நகை கடன் பெற்றவர்களின் ரேஷன் கார்டு, ஆதார் எண் சேகரிப்பு: அதிகாரிகள் தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 20, 2021

Comments:0

நகை கடன் பெற்றவர்களின் ரேஷன் கார்டு, ஆதார் எண் சேகரிப்பு: அதிகாரிகள் தகவல்

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் வரை நகை கடன் பெற்றவர்களின் ரேஷன் கார்டு, ஆதார் எண் சேகரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கூட்டுறவு சங்கங்களில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் வரை 5 சவரன் நகை கடன் பெற்றுள்ளவர்களின் விவரங்களை உடனே அனுப்ப வேண்டும் என அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் சுற்றறிக்கை அனுப்பினார். அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கூட்டுறவு சங்கங்களில் கடந்த மார்ச், ஏப்ரல் வரை நிலுவையில் இருந்த கடன் தொகை விவரங்கள் மற்றும் 5 சவரன் நகை கடன் நிலுவை விவரங்களை சேகரித்து அனுப்ப வேண்டும். நகை கடன் வழங்கியதற்கான நிதி ஆதாரங்கள் விவரங்களையும், பயனாளிகள் விவரங்களையும் மாவட்ட வாரியாக வங்கிகளின் மேலாண்மை இயக்குனர்கள், சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் மண்டல இணைப்பதிவாளர்கள் கையொப்பமிட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு மின்னஞ்சலிலும், தபாலிலும் அனுப்பி வைக்க வேண்டும். ஒரே நபர் வெவ்வேறு சங்கங்களில் நகைக்கடன் பெற்றிருந்தால், அவர்களின் ஆதார் எண், ரேஷன் கார்டு பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 5 சவரன் நகை கடன் நிலுவை விவரங்களும், 5 சவரனுக்கு மேல் பெற்றுள்ள கடன் நிலுவை விவரங்களும் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் மற்றும் அதற்கு மேல் நகை கடன் பெற்றவர்களின் ரேஷன் கார்டு, ஆதார் எண் போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு கிராமத்திலும் கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்கள் 5 சவரன் மற்றும் அதற்கு மேல் நகை கடன் பெற்றவர்கள் தங்களது ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, பான் கார்டு போன்ற ஆவணங்களை கொடுத்து பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘திமுக தேர்தல் அறிக்கையில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதற்காக கூட்டுறவு சங்கங்களில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் வரை 5 சவரன் நகை மற்றும் அதற்கு மேல் வைத்துள்ள நகை கடன் விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. ஒருவரே வெவ்வேறு கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்றிருப்பதை கண்டறியும் வகையிலும், ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் எந்தந்த கூட்டுறவு சங்கங்களில் நகை பெற்றுள்ளார்கள் என்பதை அறியும் வகையில், கூட்டுறவு சங்கங்களில் நகை பெற்றுள்ளவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. தகுதியான பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடைக்க ரேஷன் கார்டு, ஆதார் எண், பான் கார்டு ஆகியவை சேகரிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் ஓரிரு நாட்களில் முடிவடைந்து விடும்’ என்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews