மருத்துவ கவுன்சிலிங் தேதி விரைவில் அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 31, 2020

Comments:0

மருத்துவ கவுன்சிலிங் தேதி விரைவில் அறிவிப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு 'ஓகே' ஆனதால் அரசு பள்ளி மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொதுப் பிரிவு மாணவர்களுக்கான 'கட் ஆப்' மதிப்பெண் அதிகமாக இருந்தாலும் தனி இட ஒதுக்கீடு கிடைப்பதால் அரசு பள்ளி மாணவர்கள் கவலையை துறந்து கவுன்சிலிங்கில் பங்கேற்க சுறுசுறுப்பாகி வருகின்றனர்.அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா செப்டம்பர் 15ம் தேதி சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தாமதம் கவர்னர் ஒப்புதலுக்காக செப். 18ல் அனுப்பப்பட்டது.இம்மாதம் 5ம் தேதி கவர்னரை சந்தித்த முதல்வர் அந்த சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கும்படி கோரினார். சட்ட நிபுணர்களின் கருத்துக்களை கேட்டதால் கவர்னர் ஒப்புதல் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடந்த வழக்கில் 'உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்த பின்னரே மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு துவங்கும்' என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக எப்போது மசோதாவிற்கு ஒப்புதல் கிடைக்கும்; எப்போது கலந்தாய்வு துவங்கும் என்ற எதிர்பார்ப்பில் மாணவர்கள் இருந்தனர். அக்.20ம் தேதி அமைச்சர்கள் ஐந்து பேர் கவர்னரை நேரில் சந்தித்து மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை துவக்க வேண்டி இருப்பதால் விரைவாக உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கும்படி வலியுறுத்தினர்.அதே கோரிக்கையை வலியுறுத்தி தி.மு.க. தலைவர் ஸ்டாலினும் கவர்னருக்கு கடிதம் எழுதினார். ஒப்புதல் கவர்னர் எழுதிய பதில் கடிதத்தில் 'மசோதா குறித்து முடிவெடுக்க மூன்று அல்லது நான்கு வாரம் அவகாசம் தேவைப்படுகிறது' என கூறியிருந்தார்.அதன் தொடர்ச்சியாக அனைத்து கட்சிகளும் உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர் விரைவாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தின. தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டமும் நடந்தது.கவர்னர் ஒப்புதல் அளிக்காத நிலையில் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது. இந்நிலையில் நேற்று மசோதாவிற்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்தார். இந்த மசோதா குறித்து கருத்து கேட்டு செப்டம்பர் மாதம் 26ம் தேதி மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு கவர்னரின் செயலர் ஆனந்தராவ் பாட்டீல் கடிதம் எழுதியிருந்தார்.அதற்கு நேற்று முன்தினம் பதில் கடிதம் எழுதியிருந்தார். அதில் 'அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது அல்ல' என தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார் இதையடுத்து மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் நடத்தப்பட வேண்டும். அதற்கான அறிவிப்பும் மாணவர் சேர்க்கை விண்ணப்பபதிவு தேதியும் விரைவில் வெளியாகும் என மருத்துவ மாணவர் சேர்க்கை கமிட்டி செயலர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.இந்த சட்ட மசோதாவால் அரசு பள்ளி மாணவர்கள் 300 பேர் மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது. 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதற்கான கட் ஆப் மதிப்பெண் விபரம் விரைவில் அறிவிக்கப்படும்.பொதுப் பிரிவு மாணவர்களுக்கு கட் ஆப் மதிப்பெண் அதிகமாக இருப்பதால் கவுன்சிலிங்கில் கடும் போட்டி காணப்படும். ஆனால் அவர்களுடன் நேரடியாக போட்டியிட முடியாத அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்போது தனி இட ஒதுக்கீடு கிடைத்துள்ளதால் கவலை அடையத் தேவையில்லை.இந்த ஒதுக்கீடு அடிப்படையில் தனியாக கட் ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு கவுன்சிலிங்கில் இடம் அளிக்கப்படும் என்பதால் அரசு பள்ளி மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு எத்தனை இடம் கிடைக்கும்? * தமிழகத்தில், 26 அரசு மருத்துவக் கல்லுாரிகள், 24 தனியார் மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 3,600 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 15 சதவீதமான, 540 இடங்கள் செல்லும். மீதமுள்ள, 3,060 இடங்கள் மாநிலத்திற்கு உள்ளன * தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், 4,000 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. அதிலிருந்து, மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு, 2,000த்துக்கும் மேற்பட்ட இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. * இதன்படி, மாநில அரசிடம் உள்ள, 5,000க்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ்., இடங்களில், 69 சதவீத இட ஒதுக்கீட்டில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக, இந்தாண்டு அரசு பள்ளிகளில் படித்து, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற, 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர வாய்ப்புள்ளது. * இந்த எண்ணிக்கை, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் கூடுதலாக அனுமதி கிடைக்கும், எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு ஏற்ப மாறுபடும். இட ஒதுக்கீடு விபரம்? * அரசு மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, 100 சதவீத இடங்களில், 15 சதவீதம் அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங் ஒதுக்கீட்டிற்கு போய்விடும்; மீதமுள்ள, 85 சதவீத இடங்கள்; தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், மாநில அரசு ஒதுக்கீடு வரும், 50 சதவீத இடங்களும் சேர்த்து, மாணவர் சேர்க்கை நடக்கும் * பொதுப் பிரிவில், 16 சதவீத இடங்கள் நிரப்பப்படும். மீதமுள்ள, 69 சதவீத இடங்கள், இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படும். * அதில், பிற்படுத்தப்பட்டோருக்கு, 30 சதவீதம்; மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு, 20 சதவீதம்; பட்டியலினத்தவருக்கு, 18 சதவீதம்; பழங்குடியினருக்கு, 1 சதவீதம் என்ற அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது * பிற்படுத்தப்பட்டோர் பிரிவின், 30 சதவீத இடத்தில், முஸ்லிம்களுக்கு, 3.5 சதவீதம்; பட்டியலின ஒதுக்கீட்டில் உள்ள, 18 சதவீத இடங்களில், 3 சதவீதம் அருந்ததியினருக்கும் உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது * இந்த, 69 சதவீத இட ஒதுக்கீட்டில் தான், அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதனால், இதிலும் பிரிவு வாரியாக வழக்கமான நடைமுறை உண்டு. அ.தி.மு.க.,வினர் மகிழ்ச்சி சட்டசபை பொதுத் தேர்தல் வர உள்ள நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில், உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு, கவர்னர் ஒப்புதல் வழங்கியது, அ.தி.மு.க.,வினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தமிழக சட்டசபைக்கு, அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் பணிகளை, அனைத்து கட்சிகளும் துவக்கி விட்டன. மருத்துவப் படிப்பில் சேர, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பு எட்டாக்கனியாகியது.'அ.தி.மு.க., அரசு, நீட் தேர்வை அனுமதித்து, தமிழக மாணவர்களுக்கு தீங்கிழைத்து விட்டது' என, தி.மு.க., குற்றஞ்சாட்டியது. 'நீட் தேர்வை அறிமுகப்படுத்தியதே, காங்., - தி.மு.க., கூட்டணி அரசு' என, அ.தி.மு.க., பதிலடி கொடுத்தது.இப்பிரச்னைக்கு தீர்வு காண, அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில், 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க, தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான சட்ட மசோதா, சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், கவர்னர் ஒப்புதல் வழங்காததால், எதிர்க்கட்சிகள் மீண்டும் அரசை விமர்சிக்க துவங்கின.இந்நிலையில், மருத்துவப் படிப்புக்கானகலந்தாய்வு துவங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், கவர்னர் ஒப்புதலை எதிர்பார்க்காமல், அரசாணை வெளியிட முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி நேற்று முன்தினம், 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி, அரசாணை வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, சட்ட மசோதாவிற்கு, கவர்னரும் ஒப்புதல் வழங்கியுள்ளார். இது, தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக அ.தி.மு.க., கருதுகிறது. மேலும், முதல்வர் இ.பி.எஸ்.,சின் இந்த அதிரடி நடவடிக்கை, தேர்தல் பிரசாரத்திற்கு உதவும் என்பதால், அ.தி.மு.க.,வினர் உற்சாகமாக உள்ளனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews