கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: தனியார் நிர்வாகத்தினர் அதிருப்தி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 15, 2021

Comments:0

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: தனியார் நிர்வாகத்தினர் அதிருப்தி

கர்நாடகாவில் ஒருங்கிணைந்த கல்லுாரி மற்றும் பல்கலைக்கழக மேலாண்மை திட்டத்தின் கீழ், மாணவர் சேர்க்கை நடத்துவதில், தனியார் கல்லுாரி நிர்வாகத்தினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

கர்நாடகாவில் தேசிய அளவில் முதன் முறையாக, நடப்பு கல்வியாண்டு முதல், தேசிய கல்வி கொள்கை செயல்படுத்தப்படுகிறது. அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லுாரிகள் அனைத்திலும், மாணவர் சேர்க்கையை தேசிய கல்வி கொள்கை அடிப்படையில் செயல்படுத்துமாறு உயர்கல்வி துறை அறிவித்துள்ளது.

மாணவர் சேர்க்கைக்கு ஒருங்கிணைந்த கல்லுாரி மற்றும் பல்கலைக்கழக மேலாண்மை திட்டமும் நடப்பாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய கல்வி கொள்கையில் கன்னடம் உட்பட இரண்டு மொழிப்பாடங்களை முதன்மையாக தேர்ந்தெடுப்பது; கட்டணம் மாற்றம்; மூன்றாண்டு மற்றும் நான்காண்டு படிப்புகள் என பலவிதமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால், கடந்த மாதம் நடக்க இருந்த மாணவர் சேர்க்கை, வரும் 23ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், தனியார் கல்லுாரி நிர்வாகங்கள் மாநில அரசின் அறிவிப்புக்கு அதிருப்தி தெரிவித்து உள்ளன. ஜூன் முதலே பல கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை துவங்கி விட்டதால், தற்போது எவ்வாறு அனைத்து மாற்றத்தையும் செயல்படுத்த முடியும் என கேள்வி எழுப்புகின்றனர். இதுகுறித்து தனியார் கல்லுாரி நிர்வாகத்தினர் கூறியதாவது:

தேசிய கல்வி கொள்கை நடப்பாண்டில் செயல்படுத்தப்படுவது குறித்து முன்னதாக கல்லுாரி நிர்வாகங்களுடன், மாநில அரசு எந்த ஆலோசனையும் நடத்தவில்லை. திடீரென அறிவித்து, அதன் அடிப்படையில் சேர்க்கையும் நடத்த அறிவுறுத்துவது, கல்லுாரி நிர்வாகங்களில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சேர்க்கை பாதிக்கு மேல் முடிந்துவிட்ட கல்லுாரிகளில் எவ்வாறு மாற்றியமைக்க முடியும். கல்லுாரிகளில் சேர்க்கையை பதிவு செய்ய மாணவர்களும் குழப்பமடைந்து, கல்லுாரி நிர்வாகத்திடம் கேட்கின்றனர்.

பல்கலைக்கழகங்களிலிருந்தும், இது தொடர்பான எந்த அறிக்கையும் முன்னதாக அறிவிக்கப்படவில்லை. புதிய கல்வி கொள்கைக்கான பாடத்திட்டம் குறித்தும் எந்த தகவலும் இல்லை.
பேராசிரியர்களை எவ்வாறு தயார்செய்வது; மாநில அரசின் அதிரடியான அறிவிப்பு, கல்லுாரி நிர்வாகங்களில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். மாநில உயர்கல்வித்துறை கமிஷனர் பிரதீப் கூறியதாவது:

கல்லுாரிகளில் சேர்க்கை நடத்த, அரசின் அறிவிப்பு வரை காத்திருக்க வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், பல தனியார் கல்லுாரிகள் அறிவிப்பை மீறி சேர்க்கையை நடத்தியுள்ளன.

ஒருங்கிணைந்த பல்கலை மற்றும் கல்லுாரி மேலாண்மை இணையதளத்தின் மூலம் வரும் 23ம் தேதி முதல் தான் சேர்க்கையை துவக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இதில் எந்த குழப்பமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews