மாணவி தற்கொலை எதிரொலி: ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் கண்காணிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 16, 2019

மாணவி தற்கொலை எதிரொலி: ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் கண்காணிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தேசிய உயர்கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி.,யில், கேரள மாணவியின் தற்கொலையை தொடர்ந்து, பேராசிரியர்களை கண்காணிக்கும் பணி துவங்கியுள்ளது. தேசிய உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான, சென்னை, ஐ.ஐ.டி.,யில் மாணவ - மாணவியரின் தற்கொலை சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. தற்கொலை ஓராண்டில் மட்டும், ஐந்து பேர் தற்கொலை செய்து கொண்டதாக, போலீசில் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த தற்கொலை சம்பவங்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நான்கு நாட்களுக்கு முன், கேரளாவை சேர்ந்த முதுநிலை மானுடவியல் பிரிவு மாணவி பாத்திமா லத்தீப், சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள, மாணவியர் விடுதி அறையில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம், ஐ.ஐ.டி.,யின் பேராசிரியர்களுக்கும், நிர்வாகத்துக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து, கேரள அரசு மற்றும் போலீஸ் தரப்பில், விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.உத்தரவுமாணவியின் தற்கொலை சம்பவத்துக்கு, சில பேராசிரியர்களின் மீதும் குற்றம் சாட்டப்படுகிறது.
இது குறித்து, சமூக வலைதளங்களில், பல்வேறு குற்றச்சாட்டுகள் பரவி வருகின்றன.பேராசிரியர்களின் ஒரு தலைபட்சமான நடவடிக்கையால் தான், இந்த நிலை ஏற்பட்டுள்ளது என, கூறப்படுகிறது. தன் சாவுக்கு, குறிப்பிட்ட சில பேராசிரியர்கள் தான் காரணம் என, அவர்களின் பெயரை குறிப்பிட்டு, தன் மொபைல் போனில், பாத்திமா லத்தீப் எழுதியுள்ளதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன. மாணவ - மாணவியரின் தற்கொலை சம்பவங்களை தடுக்கவும், சில பேராசிரியர்களின் ஒருதலைபட்சமான போக்கை தடுக்கவும், ஐ.ஐ.டி., நிர்வாகத்துக்கு, மத்திய அரசிடம் இருந்து, உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.இதையொட்டி, பேராசிரியர்கள் மற்றும் குழு மோதலை ஏற்படுத்தும் மாணவர்களை கண்காணிக்கும் பணி துவங்கி உள்ளது. 'மாணவி தற்கொலையை தொடர்ந்து, இனி, இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல், மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்' என, சென்னை ஐ.ஐ.டி., அறிவித்துள்ளது. தேசிய உயர் கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி.,யில், மாணவ, மாணவியரின் தற்கொலை சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. ஒவ்வொரு முறையும், போலீஸ் விசாரணையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் விடப்படுகின்றன.
ஆதாரங்கள்: மாணவர்களின் பாதுகாப்புக்கு, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதாகவும், அதனால் தான், தற்கொலை சம்பவங்கள் தொடர்வதாகவும், குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த, முதுநிலை பட்டப்படிப்பு மாணவி பாத்திமா லத்தீப், 18, என்பவர், ஐ.ஐ.டி., விடுதியில் தற்கொலை செய்த சம்பவம், மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்தொடர்பாக, கேரள அரசின் நேரடி தலையீட்டின் காரணமாக, போலீஸ் விசாரணை தீவிரமாகி உள்ளது. மாணவிக்கு, சில பேராசிரியர்கள் அளித்த துன்புறுத்தலுக்கான ஆதாரங்கள், போலீசிடம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.டி.ஜி.பி., அலுவலகத்தில், மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் மற்றும் கேரள அரசின் தரப்பில், மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை,
ஐ.ஐ.டி., நிறுவனம் சார்பில், நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை: எங்கள் கல்வி நிறுவனத்தில் படித்த, உறுதிமிக்க மாணவியான பாத்திமா லத்தீபின் திடீர் மறைவு, எதிர்பாராதது. மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் சென்னை ஐ.ஐ.டி., வளாக குடியிருப்புவாசிகளின் சார்பில், ஆழ்ந்த இரங்கலையும், மிகுந்த வருத்தத்தையும் தெரிவித்து கொள்கிறோம். இந்த சம்பவம் குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்துகின்றனர்; விசாரணை தீவிரமாக நடக்கிறது. போலீஸ் விசாரணைக்கு, முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். இதில், வெளிப்படையான விசாரணைக்கும், சட்டத்தின் அடிப்படையில் உண்மையை வெளிப்படுத்தவும், நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம். அதேநேரம், ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில், எங்கள் நிறுவனத்தின் மதிப்பை களங்கப்படுத்தும் வகையில், பதிவுகள்வெளியிட வேண்டாம்.
நடவடிக்கை: மாணவி பாத்திமா லத்தீபின் மரணத்துக்கு இரங்கல் தெரிவிப்பதுடன், வருங்காலங்களில், இந்த சம்பவம் நடக்காமல் பார்த்து கொள்வோம். மாணவர்களுக்கு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், முழு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்வோம். எனவே, ஐ.ஐ.டி., குறித்து தயவு செய்து, யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. 'என் மகளின் மரணம் இறுதியாக இருக்கட்டும்' மாணவியின் மரணம் குறித்து, அவரது தந்தை அப்துல் லத்தீப், சென்னையில் உள்ள, டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பின், அவர் அளித்த பேட்டி: என் மகள் பாத்திமா லத்தீப் நன்றாக படிக்க கூடியவர். தன் வாழ்வில் நடக்கும் அனைத்து சம்பவங்களையும், கடிதம் எழுதி வைக்கும் பழக்கம் உள்ளவர். சென்னை, ஐ.ஐ.டி.,யில், என் மகளுக்கு, பல வழிகளிலும் தொல்லை கொடுக்கப்பட்டு உள்ளது. தனக்கு நேர்ந்த துன்புறுத்தல்கள் குறித்து, அவ்வப்போது, மொபைல் போனில் என்னிடம் தெரிவித்தார்; நான் தைரியம் சொல்லி வந்தேன்.
தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு, என் மகள் கோழை அல்ல. இறப்பதற்கு ஒரு நாள் முன், இரவு, 8:00 மணிக்கு, ஐ.ஐ.டி., கேன்டீனில் அமர்ந்து அழுதுள்ளார். அவருக்கு எல்லைமீறிய தொல்லைகள் கொடுக்கப்பட்டு உள்ளன. என் மகள் மின்விசிறியில், கயிறால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என, கூறுகின்றனர். அவருக்கு கயிறு எப்படி கிடைத்தது? என் மகளின் மொபைல் போனில், தன் மரணத்திற்கு, பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தான் காரணம் என, குறிப்பிட்டுள்ளார். மேலும், இரு பேராசிரியர்களின் பெயரையும் பதிவு செய்துள்ளனர். போலீசார், அந்த மொபைல் போனை, எங்கள் முன் ஆய்வு செய்ய வேண்டும். அப்போது தான், மேலும் கடிதங்கள் எழுதி உள்ளாரா என, தெரிய வரும். என் மகள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற, சந்தேகம் எழுகிறது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். தமிழக, டி.ஜி.பி.,யிடம், சில ஆதாரங்களை ஒப்படைத்துள்ளோம். டி.ஜி.பி., மற்றும் முதல்வர் இ.பி.எஸ்., மீதும், எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. என் மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என, நம்புகிறேன். அவளது மரணம் இறுதியாக இருக்கட்டும். இனி, எந்த மாணவிக்கும், இந்த நிலை ஏற்படாதவாறு, காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அப்துல் லத்தீப் கூறினார்.
விசாரணையை துவக்கியது சிறப்பு புலனாய்வு குழு: மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கை, சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர், ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான சிறப்பு குழுவினர் விசாரித்து வருகின்றனர். மாணவி தங்கியிருந்த விடுதி அறையில், நேற்று சோதனை நடத்தினர். மேலும், பாத்திமா லத்தீப்பின் உடைமைகளை கைப்பற்றியும் ஆய்வு செய்தனர். மாணவியின் நெருங்கிய தோழியர், சுதர்சன் பத்மநாபன் உள்ளிட்ட பேராசிரியர்கள் என, 25 பேரிடம் விசாரணை நடத்தி தகவல்களை திரட்டி உள்ளனர். பாத்திமா லத்தீப்புக்கு, செய்முறை தேர்வில், சுதர்சன் பத்மநாபன், 18க்கு, 13 மதிப்பெண் வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது. தனக்கு, ஐந்து மதிப்பெண் குறைக்கப்பட்டது குறித்து, அவருக்கு, பாத்திமா லத்தீப் இ - மெயில் அனுப்பி உள்ளார். அதனால், விடைத்தாள்களையும், போலீசார் கைப்பற்றி உள்ளனர். மாணவியின், இ - மெயில் பதிவுகள், டைரி உள்ளிட்டவைகளையும் போலீசார் ஆய்வு செய்கின்றனர். இதற்கிடையில், மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தி.மு.க,வினர் நேற்று, ஐ.ஐ.டி., முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை, கோட்டூர்புரம் போலீசார் கைது செய்தனர்.
முதல்வரை சந்தித்தார் மாணவியின் தந்தை: மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ., முகமது அபூபக்கர் ஆகியோர், முதல்வர் இ.பி.எஸ்.,சை, நேற்று அவரது வீட்டில் சந்தித்தனர். மாணவி பாத்திமா தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மனு கொடுத்தனர். ''மூன்று காவல் துறை அதிகாரிகள் இடம் பெற்ற, விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில், பெண் அதிகாரியும் உள்ளார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, முதல்வர் உறுதி அளித்து உள்ளார்,'' என, அபூபக்கர் எம்.எல்.ஏ., கூறினார். முதல்வரை சந்தித்த பின், தி.மு.க., தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலினையும் சந்தித்து பேசினர். தமிழக கவர்னரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews