிய தெளிவான புரிதல் இன்றி, மாவட்ட அளவிலேயே உரிய அனுமதி பெறாமல் செயல்படும் பட்சத்தில் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் அபாயம் உள்ளது. இதனால் ஒவ்வொரு ஊழியரும் நிம்மதியுடன் பணியாற்ற இயலாத நிலை ஏற்பட்டு, பொதுமக்களுக்கான அரசு சேவைகள் பெருமளவில் பாதிக்கப்படும் சூழல் உருவாகும் என கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஆசிரியர் சங்கம் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்:
இந்த அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு மாநிலக் கிளை சார்பில் பின்வரும் முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன:
- ஒருமுறை நிவாரணம் (One Time Relief): துறை அனுமதி பெறாமல் ஊழியர்களால் வாங்கப்பட்டுள்ள சொத்துக்களுக்கு, மாவட்ட அளவிலான அந்தந்த துறை அலுவலர்களே பின் அனுமதி (Post-facto Approval) வழங்கலாம் என ஒருமுறை நிவாரண அரசாணை பிறப்பிக்கப்பட வேண்டும்.
- கூடுதல் கால அவகாசம்: இந்த ஒருமுறை நிவாரண ஆணை பிறப்பிக்கப்பட்ட பிறகு, ஊழியர்கள் தங்களது சொத்துக் கணக்கினை IFHRMS மூலம் சுமுகமாக காண்பிப்பதற்கு ஏதுவாக உரிய கூடுதல் கால அவகாசம் வழங்கிட வேண்டும்.
இக்கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தின் நகல்கள் தமிழக முதல்வர், பள்ளி கல்வித்துறை அரசு செயலாளர், பள்ளி கல்வித்துறை இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோருக்கும் உரிய நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.