கடைசி நேரத்தில் காலை வாரிய தனியார் பள்ளி: கைகொடுத்து 19 பேரை கரை சேர்த்த அரசு பள்ளி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 17, 2025

Comments:0

கடைசி நேரத்தில் காலை வாரிய தனியார் பள்ளி: கைகொடுத்து 19 பேரை கரை சேர்த்த அரசு பள்ளி

கடைசி நேரத்தில் காலை வாரிய தனியார் பள்ளி: கைகொடுத்து 19 பேரை கரை சேர்த்த அரசு பள்ளி

பட்டுக்கோட்டை அருகே சிபிஎஸ்இ அங்கீகாரம் இல்லாத பள்ளியால், கடைசி நேரத்தில் தேர்வுக்கான ஹால்டிக்கெட் கிடைக்காமல் தவித்துநின்ற 19 மாணவர்கள், பின்னர் மாவட்ட ஆட்சியரின் முயற்சியால் அரசுப் பள்ளியில் சேர்ந்து படித்து தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நடுவிக்காட்டில் உள்ள பிரைம் என்ற சிபிஎஸ்இ பள்ளியில் 16 மாணவர்கள், 3 மாணவிகள் என 19 பேர் இந்த கல்வியாண்டில் 10-ம் வகுப்பு படித்தனர். ஆனால், தேர்வு நெருங்கியும் அவர்களுக்கு ஹால்டிக்கெட் வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் பள்ளியை அணுகியபோது, அந்தப் பள்ளிக்கு அங்கீகாரம் இல்லாதது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள், தங்களது பெற்றோருடன் கடந்த பிப். 14-ம் தேதி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து, ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜத்தை சந்தித்து முறையிட்டனர். இதையடுத்து, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் அதிகாரிகளிடம் பேசி, சிறப்பு விதிகள் பெற்று, 19 மாணவர்களையும் பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சேர்த்து, மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் தேர்வெழுத மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்தார்.

இதையடுத்து, அவர்களுக்காக பட்டுக்கோட்டை அரசுப் பள்ளியில் கடந்த பிப். 19-ம் தேதி முதல் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. பின்னர் மார்ச் 28-ம் தேதி தொடங்கிய 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை 19 மாணவர்களும் எழுதினர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், தேர்வெழுதிய எழுதிய 19 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ்.சதீஷ்குமார் கூறும்போது,

"தேர்வுக்கு ஒரு மாதமே இருந்த நிலையில், பள்ளியில் சேர்ந்த 19 மாணவர்களுக்கும் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டன. ஆரம்பத்தில் மாணவர்களிடம் தடுமாற்றம் இருந்தது. ஆனால், ஒரு மாதத்தில் பாடங்களை நன்கு படித்து 19 மாணவர்களும் தேர்வெழுதி வெற்றிபெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. இவர்களில் ஒரு மாணவர் 422 மதிப்பெண்ணும், மற்றொரு மாணவர் 403 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர். இதற்காக பாடுபட்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது" என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews