நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ஆசிரியர் பயிற்சிக்கான 2 ஆண்டு டிப்ளமோ படித்தேன். இறுதி தேர்வு கடந்தாண்டு மே மற்றும் ஜூன் மாதத்தில் நடத்தியிருக்க வேண்டும். கொரோனா ஊரடங்கால் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. 220 நாட்களை நிரப்பியிருக்க வேண்டிய நிலையில் நாங்கள், 169 நாட்களை மட்டுமே பூர்த்தி செய்திருந்தோம். எங்களது படிப்பை பொறுத்தவரை பெரும்பாலான தேர்வுகள் செய்முறைத் தேர்வை அடிப்படையாகக் கொண்டவை. ஊரடங்கால் எங்களுக்கான செய்முறை வகுப்புகள் நடத்தப்படவில்லை. அவசரகதியில் புத்தகம் உள்ளிட்டவை வழங்காமலே வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்தாண்டு செப்டம்பரில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து எந்தவித அவகாசமும் வழங்காமல் முதல் மற்றும் 2ம் ஆண்டிற்கான இறுதி தேர்வு நடத்தப்பட்டது. 2019-20க்கான பெரும்பாலான தேர்வுகளை அரசு ரத்து செய்துள்ள நிலையில் எங்களுக்கு அவகாசம் இன்றி, பாடங்களையும் குறைக்காமல் தேர்வுகள் நடத்தப்பட்டது. வேறு வழியின்றி தேர்வில் பங்கேற்ற பலரால் தேர்வை முறையாக எதிர்கொள்ள முடியவில்லை. போதிய பஸ் வசதி இல்லாததால் தேர்வு எழுத வந்து செல்வதிலேயே பலருக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. தேர்வுகள் முடிந்து முடிவுகள் வெளியானதில் 98 சதவீதம் பேர் தோல்வி அடைந்திருந்தனர். ஆசிரியர் பயிற்சி தேர்விலேயே அதிகமானோர் தோல்வி அடைந்தது இந்த முறை தான்.
இதனால், சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் எதிர்காலம் பாதித்துள்ளது. வேலைவாய்ப்பு பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, என்னைப் போன்ற பலரின் எதிர்கால நலன் கருதி 2019-20ம் கல்வி ஆண்டிற்கான டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படிப்பில் முதல், இரண்டாம் ஆண்டிற்கான இறுதித் தேர்வை மீண்டும் நடத்துமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் மனுவிற்கு பள்ளி கல்வித்துறை செயலர், கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான கவுன்சில் இயக்குநர், அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப். 27க்கு தள்ளி வைத்தனர்.
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.