25ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
தமிழகம் முழுவதும் 23 அரசு மருத்துவமனைக் கல்லூரி மருத்துவமனைகள், 32 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 178 வட்ட மருத்துவமனைகள், 1765 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 134 நகர சுகாதார நிலையங்கள், 8706 துணை சுகாதார நிலையங்கள், 416 நடமாடும் மருத்துவமனைகள் உள்ளன. தமிழக அரசு மருத்துவமனைகளில் 18,070 ஆயிரம் டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அரசாணை 354ல் கூறியுள்ளபடி ஊதிய உயர்வை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 25ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை டாக்டர்கள் தொடங்கினர்.
5 டாக்டர்கள் சாகும் வரை உண்ணா விரதப் போராட்டம்
போராட்டத்தை அரசு கண்டுகொள்ளாத நிலையில், 5 டாக்டர்கள் அன்று பிற்பகலில் முதல் சாகும் வரை உண்ணா விரத போராட்டத்தை தொடங்கினர். இந்நிலையில் டாக்டர்கள் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நடைபெற வேண்டிய அறுவை சிகிச்சைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் நிர்வாகிகளை அழைத்து சுகாதாரத்துறை அமைச்சர் பேசி கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதியளித்தார். ஆனால் டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்தனர். இதனால் நேற்றும் அரசு மருத்துமவனைகள் செயல்பாடு முடங்கியது. போதுமான டாக்டர்கள் பணியில் இல்லாத நிலையில், குறைந்த எண்ணிக்கையில் பணிக்கு வந்த டாக்டர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு பல மடங்கு பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏழாவது நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுக்கு பிரேக் இன் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.சென்னை மருத்துவ கல்லூரி டீன் உள்ளிட்டோர் மூலம் இந்த பிரேக் இன் நோட்டீஸானது வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மருத்துவர்களுக்கு இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.பிரேக் இன்சர்வீஸ் நடவடிக்கைக்கு உள்ளானால் அவர்களது பணியிடமானது காலி பணியிடமாக கருதப்பட்டு மாற்று மருத்துவர் நியமனம் செய்யப்படுவார். அதேபோல் இந்த நடவடிக்கையின் கீழ் அரசு மருத்துவர்களின் பணிமூப்பு சலுகையும் ரத்தாகும். பணிக்கு வராத மருத்துவர்கள் எண்ணிக்கையை கணக்கிட்டு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
5 பேர் பணியிட மாற்றம்
இதனிடையே சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் 5 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மருத்துவர்கள் பெருமாள் பிள்ளை, ரமா, சுரேஷ், முகமது அலி, பாலாமணிகண்டனை பணியிட மாற்றம் செய்து சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 5 மருத்துவர்களும் கடந்த 6 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தனர். அதே போன்று தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிப்புரியும் 4 அரசு மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 4 மருத்துவர்களில் 2 பேர் கடலூருக்கும், 2 பேர் மதுரைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.