புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதினால் அறிவு எப்படி வளரும்? அமைச்சர் கேள்வி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 16, 2025

Comments:0

புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதினால் அறிவு எப்படி வளரும்? அமைச்சர் கேள்வி

புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதினால் அறிவு எப்படி வளரும்? அமைச்சர் கேள்வி

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில்புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதினால் அறிவு எப்படி வளரும்? என அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் திருச்சி மண்டலம் மூலம் திருச்சி மாநகரின் துவாக்குடி, கே.கே.நகர், ஸ்ரீரங்கம், விமான நிலையம் உள்ளிட்ட வழித்தடங்களில் நேற்று புதிய தாழ்தள சொகுசு பஸ் சேவையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். அப்போது அவரிடம், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 9-ம் வகுப்பு மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம் என்ற புதிய கல்விக் கொள்கை அறிவிப்பு பற்றி நிருபர்கள் கேட்டதற்கு, புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதினால் அறிவை எப்படி வளர்க்க முடியும்? என்று தெரிவித்தார்.

சிபிஎஸ்இ அறிவித்த புதிய விதி என்ன?

மத்திய இடைநிலை கல்வி வாரியம் என்று கூறப்படும் சி.பி.எஸ்.இ. நிர்வாகத்தின் கீழ் நாடு முழுவதும் ஏராளமான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட மாணவ-மாணவிகளுக்கு ஏற்றவாறு பாடத்திட்ட வடிவமைப்பு அவ்வப்போது மேற்கொள்ளப்படுகிறது. நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு பாடத்திட்டங்களும் அதில் இணைக்கப்படுகின்றன. சில தேவையற்ற பாடக்குறிப்புகள் எடுக்கப்படும்போது அது சர்ச்சையாகும் சூழலும் ஏற்படுகிறது. இதேபோல் மாணவர்களின் தேர்வு சுமையை குறைக்கவும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதில் ஒரு பகுதியாக சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவர்கள் ஒரு கல்வி ஆண்டில் இரண்டு முறை அதாவது, ஆண்டின் பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த இரண்டு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவதை இறுதி முடிவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இது மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க உதவும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது 9-ம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு நடைமுறையில் சில மாற்றங்களை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் கொண்டுவந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்தவகையில், 9-ம் வகுப்பில் திறந்த புத்தக மதிப்பீடுகளை ஒருங்கிணைக்கும் புதிய திட்டத்திற்கு சி.பி.எஸ்.இ. வாரியத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும் நிர்வாகக்குழு ஒப்புதல் அளித்து இருப்பதாக சொல்லப்படுகிறது.இந்த நடைமுறையின்படி ஒவ்வொரு பருவத்திலும் முக்கிய பாடங்களான மொழிப்பாடம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகியவற்றை உள்ளடக்கிய எழுத்து தேர்வுகளை புத்தகங்களை பார்த்து எழுத முடியும்.இந்த புதிய நடைமுறை திறன் அடிப்படையிலான கற்றல் மற்றும் அதனை ஊக்குவிப்பது, மனப்பாடம் செய்வதை குறைப்பது போன்ற நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டு இருப்பதாகவும், 2026-27-ம் கல்வியாண்டில் இருந்து நடைமுறைப்படுத்த இருப்பதாகவும் சி.பி.எஸ்.இ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews