அரசு பள்ளிகளுக்கு இணைய சேவை கட்டணம் 40 சதவீதம் குறைப்பு: உள்ளாட்சிகளுக்கு திடீர் டார்கெட் 40 percent reduction in internet service fees for government schools: A sudden target for local governments
தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படும் இணைய சேவை கட்டணம் 40 சதவீதம் குறைக்கப்பட்டது. இம்மாதம் முதல் அக்கட்டணம் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் வழங்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.
மாநிலத்தில் 37,553 அரசு தொடக்க, நடு, உயர், மேல் நிலைப் பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள், உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் (ஹைடெக் லேப்) செயல்பாட்டில் உள்ளன. இவை இல்லாத பள்ளிகளுக்கும் இவ்வசதி ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கான இணைய சேவையை பி.எஸ்.என்.எல்., வழங்குகிறது.
இதற்கான தொடக்க பள்ளிகளுக்கு 50 எம்.பி.பி.எஸ்., நடு, உயர், மேல்நிலை பள்ளிகளுக்கு 100 எம்.பி.பி.எஸ்., அளவிலான இணைய வேகம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்காக சமக்ரா சிக் ஷா திட்டம் (தற்போது ஒருங்கிணைந்த கல்வி திட்டம்) சார்பில் பள்ளிகளுக்கு மாதம் தலா ரூ.1500 இணைய சேவை கட்டணம் வழங்கப்பட்டது.
ஆனால் தற்போது இக்கட்டணத்தில் 40 சதவீதம் குறைக்கப்பட்டு ரூ.900 ஆக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப இணைய வேகமும் குறைக்கப்பட்டுள்ளது. இக்கட்டணத்தை உள்ளாட்சி அமைப்புகள் (ஊரக, நகராட்சி, மாநகராட்சி) செலுத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. பாதிப்பை ஏற்படுத்தும்
இதுகுறித்து தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
கிராமப்புறங்களில் அதிக பள்ளிகள் உள்ளன. அங்கு பி.எஸ்.என்.எல்., இணைப்பு வசதி இல்லை. ஆனால் அந்த இணைப்பு தான் கொடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகிறது. பி.எஸ்.என்.எல்., சேவை இல்லாத கிராம பள்ளிகளில் வேறு நிறுவனத்தின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதற்காக நிறுவுதல் கட்டணமாக ரூ.5 ஆயிரத்திற்கும் மேல் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மாற்ற வேண்டும் என்கின்றனர். அதேநேரம் மாதாந்திர கட்டணமும் ரூ. 900 ஆக குறைத்துள்ளதும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனால் இணைய வேகம் குறைந்து ஹெடெக் லேப்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள் செயல்பாடு முடங்கும். மத்திய அரசு நிதி இல்லாததால் இதுபோன்ற கட்டண குறைப்பை தமிழக அரசு மேற்கொண்டுள்ளதா என கேள்வி எழுகிறது. இதனால் பாதிப்பு மாணவர்களுக்கு தான் என்றனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.