400 மொழிகளில் எழுதத் தெரிந்த 46 மொழிகளில் பேசத் தெரிந்த மாணவன்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 21, 2019

Comments:0

400 மொழிகளில் எழுதத் தெரிந்த 46 மொழிகளில் பேசத் தெரிந்த மாணவன்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு திறமை ஒளிந்துகிடக்கிது, அதை வெளிக்கொண்டுவருவதே நம் கடமை என்பார் விவேகானந்தர். அந்தக் கடமையை ஒரு ஆசிரியராகத் தன் மகனுக்குப் பயிற்றுவித்து இன்றைக்கு 46 மொழிகளில் பேசவும், 400 மொழிகளில் டைப் செய்யவும் தெரிந்து வைத்திருக்கிறார் ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் கிராமத்தைச் சேர்ந்த மாணவன் மஹ்மூத் அக்ரம். இதுகுறித்து அவனுடைய தந்தை மொழிப்பிரியன் அப்துல் ஹமீதுவிடம் பேசினோம்… ‘‘நாங்கள் தற்போது சென்னை புழல் பகுதியில் வசித்துவருகிறோம். அக்ரமிற்கு 13 வயது ஆகிறது, 10 வயதில் ஒரு தங்கையும், 3 வயதில் ஒரு தம்பியும் உள்ளனர். சிறுவயதிலேயே மொழிகளைக் கற்பதென்றால் அவனுக்கு உயிர். தற்போது 400 மொழிகளுக்கு மேல் படிப்பதற்கும், எழுதுவதற்கும் தெரிவதோடு வேகமாக டைப்பிங் செய்வான். ஜெர்மனி, துருக்கி நாடுகளில் நடைபெற்ற தனித்திறன் போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன் திறமையை நிரூபித்து தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளான்.’’ என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தவர் எப்போதிருந்து மொழித்திறனுக்கான பயிற்சியில் ஈடுபட்டார், என்னென்ன விருதுகள் பெற்றுள்ளார் என்பதை விவரித்தார்.
‘‘இந்த பல மொழிகளின் ஆற்றலைத் தனது 4 வயது முதல் கற்கத் தொடங்கினான். இந்திய, வெளிநாட்டு மற்றும் பழங்காலக் கல்வெட்டு மொழிகளைக் கற்றுள்ளதோடு 46 மொழிகளில் பேசுகிறான். தற்போது இம்மொழிகளில் மிக சரளமாகப் பேசுவதற்கு பயிற்சியெடுத்துவருகிறான். தற்போது அக்ரம், NIOS முறையில் (National Institute of Open Schooling) எட்டாம் வகுப்பு படித்து தேர்வு எழுதியுள்ளான். தன்னுடைய மொழித் திறமையை மேம்படுத்திக்கொள்வதற்காக இஸ்ரேல் நாட்டு ஆன்லைன் பள்ளியில் மொழிகளைக் கற்றுவருகிறான். தன் மொழித்திறமைக்காக இதுவரை, World Youngest Multi-Language Typist Award 2014, South Africa Excellence Award -2014, Saadhanai Tamizhagam Award - 2015, Young Achievers Award - 2016, Indian Achiever Book of Records Award 2016, Limra overseas Education Award - 2017, India Book of Records Award - 2017, Panmozhi Vithagar Award 2017, Children’s Book of Records Award 2017, TN MEET Young Brilliance Award 2017, Turkey Young Talent Award 2018, Germany Young Talent Award 2019, Will Medal Book of Records Award- 2019, Young Abdul Kalam Award - 2019 உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளான். ஒரு மொழியைப் பேசுவது என்பது எளிது. அந்த மொழியைப் பேசுபவர்களிடம் நாமும் பேசிக்கொண்டிருந்தால் அம்மொழியைப் பேசிவிடலாம். அந்த மொழியைப் படிப்பது, எழுதுவது, டைப்பிங் செய்வது என்பது மிக மிக கடினம். ஆனால், 400 மொழிகளைக் கற்பது என்பது சாதாரண விஷயமல்ல. பொதுவாக ஒரு மொழியை டைப்ரைட்டிங் செய்வது என்பது எளிதல்ல. எந்த மொழியையும் நாம் டைப்ரைட்டிங் செய்வதற்கு முன்னால் உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள் மற்றும் கூட்டெழுத்துகள் அதனுடைய குறிகளில் அனைத்தையும் கற்றிருக்க வேண்டும்.
அதிலும் அந்தந்த மொழிகளை கம்ப்யூட்டரில் யுனிக்கோடு முறையில் வேகமாக தட்டச்சு செய்வது மிக மிக ஆச்சரியம். இவை மட்டுமில்லாமல் பழங்காலக் கல்வெட்டு மொழிகளையும் கற்று, அதையும் தட்டச்சு செய்வது இன்னும் ஆச்சரியத்தை அதிகப்படுத்துகிறது. எகிப்தியர்களின் பிரமிடை பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. அந்த பிரமிடில் பொறிக்கப்பட்டிருக்கும் சித்திர எழுத்துகளை கற்றுக்கொண்டு டைப்பிங் செய்கிறான். அதே போல கி.மு. 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோக மன்னரின் சாரநாத் கல்தூணை நாம் வரலாற்றில் படித்திருப்போம். அந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள பிராமி எழுத்துகளை கற்றுக்கொண்டு டைப்பிங் செய்கிறான். அதேபோல கி.பி. 5ம் நூற்றாண்டின் தமிழின் முந்தைய எழுத்து வடிவமான கிரந்த எழுத்துகளை கற்றுக்கொண்டு டைப்பிங் செய்கிறான். கிறிஸ்துவ இயேசுவின் தாய்மொழியாகக் கருதப்படுகிற அரமேயம் (Armaic) மொழி 3000 ஆண்டு பழைமையைக் கொண்டது. இதையும் கற்றுக்கொண்டு டைப்பிங் செய்கிறான். தாமாகச் சிந்தித்து ஒரு புதிய மொழியின் எழுத்துகளை அனைவரும் எளிதாக கற்றுக்கொள்ளும் வகையில் வடிவமைத்துள்ளான். அந்தப் புதிய மொழியின் எழுத்துகளை டைப்பிங் செய்ய ஏதுவாக, ஃபாண்ட்டாக வடிவமைத்துள்ளான். அந்தப் புதிய எழுத்திற்கு ‘அத்தா ஸ்கிரிப்ட்’ என்றும் பெயரிட்டுள்ளான். மொழிகளைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியராகவும், இன்னும் மோட்டிவேஷனல் பேச்சாளராகவும் இருந்து வருகிறான். கடந்த 3 ஆண்டுகளில் 157 நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் நினைவாற்றல் பயிற்சியை வழங்கியுள்ளான். தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற வெளிமாநிலங்களிலும்,வெளிநாடுகளிலும் போய் மாணவர்களுக்கு மொழிப்பயிற்சி மற்றும் நினைவாற்றல் பயிற்சி கொடுத்துவருகிறான்’’ என்றார் மொழிப்பிரியன் அப்துல் ஹமீது.
மாணவன் அக்ரமிடம் பேசியபோது, ‘‘அதிகாலை 4 மணியிலிருந்து காலை 9 மணி வரை தான் மொழிக்காகப் பயிற்சி செய்யும் நேரம். மற்ற நேரங்களில் தினசரி நடைமுறை வாழ்க்கைக்கான விஷயங்கள் கற்றுக்கொள்வேன். தமிழின் வாழ்வியல் நூல்களைப் பல மொழிகளில் மொழிபெயர்க்கத் திட்டமிட்டுள்ளேன், பழங்காலக் கல்வெட்டு விஷயங்களை ஆய்வு செய்ய வேண்டும். தமிழின் பெருமையை உலகிற்கு உணர்த்த வேண்டும். நான் கற்ற மொழிகள் அனைத்தும் தாய்மொழியான தமிழ் மூலமாகவே கற்றுக்கொண்டேன். தமிழ்மொழி மூலமாக எளிதாக அனைத்து மொழிகளைப் புரிந்துகொள்ள முடிந்தது. எதிர்காலத்தில் IFS Officer (Indian Foreign Service) ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதே நேரத்தில் பழந்தமிழ் நூல்களை பல மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும். இதற்காகத்தான் நான் 4 வயதில் பழந்தமிழ் எழுத்துக்கான தமிழ்பிராமி, கிரந்த, வட்டெழுத்துக்களைப் படித்தேன். எல்லா பெற்றோர்களையும் போல இதை படி, அதைப் படி என்று வற்புறுத்தாமல், என் பெற்றோர் என்னைச் சுதந்திரப் பறவையாக விட்டுவிட்டார்கள். அதனால், நான் நினைத்த நேரம் படிக்கிறேன். நினைத்த நேரம் விளையாடுகிறேன். நிறைய விஷயங்களைப் பற்றி யோசிக்கிறேன்’’ என்கிறான் மாணவன் அக்ரம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews