பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்துக்கு..பெற்றோரே... வாங்க! வீடுவீடாக சென்று ஆசிரியர்கள் அழைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 19, 2022

Comments:0

பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்துக்கு..பெற்றோரே... வாங்க! வீடுவீடாக சென்று ஆசிரியர்கள் அழைப்பு

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பள்ளி மேலாண்மை குழு சார்ந்த பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நாளை (20ம் தேதி) நடக்கிறது. இதற்காக, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுடன் இணைந்து அழைப்பிதழ் வழங்கி பெற்றோருக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.பள்ளியின் முன்னேற்றத்திற்காகவும், பள்ளி வளர்ச்சிக்கு துணை நிற்கவும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம், 2009ன்படி பள்ளி மேலாண்மை குழு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பள்ளி மேலாண்மை குழுக்களை மறு கட்டமைப்பு செய்வது அவசியமாகிறது. மாநிலம் முழுவதும் பள்ளி மேலாண்மை குழுக்களை மறு கட்டமைப்பு செய்ய அரசு முடிவெடுத்துள்ளது.பள்ளி மோலண்மை குழுக்களுக்கு, பெற்றோர்களில் இருந்து, 15 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதில் ஒளிவுமறைவற்ற முறை பின்பற்றப்பட வேண்டும்.பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களை பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதையும் படிக்க | கல்வித்துறையில் அனுதினம் அதிகரிக்கும் இன்னல்கள்! ஆசிரிய இயக்கங்களின் கூட்டு மவுனத்தால் அதிருப்தியில் ஆசிரியர்கள்!!

பெற்றோர் தலைவராகவும், துணை தலைவர் மற்றும் உறுப்பினர்களாக யாரை நியமிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.மொத்தம் உள்ள, 20 உறுப்பினர்களில், 15 உறுப்பினர்கள் பெற்றோர்களாகவும், அதில் குறைந்தபட்சம், 10 பெண் உறுப்பினர்கள் கட்டாயமாக இடம் பெற்று இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம், கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கல்வி மாவட்ட அலுவலர் ராஜசேகரன் கூறியதாவது: பள்ளி மேலாண்மை குழு சார்ந்த பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நாளை (20ம் தேதி) நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு முறையாக பெற்றோர்களை அழைக்க வேண்டும்.

வருகை பதிவேடு முறையாக பின்பற்றப்பட வேண்டும்.

கூட்டம் நடத்தும் போது, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

பள்ளி வளாகத்தில் கூட்டம் நடக்கும் இடம், கழிப்பிடம் உள்ளிட்ட இடங்களை குறிக்கும் வகையில், பதாகைகள் வைக்க வேண்டும்.பள்ளிகளில் இடவசதிக்கேற்ப, வகுப்புகள் வாரியாக பிரித்து அல்லது ஆண், பெண் என தனித்தனியாக வைத்து கூட்டம் நடத்தலாம்.

இதையும் படிக்க | SMC - கூட்டம் நடத்த தேவையான விழிப்புணர்வு வீடியோக்கள்!

இந்த குழுவின் பணிகள், எதற்காக இந்த குழு அமைக்கப்படுகிறது என்பது குறித்து பெற்றோரிடம் விளக்கமளிக்க வேண்டும்.பெற்றோரின் மொபைல் எண்கள் மற்றும் முகவரி சேகரிக்க வேண்டும்.

ஏப்., மாதத்தில் பள்ளி மேலாண்மை குழு தேர்தல் நடப்பது குறித்து தெரிவிக்க வேண்டும். இக்கூட்டத்துக்கு பெற்றோரை முறையாக அழைக்க வேண்டும்.

அரசு பள்ளியில் தரமான கல்வியை உறுதி செய்யவும், அரசு பள்ளிகளில் சேர்க்கையை அதிகரித்து, வசதிகளை மேம்படுத்துவதில், இக்குழுவின் பங்களிப்பு மிக முக்கியம் என்பதை தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார். நம் பள்ளி, நம்பெருமை!

மண்ணுார், கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், பெற்றோரிடம் பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.

கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகள், கடைகள், ரேஷன் கடைகளுக்கும், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி மாணவர்கள், ஆசிரியர்கள் சென்று, 'நம் பள்ளி, நம்பெருமை' என்ற அழைப்பிதழை, பெற்றோரிடம் வழங்கினர். பள்ளி தலைமையாசிரியர் தினகரன், ஆசிரியை சத்யா ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews