செயற்கை கோளுக்கு மென்பொருள் அரசு பள்ளி மாணவிகள் சாதனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 05, 2022

Comments:0

செயற்கை கோளுக்கு மென்பொருள் அரசு பள்ளி மாணவிகள் சாதனை

நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) சார்பில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் உள்ள 75 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. வான்வெளி அறிவியலில் பெண்களின் பங்கேற்பை கவுரவிக்கும் வகையில் முற்றிலும் மாணவிகள் மட்டுமே செயற்கைக்கோள் மென்பொருட்கள் தயாரிப்பதற்கு தேர்வு செய்யப்பட்டனர். ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா சார்பில் 75 பள்ளிகளை சேர்ந்த, 750 மாணவிகள் தேர்வாகியுள்ளனர். இதில் மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவிகள் பவதாரணி, ஏஞ்சல், கவுரி, ஹரி வைஷ்ணவி, ஜெய்ரின் இருதயா, யசோதாதேவி, பத்மினி, அத்சாராணி, சுவேதா, பிருந்தா ஆகிய 10 பேர் தேர்வாகினர். இஸ்ரோ சார்பில் செயற்கைக்கோளின் ஒரு பாகம் தயாரிக்க ‘சிப்’ அனுப்பி, வீடியோ கான்பரன்ஸ் மூலம் விஞ்ஞானிகள் ஆலோசனை வழங்கினர். 5 மாதத்தில் இந்த பணியை மாணவிகள் சிறப்பாக செய்து முடித்தனர். அவர்கள் தயார் செய்த மென்பொருள் இஸ்ரோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து வரும் 7ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் செயற்கைக்கோள் விண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இதில் பங்கேற்க மாணவிகள் 10 பேரும் இன்று சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு செல்கின்றனர். தகவல் அறிந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, நேற்று இப்பள்ளிக்கு நேரில் சென்று சாதனை மாணவிகளுக்கு சால்வை அணிவித்து திருக்குறள், ராஜராஜசோழன் வரலாறு உள்ளிட்ட புத்தகங்களை பரிசாக வழங்கினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews