மொபைல்போன் தராத காரணத்துக்காக, புலியகுளம் பகுதியில், பத்தாம் வகுப்பு மாணவன், ரோட்டில் படுத்து புரண்டு அடம் பிடிப்பதாக, கல்வித்துறை அலுவலகத்துக்கு வந்த புகார், சிரித்து விட்டு எளிதில் கடந்து விடக்கூடியதல்ல. பேஸ்புக், வாட்ஸ்-ஆப், டிக்-டாக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள், மாணவர்களை வெகுவாக ஆக்கிரமித்துள்ளதை, பள்ளிகளில் நடக்கும் பெற்றோர் ஆசிரியர் கூட்டங்களே பதிவு செய்கின்றன. 'எவ்வளவு அடித்தாலும், மொபைல்போனை முன்னால் நீட்டினால், தானாக சிரிக்கிறான் சார்' என கூறி, பெற்றோர் ஆதங்கப்படுகின்றனர்.
ஆறாம் விரலாய் மாறிப்போன மொபைல்போன்களால், பிராய்லர் கோழிகளைபோல், எளிதில் பக்குவமடைந்து விடுகின்றனர் இன்றைய தலைமுறை மாணவர்கள். இவர்களிடம் இருந்து, டிஜிட்டல் தொழில்நுட்ப சாதனங்களை முற்றிலும் அப்புறப்படுத்தி விட முடியாது. ஆனால், பயன்படுத்தும் அளவீட்டை குறைக்கலாம் என்பது, உளவியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
உளவியல் நிபுணர் தினேஷ் பெரியசாமி கூறுகையில், ''மதிப்பெண் அடிப்படையில், முக்கியத்துவம் அளிக்கும் மனப்பாங்கு அதிகரித்து விட்டது. 'லைப் ஸ்கில்' எனும் வாழ்வியல் திறனை சொல்லிக் கொடுப்பதில்லை. பள்ளி மட்டுமல்ல, பெற்றோரும் குழந்தைகளுக்கான தேவையை புரிந்து கொள்ளாததால், சமூக ஊடகங்களை நாடுகின்றனர்.'டிக்-டாக்' போன்ற செயலி மூலம், உடனே 'லைக்' கிடைக்கிறது.
அதிகம் பகிரப்படுவதால், தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைப்பதாக மாணவர்கள் கருதுகின்றனர். இதில் நடிப்பதால் என்ன பலன் என்ற எதிர்கால திட்டமெல்லாம் கிடையாது.மொபைல் போன்களை குழந்தைகளிடம் அனுமதிக்கக்கூடிய, கால அவகாசத்தை பெற்றோரே நிர்ணயிக்க வேண்டும். அதிக கண்டிப்பும், அதிக சுதந்திரமும் ஆபத்தில் முடியும். சமூக வலைதளங்களில் குழந்தைகளின் செயல்பாட்டை கண்காணிக்க வேண்டும். குழந்தைகள் முன்னிலையில், அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துவதை பெற்றோரும் தவிர்க்க வேண்டும்,'' என்றார்.
பள்ளிகளில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் வெளிச்சத்துக்கு வருவதில்லை. மாணவ சமுதாயம் மீது, கல்வித்துறைக்கு இருக்கும் அக்கறையே இதற்கு காரணம். பள்ளி வளாகத்துக்குள் மொபைல்போனுக்கு அனுமதியில்லை. வீட்டுக்கு சென்றாலும், படிக்க போதுமான பாடத்திட்டங்கள் கொடுக்கப்படுகின்றன. இருந்தும் சமூக ஊடகங்களின் பக்கம் மாணவர்கள் செல்ல, அதிகப்படியான அழுத்தம் காரணமாகிறது. பெற்றோரை தாண்டி, ஒரு குழந்தையின் வளர்ச்சியில் ஆசிரியருக்கும் பங்குண்டு. ஒவ்வொரு மாணவரிடமும் உள்ள தனித்திறமையை பாராட்டி, அவர்களின் தவறுகளை திருத்த முயற்சிக்கலாம்.
- அருளானந்தம்,
மாவட்ட தலைவர்,
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.