+2 பொதுத் தேர்வினை கீழ்க்கண்ட அம்சங்களை கருத்தில் கொண்டு நடத்திட வேண்டும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 03, 2021

Comments:0

+2 பொதுத் தேர்வினை கீழ்க்கண்ட அம்சங்களை கருத்தில் கொண்டு நடத்திட வேண்டும்

அனைத்து ஆசிரிய நண்பர்களுக்கும் வணக்கம்!
தமிழக அரசு +2 பொதுத் தேர்வினை கீழ்க்கண்ட அம்சங்களை கருத்தில் கொண்டு நடத்திட வேண்டும் என பணிவுடன் வேண்டுகிறேன்!
👉 வினாத்தாள் வடிவமைப்பிலும், விடைத்தாள்கள் மதிப்பீட்டிலும் நெகிழ்வுத் தன்மையை பின்பற்ற வேண்டும்.
👉 2019-20 ஆம் கல்வி ஆண்டில் CBSE பாடத்திட்ட +2 பொதுத் தேர்வில் வினாக்கள் மிக எளிமையாக கேட்கப் பட்டதாலும், விடைத்தாள்கள் மதிப்பீட்டில் நெகிழ்வுத் தன்மை பின்பற்றப் பட்டதாலும், CBSE யில் பயின்ற பெரும்பாலான மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு, 470, 480 என மதிப்பெண்களை பெற்றார்கள்.
👉 ஆனால் 2019-20 ஆம் கல்வி ஆண்டில், தமிழக பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் 600 மதிப்பெண்களுக்கு, 450 மதிப்பெண்கள் பெறவே அதிக சிரமப் பட்டனர். எனவே தமிழக பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு தரமான கல்லூரிகளில், விரும்பிய பாடப்பிரிவு கிடைக்காமல் ஏமாற்றமடைந்தார்கள். 👉 பெரும்பாலான CBSE மாணவர்கள், தரமான கல்லூரிகளில், விரும்பிய பாடப்பிரிவை எளிதாக பெற்றார்கள்.
👉 எனவே இனிமேலாவது தமிழக பாடத்திட்டத்தில் பயிலும் தமிழக மாணவர்களுக்கு இந்த நிலை ஏற்படாமல் இருக்க, தமிழக பள்ளிக் கல்வித்துறை, தமிழக பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களை பாதுகாக்க வேண்டும்.
👉 தற்போதைய 2020-21 ஆம் கல்வி ஆண்டிற்கு மட்டும், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு பாடத்திற்கும் தலா 10 மாதிரி வினாத்தாட்களை விடையுடன், தயாரித்து உடனே அச்சிட்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
👉 கொரோனா பரவலால், சுமார் 2 மாதங்கள் மட்டுமே பள்ளிகள் நேரடியாக செயல்பட்ட நிலையில், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், பள்ளிக்கல்வித் துறை தயாரிக்கும் மாதிரி வினாத் தாள்களிலிருந்து மட்டும் 80% வினாக்கள் கேட்கப் பட வேண்டும்.
👉 மாதிரி வினாத்தாள்கள் பாடத்தின் மிக முக்கிய கருத்தை மாணவர்கள் அறிந்துள்ளனரா? என்பதை சோதிக்கும் வண்ணம் அமைய வேண்டும். அதிக முக்கியத்துவமற்ற பாடக்கருத்துக்களை மாதிரி வினாத்தாளில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
👉 தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் விதத்தில், வாரத்திற்கு ஒரு தேர்வு மட்டும் நடத்தப்பட வேண்டும்.
👉 ஒரு தேர்வறைக்கு 10 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். சுமார் 10 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினால் 1 இலட்சம் தேர்வறைகள் தேவைப்படும். 👉 தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க ஆன்லைன் கேமரா பொருத்தப் பட வேண்டும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் சுமார் 80,000 வாக்குச் சாவடிகளில் ஆன்லைன் கேமரா பயன் படுத்தப் பட்டது. ஆகவே தேர்வறைகளில் ஆன்லைன் கேமரா பொருத்துவது கடினமானதல்ல.
👉 மாணவர்கள் தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் உள்ள, எந்த வகைப் பள்ளியில் படித்தாலும், +2 பொதுத் தேர்வினை வீட்டின் அருகே உள்ள பள்ளியில் தேர்வெழுதும் வகையில், வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
👉 ஏனென்றால் கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரத்திற்காக வெவ்வேறு ஊர்களுக்கு மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர். தாய் / தந்தையை இழந்து, ஆதரவுக்காக சொந்த கிராமத்திற்கு சிலர் குடி பெயர்ந்துள்ளனர்.
👉 நாமக்கல், கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் +2 வகுப்பில் மட்டும் சுமார் 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதிகளில் தங்கி பயின்று வருகிறார்கள். கொரோனா காலத்தில் இந்த விடுதிகளில் கொரோனா விதிகளை கடைபிடிப்பதோ அல்லது தனி மனித இடைவெளியை பின்பற்றுவதோ முற்றிலும் சாத்தியமில்லாதது என்பதால், விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்கள், தங்கள் வீட்டின் அருகே உள்ள பள்ளியில் பொதுத் தேர்வு எழுதும் வகையில், வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
👉 தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலை / உயர் நிலை / மெட்ரிக் / CBSE பள்ளிகள் தேர்வு மையங்களாக அமைக்க வேண்டும். தேவைப்பட்டால் அனைத்து வகை கல்லூரிகள் மற்றும் நடுநிலைப் பள்ளி கட்டிடங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். 👉 தேர்வெழுத வரும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் தனியார் பள்ளி வாகனங்களையும் பயன் படுத்திக் கொள்ளலாம்.
👉 தேர்வெழுதும் மாணவர்கள் அதிக பட்சமாக 3 கி.மீ.க்கு மேல் பயணம் செய்யாத அளவில், தேர்வு மையங்கள் அதிக அளவு பரவலாக்கப் பட வேண்டும்.
👉 தேர்வெழுதும் மாணவர்களுக்கு தேவைப்பட்டால், மூன்றடுக்கு முகக் கவசம் தேர்வு மைய பள்ளி வளாகத்திலேயே தினமும் வழங்க வேண்டும்.
👉 தேர்வு நேரம் 2 மணி நேரம் மட்டுமே நடைபெற வேண்டும். காலை .10.15 மணி முதல் மதியம் 12.15 மணி வரை நடந்தால் போதும். காலை 10.00 மணி முதல் 10.15 வரை வினாத்தாள் வாசிப்பதற்கான நேரமாக அறிவிக்கலாம்.
👉 வினாக்களுக்கான விடைகளை 2 மணி நேரத்தில் எழுதி முடிக்கும் வகையில், வினாக்களின் எண்ணிக்கையை குறைத்தும், வினாக்கள் மிக எளிமையாகவும் கேட்க வேண்டும். குழப்ப வினாக்கள், மறைமுக வினாக்கள், பாடங்களின் உட்பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப் படக் கூடாது. 👉 70 மதிப்பெண்களுக்கான எழுத்துத் தேர்வில் 30 மதிப்பெண்களுக்கான வினாக்கள், (அதாவது சுமார் 40% வினாக்கள்) சரியான விடையை தேர்வு செய் (Multiple Choice) என்ற வகையில் அமைய வேண்டும். இதிலும் 40 வினாக்கள் கேட்கப்பட்டு, அதில் 30 வினாக்களுக்கு விடையளித்தால் போதும் என்ற வகையில் வாய்ப்பு வழங்க வேண்டும். 40 வினாக்களுக்கு மே விடையளித்திருந்தால், சரியான விடையளித்திருந்த 30 விடைகளுக்கான, மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.
👉 அடுத்த 20 மதிப்பெண்களுக்கு குறு / சிறு வினாக்கள் 10 x 2 = 20 என்ற வகையில் கேட்கலாம். இதிலும் 15 வினாக்கள் தந்து, ஏதேனும் 10 வினாக்களுக்கு விடையளித்தால் போதும் என வாய்ப்பு வழங்கலாம். (Open Choice)
👉 மீதமுள்ள 20 மதிப்பெண்களுக்கு விரிவான விடையளி என்ற வகையில் 2 x 10 = 20 என்ற முறையில் அமையலாம். இதிலும் 5 வினாக்கள் கேட்டு, ஏதேனும் 2 வினாக்களுக்கு விடையளித்தால் போதும் என்ற வாய்ப்பை வழங்கலாம். 👉 தேர்வுகள் மாணவர்களை கற்றலில் அடுத்த முன்னேற்ற நிலைக்கு செல்ல ஊக்கமளிப்பது போல அமைய வேண்டுமே தவிர, கற்போருக்கு தாழ்வு மனப்பான்மை மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்தக் கூடாது என்பதை, வினாத்தாள் வடிவமைப்போர் கருத்திலும், கவனத்திலும் கொள்ள வேண்டும். தங்களின் வினாத்தாள் வடிவமைக்கும் திறனை காட்டி, மாணவர்களை மன உளைச்சலுக்கும், தேக்க நிலைக்கும், இடை நிற்றலுக்கும் ஆளாக்கக் கூடாது.
👉 +2 பொதுத்தேர்வு எழுதும் சுமார் 10 லட்சம் பேரில், சுமார் 3,000 முதல் 4,000 பேர் வரை தான், அரசு மருத்துவக் கல்லூரிகளில் MBBS சேரும் வாய்ப்பை பெறுகிறார்கள். அதுவும் இந்த 3000 முதல் 4000 பேரில் 3,500 க்கும் மேற்பட்டோர், +2 பொதுத் தேர்வு எழுதிய பின், ஒரு வருடமோ அல்லது இரண்டு / மூன்று வருடங்களோ, Repeaters நிலையில், பல இலட்சங்கள் செலவழித்து, பெரிய பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற பின்னரே மருத்துவக் கல்லூரிகளில் சேர்கிறார்கள்.
👉 ஆகவே சமமான களமில்லாத, போட்டித் தேர்வினை எழுதுபவர்களை மனதில் கொண்டு, +2 பொதுத் தேர்வினை எழுதும் சுமார் 10 இலட்சம் மாணவர்களை வாட்டி வதைக்கும் வகையில் தேர்வும், மதிப்பீடும் அமையக் கூடாது. NEET, JEE போன்ற போட்டித் தேர்வு எழுத விரும்புபவர்கள் தனியாக பயிற்சியை மேற்கொள்வார்கள். ஆகவே +2 பொதுத் தேர்வையும், போட்டித் தேர்வையும் ஒப்பிடத் தேவையில்லை. 👉 இறுதியாக உடல் நலம் குன்றிய ஒரு குழந்தைக்கு ஊக்கமளித்து, தனிக்கவனம் செலுத்தி, வாழ்க்கையில் அடுத்த முன்னேற்ற நிலைக்கு அழைத்துச் செல்வது போல, கொரோனாத் தொற்று பாதிப்பால் வெகுவாக பாதிக்கப்பட்ட 2020-21 ஆம் கல்வி ஆண்டில் +2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஊக்கமளித்து, எளிய முறையில் தேர்வையும் மதிப்பீட்டையும் நடைமுறை படுத்தி, அவர்களை கற்றலில் அடுத்த மேம்பட்ட நிலைக்கு அழைத்துச் செல்ல வேண்டியது, கல்வித் துறையில் உள்ள ஒவ்வொருவரின் கடமை என்பதை நாம் உணர வேண்டும்.
👉 மாணவர்கள் எந்த பட்டப் படிப்பில் உயர் கல்வி சேர்கிறார்களோ, அங்கு அந்தப் படிப்பிற்குரிய +1 மற்றும் +2 பாடங்களை மீண்டும் ஒரு முறை திருப்புதல் மூலம் வலுவூட்டி, அவர்களை உயர் கல்வியில் எளிதாக தேர்ச்சி பெறச் செய்யலாம்.
👉 மேற்கண்ட கருத்துக்கள் ஆக்கப்பூர்வமானதாக இருப்பின், ஆசிரிய நண்பர்களும், ஆசிரிய இயக்கங்களும், தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கும், தேர்வுத் துறைக்கும் சென்றடையும் வண்ணம் பகிர்ந்து உதவ வேண்டும்.
மிக்க நன்றி!

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews