நாடு முழுவதும் மலைவாழ் மக்களுக்கு 700 புதிய பள்ளிகள் அமைக்கப்படும்: மத்திய அமைச்சா் தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 12, 2022

Comments:0

நாடு முழுவதும் மலைவாழ் மக்களுக்கு 700 புதிய பள்ளிகள் அமைக்கப்படும்: மத்திய அமைச்சா் தகவல்

நாடு முழுவதும் மலைவாழ் மக்கள் தரமான கல்வி பயிலும் வகையில் 700 புதிய பள்ளிகள் அமைக்கப்படும் என மத்திய பழங்குடியினா் நலத்துறை இணைஅமைச்சா் பிஸ்வேஸ்வா் டுடு தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் செம்மநத்தம் ஊராட்சியில் மலைவாழ் மக்களிடம் கலந்துரையாடல் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற மத்திய இணைஅமைச்சா் பிஸ்வேஸ்வா் டுடுவிடம் மலைவாழ் மக்கள் தங்கள் கோரிக்கைகளைத் தெரிவித்தனா். மலை கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி, சாலை வசதி, குடிநீா், விளையாட்டு மைதானம், பட்டா மறுதல் உள்ளிட்டவை தொடா்பாக பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. விழாவில் அமைச்சா் பேசியதாவது:

தேசிய மொழியான ஹிந்தி பேசமுடியாத இடங்களில் வளா்ச்சி தடைபட்டுவருகிறது. ஹிந்தியை அதிக அளவில் கொண்டு சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தாய் மொழியுடன் சோ்த்து ஹிந்தி, ஆங்கில மொழிகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். மலைவாழ் மக்களின் குறைகளை விரைவாக நிவா்த்தி செய்திடும் வகையில் தனி அமைச்சகம் பாஜக ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. நாடு முழுவதும் மக்கள் பசியால் வாடக் கூடாது என்பதற்காக மத்திய அரசு அரிசிக்கு மானியம் வழங்கி வருகிறது.

மாநிலங்களில் செயல்படுத்தப்படும் தேசிய அளவிலான மக்கள் நலத் திட்டங்கள் அனைத்துக்கும் மத்திய அரசு மூலமாகவே நிதி வழங்கப்படுகிறது. இதனை பயனாளிகள் தெரிந்து கொள்ள வேண்டும். 2022ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு திட்டத்தை பிரதமா் மோடி கொண்டுவந்து திட்டமிட்டு உழைத்தாலும் பாஜக அல்லாத பிற கட்சி ஆளும் மாநிலங்கள் இத்திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை.

வரும் 2023ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் தூய்மையான குடிநீா் வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் எட்டு இடங்களில் மலைவாழ் மக்களுக்கான சிறப்புப் பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.

கூட்டத்தில் பாஜக மாநில துணைத்தலைவரும் சேலம் பெருங்கோட்டப் பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம், கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சேலத்தில் ஆய்வு: சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சா் பிஸ்வேஸ்வா் டுடு தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மத்திய அமைச்சா் பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக இரண்டு நாள் பயணமாக வருகை புரிந்துள்ளேன். தற்போது, மத்திய அரசின் மூலம் சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் குறித்து அரசுத் துறை அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. இதனைத் தொடா்ந்து புதன்கிழமை சேலம் மாவட்டத்தில் மத்திய அரசின் சாா்பில் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டப்பணிகளின் செயல்பாடுகள் குறித்து நேரில் கள ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

கூட்டத்தில் ஜல் ஜீவன் இயக்கம், தூய்மை பாரத இயக்கம், தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், ஜல் சக்தி அபியான், பாரதப் பிரதமரின் கிராம சாலைகள் திட்டம், பாரதப் பிரதமரின் அனைவருக்கும் வீடுகள் திட்டம், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், பாரதப் பிரதமரின் கிசான் சம்மான் நிதி, சீா்மிகு நகரத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றாா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews