ஆசிரியர் நியமனம்; எம்.பி.சி பிரிவுக்கு பணி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 06, 2020

Comments:0

ஆசிரியர் நியமனம்; எம்.பி.சி பிரிவுக்கு பணி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான அரசின் நிலைப்பாட்டுக்கு மாறாக செயல்படும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும். சமூகநீதிக்கு எதிராக செயல்படும் அவர்கள் அப்பொறுப்புகளில் இருந்து அகற்றப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:
“தமிழ்நாடு அரசு பள்ளிகளுக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வதில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதியை துடைக்கும்படி உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும், அதை மதிக்காமல் உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மேல்முறையீடு செய்திருக்கிறது. சமூகநீதிக்கு எதிரான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. அரசு பள்ளிகளில் பல்வேறு பாடங்களுக்கு 2144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த ஆண்டு செப்டம்பரில் நடத்தப்பட்ட போட்டித்தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் வேதியியல், வரலாறு, பொருளியல், தமிழ், அரசியல் அறிவியல், உயிர் வேதியியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் தேர்வில் இடஒதுக்கீட்டு முறை சரியாக கடைபிடிக்கப்படவில்லை. அதனால் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 83 பேரும், பட்டியலினத்தைச் சேர்ந்த 5 பேரும் அனைத்துத் தகுதிகளும் இருந்தும், போட்டித் தேர்வுகளில் தேவையான மதிப்பெண்களை எடுத்திருந்தும் ஆசிரியராகும் வாய்ப்பை இழந்தனர். வேதியியல் பாடத்திற்கான ஆசிரியர்களை நியமிப்பதில் நடந்த குளறுபடிகள் மற்றும் முறைகேடுகளில் மட்டும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 34 பேர் ஆசிரியராகும் வாய்ப்பை இழந்துவிட்டனர். அவர்களில் சிலர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வேதியியல் பாடத்திற்கு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும், இட ஒதுக்கீட்டு விதிகளை முறையாக பின்பற்றி புதிய பட்டியலைத் தயாரிக்க வேண்டும் என்று ஆணையிட்டது. அதை எதிர்த்து ஆசிரியர் வாரியம் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையிட்டது. சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 19-ஆம் தேதி பிறப்பித்த இந்த ஆணையை அடுத்த 2 வாரங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை உயர்நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தாத ஆசிரியர் தேர்வு வாரியம், இப்போது அத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளால் இப்படி ஒரு சமூகநீதி படுகொலை நடத்தப்படுவதை, சமூகநீதிக்கு ஆதரவான அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது. பின்னடைவுப் பணியிடங்களையும், நடப்புக் காலியிடங்களையும் ஒன்றாக நிரப்பும் போது முதலில் நடப்புக் காலியிடங்களுக்கான பொதுப்பிரிவு இடங்கள் நிரப்பப்பட வேண்டும்; பின்னர் ஒவ்வொரு இட ஒதுக்கீட்டுப் பிரிவிலும் முதலில் பின்னடைவுப் பணியிடங்களையும், தொடர்ந்து நடப்புக் காலியிடங்களில் சம்பந்தப்பட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான இடங்களையும் நிரப்ப வேண்டும் . இது தான் காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாகும். இதைத் தான் பாமகவும் வலியுறுத்துகிறது. ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியமோ, அதிக மதிப்பெண் பெற்று பொதுப்பிரிவில் தேர்வு செய்யப்பட வேண்டிய மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை, பின்னடைவு பணியிடங்களில் தேர்வு செய்துள்ளனர். அதனால், பின்னடைவுப் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. இதை உறுதி செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், பின்னடைவுப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.பி.சி மாணவர்களை, பொதுப்பிரிவுக்கு மாற்றிவிட்டு, பின்னடைவுப் பணியிடங்களில் தர வரிசையில் அடுத்த நிலையிலுள்ள எம்.பி.சி. மாணவர்களை நியமிக்க ஆணையிட்டுள்ளது. அது தான் சரியான தீர்ப்பாகும்; சமூகநீதியும் ஆகும். ஆனால், நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த ஆசிரியர் தேர்வு வாரியம் தொடர்ந்து மறுத்து வருகிறது. அதுமட்டுமின்றி, உயர்நீதிமன்றம் கூறியவாறு செய்தால், ஆசிரியர் பணியில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் அதிகரித்து விடும் என்று ஒரு முட்டாள்தனமான வாதத்தை முன்வைக்கிறது. பொதுப்போட்டிப் பிரிவில் சேரத் தகுதியான மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, அப்பிரிவில் இடம் கொடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றமே கூறிய பிறகும், அதை செயல்படுத்த ஆசிரியர் தேர்வு வாரியம் மறுக்கிறது; உச்சநீதிமன்றம் வரை மேல்முறையீட்டுக்கு செல்கிறது என்றால், அந்த அமைப்பின் நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு எம்.பி.சி மீது ஏதோ வன்மம் இருப்பதாகத் தானே அர்த்தம்? மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி இட ஒதுக்கீட்டு மறுக்கப்பட்ட போது, அதற்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்த தமிழக அரசும், மற்ற கட்சிகளும் முன் வந்தது பாராட்டத் தக்கது. ஆனால், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சமூக அநீதி இழைக்கப்படும் போது மட்டும் அதை கண்டும் காணாமலும் கடந்து செல்வது எந்த வகையில் நியாயம்? இந்த சமூகஅநீதிக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு குரல் கொடுத்திருக்க வேண்டாமா? இந்த விவகாரம் குறித்து கடந்த ஜனவரி மாதம் முதல் பாமக 5-க்கும் மேற்பட்ட அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. வேதியியலில் 34 பேர் தவிர தமிழ்ப் பாடத்தில் 28 பேர், பொருளியலில் 12 பேர், வரலாறு 6 பேர், புவியியல், அரசியல் அறிவியல், உயிரி வேதியியல் பாடங்களில் தலா ஒருவர் என மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 83 பேருக்கு சமூக அநீதி இழைக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத் தீர்ப்பையும் மதிக்காமல் வேதியியல் தவிர மற்ற பாடங்களுக்கான ஆசிரியர்கள் சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டுள்ளனர். அரசின் நிலைப்பாட்டுக்கு மாறாக செயல்படும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும். சமூகநீதிக்கு எதிராக செயல்படும் அவர்கள் அப்பொறுப்புகளில் இருந்து அகற்றப்பட வேண்டும். அவர்களுக்கு பதிலாக சமூகநீதியில் அக்கறை கொண்ட புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். சமூகநீதியின் புதிய பாதுகாவலராக அவதாரம் எடுத்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும், அவரது கூட்டணி கட்சித் தலைவர்களும் இந்த சமூக அநீதியை கண்டும், காணாமல் 7 மாதங்களாக வாய்மூடி மவுனம் காப்பது ஏன்? பாதிக்கப்பட்டவர்கள் வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பதாலா? எம்பிசிக்கள் பாதிக்கப்பட்டால் அமைதி காப்பது தான் புதிய சமூகநீதியா? வேதியியல் பாட முதுநிலை ஆசிரியர்கள் நியமன விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டை திரும்பப் பெற்று, சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி புதிய பட்டியல் தயாரித்து பணி ஆணை வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையனும் ஆணையிட வேண்டும். தமிழ், பொருளியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், உயிரி வேதியியல் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் நியமனத்திலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இழைக்கப்பட்ட அநீதியை போக்க அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்”. இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews