மும்மொழி கொள்கை - பிள்ளைகள் சாபம் உங்களை சும்மா விடாது! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 27, 2022

Comments:0

மும்மொழி கொள்கை - பிள்ளைகள் சாபம் உங்களை சும்மா விடாது!

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு அனுப்பிய கடிதம்:



எஸ்.மணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அர்ஜுன் பிரதாப் யாதவ். மத்திய அரசின் சுகாதார துறையில் பணியாற்றும் இவர், 10 ஆண்டுகளுக்கு முன், சென்னைக்கு மாறுதலாகி, இங்கு செட்டிலாகி உள்ளார்.



அவர் கூறுவதாவது... என் மனைவியும், மத்திய அரசின் சுகாதார துறையில் தான் பணியாற்றுகிறார். எங்கள் தாய் மொழி ஹிந்தி. நானும், என் மனைவியும், சென்னையில் வசிக்கும் 10 வருடங்களில், தட்டுத் தடுமாறி தமிழ் மொழியை கற்றுள்ளோம். இன்று தமிழில் கடிதம் எழுதும் அளவுக்கு தேறி இருக்கிறோம். ஆனால், எங்கள் பிள்ளையின் எதிர்காலத்தை நினைத்தால் நெஞ்சம் பதறுகிறது. நாடு முழுவதும் பல மாநிலங்களில், தாய் மொழி, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி என, மும்மொழி கொள்கை அமலில் உள்ளது. ஆனால், தமிழகத்தில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தவே கூடாது என, அரசியல் கட்சிகள் பிடிவாதமாக உள்ளன. நடப்பு கல்வியாண்டில், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, தமிழக கல்வித் துறை சார்பில், மாவட்ட அளவில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுத் தேர்வில், மூன்றாவது தேர்வாக, விருப்ப மொழி பாடத்தேர்வு இணைக்கப்பட்டு உள்ளது.

மூன்றாவது மொழி என்றால், ஹிந்தி, உருது, சமஸ்கிருதம் என, எந்த மொழியாகவும் இருக்கலாம் என்ற செய்தியை பத்திரிகையில் படித்து பரவசமானோம். அரசு பள்ளியில் சேர்த்தால், நாங்கள் பெற்ற பிள்ளையும், தமிழ், ஆங்கிலத்துடன், தாய்மொழியான ஹிந்தியையும் கற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று மகிழ்ந்தோம்.

ஆனால், எங்கள் எண்ணத்தில் இடியை இறக்கியது போல, மாநில கல்வி அமைச்சர் மகேஷ், 'மூன்றாவது மொழி என்றால், அது உருது, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் தானே தவிர, ஹிந்தியோ, சமஸ்கிருதமோ அல்ல' என்று கூறியுள்ளார். எங்கள் பிள்ளையை கேந்திரிய வித்யாலயாவில் சேர்த்து ஹிந்தி கற்பிக்கலாம். ஆனால், அந்தப் பள்ளி நாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் இல்லை. நானும், என் மனைவியும் வேலைக்கு செல்பவர்கள் என்பதால், நாங்கள் நேரத்துக்கு புறப்படுவதே பெரும்பாடு. இதில், பிள்ளையை பள்ளியில் கொண்டு போய் விட்டு விட்டு, வேலைக்கு செல்வது சாத்தியமில்லாதது. தமிழக அரசையும், கல்வி அமைச்சரையும் நான் கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்று தான்... அரேபிய நாட்டு மொழியான உருதுவை விட, உங்களுக்கு ஹிந்தி மொழி, கேவலமாகவும், ஏளனமாகவும் போய் விட்டதா?

ஹிந்தி எங்கள் தாய் மொழி என்றாலும், இங்கு வந்த 10 ஆண்டுகளில், நாங்கள் தமிழ் கற்றிருக்கும் போது, எங்களின் பிள்ளை மட்டும், தாய்மொழியான ஹிந்தியை கற்கவே கூடாது என, தடை உத்தரவு போட உங்களுக்கு வெட்கமாக இல்லையா? இறந்த காலம், நிகழ்காலம் மட்டுமின்றி, எதிர்கால சந்ததியையும் கெடுத்தே தீருவோம் என, கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறீர்களே... அதனால், உங்களுக்கு என்ன பேரும், புகழும் கிடைத்து விட்டது?

எங்களை போன்றவர்களின் பிள்ளைகள் சாபம் உங்களை சும்மா விடாது. இவ்வாறு அவர் கூறுகிறார். இவரைப் போன்றவர்களின் புலம்பல்கள் தீருவது எப்போது? திராவிட ஆட்சியாளர்கள் திருந்துவது எப்போது?

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews