ஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 02, 2019

Comments:0

ஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது? எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும் தவிப்பதை நாம் பார்க்கலாம். அப்படி தொலைந்து போனால் அல்லது மழையில் நனைந்து கிழிந்து அழிந்து போனால் அவற்றை திரும்பப் பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம். 1. இன்ஷூரன்ஸ் பாலிசி! யாரை அணுகுவது..? பாலிசியை விநியோகம் செய்த கிளையை. என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல். எவ்வளவு கட்டணம்? ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும். கால வரையறை: விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும். நடைமுறை: நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும். 2. மதிப்பெண் பட்டியல்! யாரை அணுகுவது..? பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி. என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது. எவ்வளவு கட்டணம்? உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105. மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505. கால வரையறை: விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள். நடைமுறை: காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும். 3. ரேஷன் கார்டு! யாரை அணுகுவது..? கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர். என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை எவ்வளவு கட்டணம்? புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும். கால வரையறை: விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும். நடைமுறை: சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.
4. டிரைவிங் லைசென்ஸ்! யாரை அணுகுவது? மாவட்டப் போக்குவரத்து அதிகாரி. என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண். எவ்வளவு கட்டணம்? கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்). கால வரையறை: விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம். நடைமுறை: காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம். 5. பான் கார்டு! யாரை அணுகுவது? பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை. என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள். எவ்வளவு கட்டணம்? அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய். கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள். நடைமுறை: பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். 6. பங்குச் சந்தை ஆவணம்! யாரை அணுகுவது? சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர். என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண். எவ்வளவு கட்டணம்? தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும். கால வரையறை: விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள். நடைமுறை: முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.
7. கிரயப் பத்திரம்! யாரை அணுகுவது..? பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர். என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள். எவ்வளவு கட்டணம்? ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய். கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும். நடைமுறை: கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும். 8. டெபிட் கார்டு! யாரை அணுகுவது..? சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர். என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? கணக்குத் தொடர்பான விவரங்கள். எவ்வளவு கட்டணம்? ரூ.100. கால வரையறை: வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள். நடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும். 9. மனைப் பட்டா! யாரை அணுகுவது..? வட்டாட்சியர். என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.? நகல் பட்டா கோரும் விண்ணப்பம். எவ்வளவு கட்டணம்? ரூ.20. கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும். நடைமுறை: முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.
10. பாஸ்போர்ட்! யாரை அணுகுவது..? மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள். என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம். எவ்வளவு கட்டணம்? ரூ.4,000. கால வரையறை: இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும். நடைமுறை: பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள். 11. கிரெடிட் கார்டு! யாரை அணுகுவது? நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம். என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள். எவ்வளவு கட்டணம்? ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்). கால வரையறை: 15 வேலை நாட்கள். நடைமுறை : கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும். தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும். 12.ஆதார் அட்டை தொலைந்து போனால்? உங்கள் ஆதார் அட்டை தொலைந்து போனால் பயம் கொள்ளாதீர்கள். அதன் பிரதியை பெற்றுக்கொள்வதற்கு மீண்டும் விண்ணப்பம் செய்ய எளிமையான வழிகள் உள்ளது. இருப்பினும் ஆதார் அட்டையை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அதற்கு காரணம் அதில் உள்ள உங்கள் தகவல்களை கொண்டு உங்கள் நிதி சார்ந்த தரவுகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். உங்களுக்கு உங்களுடைய ஆதார் எண் நினைவிருந்தால் மற்றும் / அல்லது பதிந்த போது கொடுக்கப்பட்ட ஆதார் அட்டை ஒப்புகை சீட்டு உங்களிடம் இருந்தால், ஆன்லைன் மூலம் ஆதார் அட்டையின் பிரதியை எடுத்துக் கொள்ளலாம்.
தொலைந்த ஆதார் அட்டை அல்லது அதன் பிரதியை ஆன்லைன் மூலம் எப்படி விண்ணப்பிக்க கீழ்கூறிய வழிமுறைகளை பின்பற்றவும்: ஈ-ஆதார் ஆன்லைன் முகவாயிலுக்கு செல்லவும். ஆதார் ஒப்புகை சீட்டில் உள்ள பதிவீடு விவரங்களை (பதிவு எண் மற்றும் தேதி நேரம், குடியிருப்பவரின் பெயர், மற்றும் பின்கோட்) நிரப்ப வேண்டும். மாறாக, உங்களுக்கு உங்கள் ஆதார் அட்டை எண் தெரிந்திருந்தால், மேலே உள்ள "I have" தேர்வில் உள்ள "Aadhaar" என்ற ரேடியோ பட்டனை அழுத்தவும். நீங்கள் பதிந்துள்ள கைப்பேசி எண்ணில் ஓ.டி.பி. (ஒன் டைம் பின்) கடவுச்சொல் ஒன்றை குறுந்தகவல் மூலம் பெறுவீர்கள். கடவுச்சொல்லை உள்ளீடு செய்தவுடன் ஆதார் அட்டையின் பிரதியை தரவிறக்கம் செய்யும் தேர்வை நீங்கள் காணலாம். இந்த கோப்பு பி.டி.ஃஎப். வடிவத்தில் இருக்கும். மேலும் பாதுகாப்பிற்காக அது கடவுச்சொல் மூலமாக பாதுகாக்கப்பட்டிருக்கும். கடவுச்சொல் தெரியவில்லையே என பயப்பட வேண்டாம். உங்கள் பின் கோடே உங்கள் கடவுச்சொல்லாகும். அசலை போலவே அச்சிடப்பட்ட பிரதியும் அனைத்து இடங்களிலும் செல்லுபடியாகும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews