அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் முன்னுரிமை வழங்கும் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதா அரசியலமைப்பு சரத்துகளுக்கு உட்பட்டே கொண்டுவரப்பட்டுள்ளது என்றும், அதே நேரத்தில் நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டது என்றும் இந்திய தலைமை வக்கீல் (சொலிசிட்டர் ஜெனரல்) துஷார் மேத்தா கருத்து தெரிவித்து ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அரசு பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளுக்கு எம்பிபிஎஸ், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆகிய மருத்துவ படிப்புகளில் முன்னுரிமை வழங்குவதற்காக 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தர உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் தமிழக அரசு ஒரு குழுவை நியமித்தது.
அந்த குழு அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை படித்த மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ படிப்புகளில் முன்னுரிமை வழங்க 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்று ஜூன் 8ம் தேதி அரசிடம் பரிந்துரை அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த பரிந்துரையின் மீது தமிழக அமைச்சரவை கடந்த ஜூலை மாதம் கூடி ஆலோசனை நடத்தி அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் முன்னுரிமை தருவதற்காக 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை கொண்டுவர முடிவு செய்தது. பின்னர் இந்த முடிவு சட்ட மசோதாவாக பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதா தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் ஒப்புதல் பெறுவதற்காக செப்டம்பர் 16ம் தேதி அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், 45 நாட்களுக்கும் மேலாக இந்த மசோதா மீது ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை. ஒப்புதல் வழங்குவது குறித்து மசோதா தொடர்பாக கருத்து கேட்பதற்காக ஆளுநர் இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு (இந்திய தலைமை வக்கீல்) செப்டம்பர் 26ம் தேதி அனுப்பினார்.
அந்த கடிதத்தில், அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் 7.5 சதவீதம் முன்னுரிமை வழங்கும் சட்ட மசோதா தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் தமிழக அரசின் ஒதுக்கீட்டு இடங்களில் வாய்ப்பை ஏற்படுத்தி தருவதற்காக இந்த ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையிலான குழுவின் பரிந்துரையின்படி இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான இந்த ஒதுக்கீடு ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை மறு ஆய்வு ெசய்யும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா தொடர்பான ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றை ஆய்வு செய்து கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
தமிழக ஆளுநர் அனுப்பிய கடிதம் மற்றும் மசோதா தொடர்பான ஆவணங்களை பரிசீலித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உள்ஒதுக்கீடு தொடர்பாக தமிழக ஆளுநருக்கு தனது கருத்துகளை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
அரசியலமைப்பு பிரிவு 14 மற்றும் 15ன்கீழ் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து தமிழக அரசு மசோதா கொண்டு வந்துள்ளது. படிக்க வசதியில்லாத ஏழ்மை நிலையில் உள்ள கல்வி உரிமை சட்டத்தின்கீழ் படித்து வரும் அரசு பள்ளி மாணவர்களுக்காக மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மீது எனது கருத்து கேட்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மாணவர்களில் அரசு பள்ளிகளில் 41 சதவீத மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்களில் 0.14 சதவீத மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்புகளில் சேர முடியும் என்று தெரியவந்துள்ளது.
அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேர்வது மிகவும் குறைவாக உள்ளது என்றும் எனக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் முன்னுரிமை வழங்குவதை உறுதிப்படுத்துவதற்காக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு மாணவர்களின் பொருளாதார நிலை, சாதி ஒதுக்கீடு, பெற்றோரின் கல்வி, அவர்களின் தொழில், வருமானம் ஆகியவற்றை ஆய்வு செய்து தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுடன் இவற்றை ஒப்பீடு செய்து அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க முடிவு செய்து அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழக அரசு சட்டப் பேரவையில் உள் ஒதுக்கீடு மசோதாவை கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளது.
இந்திய அரசியலமைப்பு சரத்து 14ல் கூறப்பட்டுள்ளபடி இந்திய எல்லைக்குள் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் சட்டத்தின் முன்பு சமமான பாதுகாப்பு வழங்க வேண்டும். அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்று அரசியலமைப்பு தெளிவாக கூறியுள்ளது. சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கியுள்ள மக்களின் மேம்பாட்டுக்காக குறிப்பாக அவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக சிறப்பு பிரிவுகள் உருவாக்க மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் அரசியலமைப்பு சரத்து 15(5)ல் தரப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பிரிவு மூலம் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் படிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக அரசு சட்டங்களை கொண்டுவர முடியும். இந்த முடிவு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டது.
தமிழக அரசின் மசோதாவில் சமூக ரீதியிலும், கல்வியிலும் பின்தங்கியவர்களிடையே உள்ள வேறுபாடு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முடிவின் மூலம் சமூக ரீதியான பாகுபாட்டை நீக்கும் அரசின் முடிவு சாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த மசோதா நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டுள்ளது. இந்த பகுப்பாய்வின் அடிப்படையில் தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்ட மசோதா அரசியலமைப்புக்கு உட்பட்டிருப்பது உண்மைதான். இவ்வாறு சொலிசிட்டர் ஜெனரல் கருத்து தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.