அரசாணை 243 !? கற்பனையும்!! கள நிலவரமும்!!! - சி.சந்திரகுமார், தொண்டாமுத்தூர். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 13, 2024

Comments:0

அரசாணை 243 !? கற்பனையும்!! கள நிலவரமும்!!! - சி.சந்திரகுமார், தொண்டாமுத்தூர்.

அரசாணை 243 !? கற்பனையும்!! கள நிலவரமும்!!! - சி.சந்திரகுமார், தொண்டாமுத்தூர்.

அரசாணை 243 ன் படி தொடக்கக்கல்வித் துறையில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பணியில், பதவியில் சேர்ந்த தேதிப்படி மாநில முன்னுரிமை வழங்கப்படும்.

கற்பனைகள்

1) 19 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் இருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் சுமார் 12,000 பேருக்கு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கிடைக்கும். (நடுநிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 6000.)

2) பதவி உயர்வு இல்லாமல் இருக்கக்கூடிய மூத்த இடைநிலை ஆசிரியர்கள் அனைவருக்கும் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கிடைக்கும்.

3) பணி மாறுதலில் சொந்த ஒன்றியங்களுக்கு /சொந்த மாவட்டங்களுக்கு செல்ல முடியும்.

4) இடைநிலை ஆசிரியர்களுக்கு துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் என மூன்று பதவி உயர்வுகள் கிடைக்கும். 5) துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் என இரண்டு பதவி உயர்வுகள் கிடைக்கும்.

6) மாநில முன்னுரிமையின் மேற்படி அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்மை ஏற்படும்.

கள நிலவரம்

1) சுமார் ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு 1:5 என்ற விகிதத்தில் சுமார் 5000 பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்வார்கள்.

ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒன்று அல்லது இரண்டு காலிப் பணியிடங்கள் இருக்கும். முன்னுரிமை பட்டியலில் அந்தந்த ஒன்றியங்களில் முதல் இரண்டு இடங்களில் இருப்பவர்களுக்கு அந்த ஒன்றியத்தில் செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும். அருகிலுள்ள ஒன்றியங்களை சேர்ந்தவர்கள் அந்த பணியிடங்களை தேர்வு செய்தால் அவர்களுக்கும் கிடைக்காது மீதி உள்ளவர்கள் அனைவரும் பிற ஒன்றியங்கள் அல்லது பிற மாவட்டங்களை தேர்வு செய்ய வேண்டும்.

இந்த ஆயிரம் காலிப்பணியிடங்களும் பூர்த்தி செய்யப்படும் வரை கலந்தாய்வு நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் மற்றவர்கள் வேண்டாம் என்று எழுதிக் கொடுக்க வேண்டும். அப்படி எழுதிக் கொடுத்தால் மூன்று ஆண்டுகள் பதவி உயர்வில் செல்ல முடியாது.

இந்த ஐந்தாயிரம் பேரில் பெரும்பாலானவர்கள் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்தால் அதற்கு பின்னால் உள்ளவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வு நீண்டு கொண்டு செல்லும். கடைசி காலிப்பணியிடம் முடியும் வரை அனைத்து ஆசிரியர்களும் அழைக்கப்படுவார்கள் வேண்டியவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். வேண்டாம் என்பவர்கள் பதவி உயர்வு வேண்டாம் என எழுதிக் கொடுக்க வேண்டும். இதனால் பதவி உயர்வு பெரும்பாலான மூத்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.

2) துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியலில் முதலில் உள்ளவர்களுக்கு அந்த ஒன்றியங்களில் கிடைக்கலாம். மற்றவர்கள் பிற ஒன்றியங்கள்/ மாவட்டங்களை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்படுவதால் அனைவருமே வேண்டாம் என்று சொல்லக்கூடிய நிலை தான் ஏற்படும் எனவே மூத்த ஆசிரியர்கள் யாரும் பதவி உயர்வில் செல்ல வாய்ப்பில்லை.

பதவி உயர்வு கிடைத்தால் எங்கு வேண்டுமானாலும் செல்லத் தயாராக இருப்பவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். (ஒரு ஊதிய உயர்வு கூடுதலாகக் கிடைக்கும்.)

3) பெரும்பாலான துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவரும் தமிழ் அல்லது வரலாறு பாடம் மட்டுமே முடித்துள்ளனர் எனவே பட்டதாரி ஆசிரியர்களாக செல்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு பட்டதாரி ஆசிரியர் பணியிடம் 95% நேரடி நியமனம் மூலம் மட்டுமே நடைபெறும்.

3) இடைநிலை ஆசிரியர்களுக்கு, துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் பணி ஓய்வின் காரணமாக ஏற்படும் காலிப் பணியிடத்திற்கு மட்டுமே (துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் செல்வதற்கான வாய்ப்பு குறைவு) வழங்கப்படும். எனவே பதவி உயர்வு எண்ணிக்கை மிகவும் குறைவாக தான் இருக்கும்.

4) பணி மாறுதல் கலந்தாய்வில் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியராகவும் பட்டதாரி ஆசிரியராகவும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகவும் பிற ஒன்றியங்கள் மாவட்டங்களுக்கு செல்லலாம் என்ற வாய்ப்பு இருந்தாலும் மாநில முழுவதும் ஒரு சிலருக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும், மற்றவர்கள் அனைவரும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை தான் ஏற்படும். 5) பதவி உயர்வில் தொலை தூரங்களுக்கு யாரும் செல்ல விருப்பமில்லாத சூழ்நிலை ஏற்பட்டால், இனி வரும் காலங்களில் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் போன்ற பணியிடங்களும் கூட நேரடி நியமனம் மூலம் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது (தனியார் பள்ளிகளில் உள்ளது போல்)



6) நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியலில் 2006 க்கு முன்னர் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆனவர்களும் பட்டதாரி ஆசிரியர்களும் உள்ளனர்.



2006 க்கு பின்னர் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றவர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பின்னால் தான் முன்னுரிமைப் பட்டியலில் இருப்பார்கள்.

தற்போதைய சூழலில் மாநிலம் முழுவதும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியலில் பட்டதாரி ஆசிரியர்கள் தான் அதிகமாக உள்ளனர் அவர்கள் அந்தந்த ஒன்றியங்களில் பதவி உயர்வு பெரும் வாய்ப்பு இந்த அரசாணையால் பறிக்கப்பட்டுள்ளது.

பதவி உயர்வு என்பது குளம் வற்றும் வரை காத்திருந்து மீன்பிடித்த கதை தான்...

_சி.சந்திரகுமார்

தொண்டாமுத்தூர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews