பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்க கோரி பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் பதிவுமூப்பு அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர் பணி வழங்கக்கோரி சென்னையில் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பதிவுமூப்பு அடிப்படையில் பட்டதாரிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர் பணி வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு பாதிக்கப்பட்ட பதிவுமூப்பு வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை எழும்பூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் ஏ.பால்செல்வன் தலைமை தாங்கினார். 50-க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் இதில் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டம் குறித்து சங்கத்தின் தலைவர் ஏ.பால்செல்வன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: படித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு வேலை கிடைக்காமல் இருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது. டெட் தேர்வு புதிதாகபட்டம் முடித்த இளைஞர்களுக்கு நல்வாய்ப்பை வழங்கும். ஆனால் 45 வயதுகளை கடந்து களத்தில் நிற்கும் எங்களை போன்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு அது கடினமான ஒன்று. இந்த முறையால் இன்றைக்கு நிர்க்கதியான சூழ்நிலையில் நாங்கள் நிற்கிறோம். எங்களது குடும்பங்கள் பொருளாதாரத்தில் தத்தளித்து கொண்டிருக்கின்றன. சிறப்பாசிரியர்களுக்கு எழுத்துத் தேர்வு பொருத்தமற்றது.
எனவே, சிறப்பு தேர்வு இன்றி கடந்த 2013-ம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் பதிவு மூப்பின்படி வெளியிட்ட உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு நிரப்ப வேண்டும். இதையொட்டி அனைத்து நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்தகட்டமாக சாகும்வரைஉண்ணாவிரதம் முன்னெடுக்கப்படும் என்று கூறினார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.