Special TET ( STET ) : பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு ‘டெட்’ தேர்வு: தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 04, 2025

Comments:0

Special TET ( STET ) : பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு ‘டெட்’ தேர்வு: தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்



Special TET ( STET ) : பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு ‘டெட்’ தேர்வு: தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு டெட் தேர்வு நடத்துவதற்கு தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டம் - 2010 ஆக.23-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி அனைத்து விதமான பள்ளிகளிலும் 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பாடம் பயிற்றுவிக்கும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த சட்டம் தமிழகத்தில் 2011-ல் தான் நடைமுறைக்கு வந்தது. அதன்பின் தமிழகத்தில் டெட் தேர்ச்சி அடிப்படையிலேயே ஆசிரியர் பணி நியமனம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பணியில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் டெட் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்வு எழுத விருப்பம் இல்லாதவர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இந்த அறிவிப்பால்

தமிழகத்தில் சுமார் 1.5 லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. மேலும், தனியார் பள்ளிகளிலும் லட்சக்கணக்கான ஆசிரியர்களின் வேலைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, தலைமைச் செயலர் முருகானந்தம் தலைமையில் சென்னையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித் துறை செயலர் சந்திரமோகன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், சட்ட நிபுணர்கள் பரிந்துரையின் அடிப்படையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டாம் எனவும் ஆசிரியர்கள் டெட் தேர்ச்சி பெறுவதற்கு ஏதுவாக ஆண்டுக்கு 2 முறை தேர்வு நடத்தவும் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்ததாவது: உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி 2 ஆண்டுகளில் 4 டெட் தேர்வுகள் நடத்தப்படும். அந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆசிரியர்கள் தேர்ச்சி பெற வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) ஏற்கெனவே வெளியிட்ட அறிவிப்பின்படி வரும் நவம்பரில் டெட் தேர்வு நடைபெற உள்ளது. தொடர்ந்து உடனடியாக ஜனவரி அல்லது பிப்ரவரியில் அடுத்த டெட் தேர்வை நடத்த இருக்கிறோம்.

மேலும், ஆசிரியர்களுக்கு மட்டும் சிறப்பு டெட் தேர்வு நடத்துவது குறித்தும் பரிசீலனை செய்து வருகிறோம். தற்போது வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் திரும்பியதும், இந்த முடிவுகள் குறித்து அவரிடம் ஆலோசனை செய்யப்படும். அதன்பிறகு, இந்த விவகாரத்தில் இறுதி முடிவுகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews