இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது மீண்டும் 58ஆக குறைக்கப்படுமா?: தமிழக அரசு தீவிர ஆலோசனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 24, 2021

Comments:0

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது மீண்டும் 58ஆக குறைக்கப்படுமா?: தமிழக அரசு தீவிர ஆலோசனை

இளைஞர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது மீண்டும் 58ஆக குறைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின்போது அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 58ல் இருந்து 59ஆக உயர்த்தப்பட்டது. அதன்பிறகு கடந்த மார்ச் மாதம் 60ஆக மேலும் உயர்த்தி அதிமுக அரசு அரசாணை பிறப்பித்தது. இது அரசு பணியில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், அரசு பணிக்காக இரவு, பகலாக தயாராகிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களின் கனவை தகர்க்கும் வகையில் அமைந்துள்ளது.தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் படித்து முடித்து வேலை தேடும் இளைஞர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர். இதில் அரசு பணிக்காக தயாராக முன்வரும் இளைஞர்கள் ஏராளம்.

அவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. இது தொடர்பாக அரசுக்கு தமிழ்நாடு வேலையில்லா பட்டதாரிகள் நலச்சங்கம் சார்பில், தலைமை செயலாளர் இறையன்புக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:

வேலைவாய்ப்பற்ற லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் குறித்து கவலைப்படாமல் அதிமுக ஆட்சியின் கடைசி நேரத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 58ல் இருந்து 60ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. இதனால் அரசு வேலையை எதிர்பார்த்த இளைஞர்களின் கனவு தகர்ந்துள்ளது. ஏற்கனவே பதவி உயர்வு தேக்க நிலையில் இருந்த அரசு ஊழியர்களின் பதவி உயர்வும் பறிபோனதால், அவர்களும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.இந்தியாவில் சில மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் ஓய்வுபெறும் வயது 58ஆக உள்ளது. அரசின் உத்தரவில் 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் ஓய்வு பெற்றிருக்க வேண்டிய ஆயிரக்கணக்கான ஊழியர்கள் அடுத்த ஆண்டு ஒட்டுமொத்தமாக ஓய்வு பெற உள்ளனர். இதனால் தமிழக அரசுக்கு கடும் நிதிச்சுமை ஏற்படும். காரணம், நீட்டிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளில் அவர்கள் பெறும் மாத சம்பளத்தை கணக்கிட்டு பார்த்தால் அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய பலன்களைவிட அதிகமாக இருக்கும். எனவே அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை பழையபடி 58ஆக தமிழக அரசு குறைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.தமிழகத்தில் தற்போது புதிதாக முதல்வராக பதவியேற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினும், இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளார். தற்போது 59 மற்றும் 60 வயதில் வேலைபார்க்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அதிகளவு சம்பளம் வழங்க வேண்டியுள்ளது. புதிய ஊழியர்களுக்கு அவ்வளவு சம்பளம் தர வேண்டியதில்லை. அதிகளவில் பணமும் மிச்சமாகும், தற்போதுள்ள அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வும் வழங்க முடியும். அதனால் மீண்டும் தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 58ஆக குறைக்க திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews