பள்ளியிலிருந்து இடைநின்ற மாணவர்களை ‘சர்வே ஆப்’ மூலம் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி ஆக.10 முதல் தொடக்கம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 05, 2021

Comments:0

பள்ளியிலிருந்து இடைநின்ற மாணவர்களை ‘சர்வே ஆப்’ மூலம் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி ஆக.10 முதல் தொடக்கம்.

கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் பள்ளியிலிருந்து இடைநின்ற மாணவர்களை ‘சர்வே ஆப்’ மூலம் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் ஆக.10 முதல் 31-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ளது. மத்தியக் கல்வி அமைச்சகத்தின் ஆய்வில், கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக குழந்தைகளின் கல்வி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாகப் பெண் குழந்தைகள் மற்றும் மூன்றாம் பாலினக் குழந்தைகள் ஆரம்பப் பள்ளிப்படிப்பை முடிக்கும் முன்பே அதிக அளவில் இடைநின்று விடுவதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் ஆண்டுதோறும் நடைபெறும் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற பிள்ளைகளைக் கண்டறியும் கணக்கெடுப்புப் பணியை இந்த ஆண்டு சிறப்பு கவனத்துடன் 'சர்வே ஆப்' மூலம் கணக்கெடுப்பு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் ஆக.10-ம் தேதி முதல் ஆக.31-ம் தேதி வரை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இதுகுறித்துப் பள்ளிக் கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ''கோவிட் பெருந்தொற்று காரணமாக 2020 மார்ச் முதல் தற்போது வரை சுமார் ஒன்றரை ஆண்டுகள் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் 14 வயதில் இருந்து 19 வயதுடைய மாணவர்கள் கட்டுமானத் தொழிலாளர்களாகவும், செங்கல் சூளை, கல் மற்றும் மணல் குவாரி, தொழிற்சாலைகளில் வேலைக்குச் சென்றுள்ளனர். இதனால் கல்வியைக் கைவிட்டு குழந்தைத் தொழிலாளர்களாக மாறியுள்ளனர். இவர்களைக் கண்டறிந்து பள்ளியில் சேர்க்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதற்காகத் தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களில், இதுவரை பாடப்புத்தகங்களைப் பெறப் பள்ளிக்கு வராதவர்களின் பட்டியலை வைத்துக் கணக்கெடுக்க உள்ளோம். இதற்காக உருவாக்கப்பட்ட செயலியான 'சர்வே ஆப்' மூலம் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்க உள்ளோம். கணக்கெடுப்பு ஆக.10 முதல் ஆக.31-ம் தேதிவரை நடைபெறும். காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை கள ஆய்வு செய்து உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும். இப்பணியில் ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் ஈடுபடவுள்ளனர்'' என்று தெரிவித்தார்.

அதனையொட்டி மதுரை மாவட்டத்தில் ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் தலைமையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா.சுவாமிநாதன் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் திருஞானம் மற்றும் பணியாளர்கள் முன் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews