உள்ளாட்சிகளில் 2534 பணியிடங்களை TNPSC மூலம் நிரப்ப இராமதாசு வலியுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 16, 2023

Comments:0

உள்ளாட்சிகளில் 2534 பணியிடங்களை TNPSC மூலம் நிரப்ப இராமதாசு வலியுறுத்தல்



உள்ளாட்சிகளில் 2534 பணிகளை நேரடியாக நிரப்புவது ஊழலுக்கே வழிவகுக்கும்: டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்ப வேண்டும்! - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல்.

தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகத்துறையில் உள்ள 2534 தொடக்க நிலை பணிகளை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக அல்லாமல், நகராட்சி நிர்வாகத்துறை மூலமாக நேரடியாக தேந்தெடுக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. எந்த நோக்கத்திற்காக உள்ளாட்சிகள், பொதுத்துறை அமைப்புகளின் பணியாளர்களை டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டதோ, அதற்கு எதிராக தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த நிலைப்பாடு முறைகேடுகள் நடப்பதற்கே வழிவகுக்கும். நகராட்சி நிர்வாகத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் 20 மாநகராட்சிகள் மற்றும் 138 நகராட்சிகளில் 2534 தொடக்க நிலை பணியிடங்கள் காலியாக உள்ளன. இவை அனைத்தும் டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட வேண்டும். ஆனால், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல், நகராட்சி நிர்வாகமே, சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மூலம் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்க முடிவு செய்திருக்கிறது. அதற்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணை கடந்த 14&ஆம் நாள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்த முடிவு முற்றிலும் தவறானது. தமிழ்நாட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள சில குறிப்பிட்ட வகை பணியாளர்களை அந்தந்த நிறுவனங்களே தேர்ந்தெடுக்கும் நடைமுறை தான் இருந்து வந்தது. ஆனால், இத்தகைய நடைமுறையில் ஊழல்கள் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாகக் கூறி, இனிவரும் காலங்களில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் பணியாளர்களும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகவே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்தது. அதற்கான சட்டமும் கடந்த 2021 திசம்பர் மாதத்தில் நிறைவேற்றப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்களை, அந்த அமைப்புகளே தேர்ந்தெடுத்தால் நியாயமாக இருக்காது; ஊழல்களும், முறைகேடுகளும் நடைபெறலாம் என்பதால் தான், அவர்களை போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யும் பொறுப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால், இப்போது அந்தப் பொறுப்பு மீண்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கே வழங்கப்பட்டிருக்கிறது என்றால், அதன் நோக்கம், தமிழக அரசு ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல, ஊழல் செய்வதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் பணியாளர்களை நகராட்சி நிர்வாகத்துறையே தேர்வு செய்யும் போது, அதில் முறைகேடுகள் நடக்கக்கூடும் என்று நம்புவதற்கு பல காரணங்கள் உள்ளன.

நகராட்சி நிர்வாகத்துறைக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் 2534 பேரும் தொடக்க நிலை பணியாளர்கள் ஆவர். டி.என்.பி.எஸ்.சி மூலம் பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் போது முதல் தொகுதி பணிகளுக்கும், இரண்டாம் தொகுதி பணிகளுக்கும் மட்டுமே நேர்முகத்தேர்வு நடத்தப்படும். தொடக்க நிலை பணிகளுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படாது. அந்த வழக்கத்திற்கு மாறாக நகராட்சி நிர்வாகத்துறை தொடக்க நிலை பணிகளுக்கு நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதன் நோக்கமே, அதில் ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களுக்கு அதிக மதிப்பெண்களை வழங்கி, அவர்களின் தேர்ச்சியை உறுதி செய்வது தான். இதை எவரும் மறுக்க முடியாது. மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கான பணியாளர்களை தாங்களே நேரடியாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில், நகராட்சி நிர்வாகத்துறை காட்டும் ஆர்வமும், துடிப்பும் இதை உறுதி செய்கிறது. நகராட்சி நிர்வாகத்துறை பணியாளர்களை நேரடியாக தேர்ந்தெடுப்பதற்கான அரசாணை கடந்த நவம்பர் 14-ஆம் நாள் தான் வெளியிடப்பட்டது. அதனடிப்படையிலான அடுத்தக்கட்ட பணிகள், அதற்குப் பிறகு தான் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், அரசாணை வெளியிடப்படுவதற்கு முன்பாகவே, அக்டோபர் 3&ஆம் நாள் நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் சிவராசு முன்னிலையில் நடைபெற்ற நகராட்சி நிர்வாகத் துறை கூட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை தீர்மானிக்க குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அரசாணைக்கு முன்பே நகராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில் அவசரம் காட்ட வேண்டியத் தேவை என்ன?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்த வேண்டிய போட்டித் தேர்வை நகராட்சி நிர்வாகத் துறையே நடத்துவதற்கு எந்த நியாயமான காரணங்களும் இல்லை. அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுக்கு 10 ஆயிரம் பணியாளர்களைக் கூட தேர்ந்தெடுப்பதில்லை; அதனால், அதற்கு பணிச்சுமை கிடையாது. அதற்கெல்லாம் மேலாக, அண்ணா பல்கலைக்கழகம் என்பது ஒரு கல்வி நிறுவனம். அரசு ஊழியர்களை போட்டித்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கும் கட்டமைப்போ, அனுபவமோ அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கிடையாது. அவ்வாறு இருக்கும் போது, டி.என்.பி.எஸ்.சியை ஒதுக்கி வைத்து விட்டு, அனுபவமே இல்லாத அண்ணா பல்கலைக்கழகம் மூலம் பணியாளர்களை தேர்ந்தெடுக்க நகராட்சி நிர்வாகம் துடிக்கிறது என்றால், அதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகத் தான் தோன்றுகிறது.

அரசுத்துறை, பொதுத்துறை மற்றும் உள்ளாட்சிகளில் வேலைவாய்ப்புகள் வெகுவாக குறைந்து விட்ட நிலையில், அப்பணிகளுக்கான ஆள்தேர்வு நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட்டு, தகுதியான தேர்வர்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டும். அதன்படி, நகராட்சி நிர்வாகத்துறைக்கு 2534 பேரை தேர்வு செய்வதற்கான போட்டித்தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாகவே நடத்த வேண்டும். இந்த பணிகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews