👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லாததுடன், பேராசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவ, மாணவிகள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை செங்கம் சாலையில் அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. அரை நூற்றாண்டு கால பெருமை கொண்ட இக்கல்லூரியில் படித்தவர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியுள்ளனர் என்ற பெருமையையும் கொண்டது. குறிப்பாக இங்கு படித்தவர்கள் அரசு அதிகாரிகளாகவும், எம்எல்ஏ என்று இன்றும் உள்ளனர். பெரும்பாலும் ஊரகப்பகுதிகளை சேர்ந்த ஏழை, நடுத்தர பிற்படுத்தப்பட்ட குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகள் படிக்கும் இக்கல்லூரியில் ஆரம்பத்தில் சுமார் 1000 பேர் படித்து வந்தனர். நாளடைவில் இக்கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற கிராமப்புறங்களை சேர்ந்த 6 ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இங்கு காலை, மாலை என இரண்டு ஷிப்டுகளாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இக்கல்லூரிக்கு பெரும்பாலான மாணவ, மாணவிகள் பஸ்களிலேயே வந்து செல்கிறார்கள். உள்ளூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மாணவிகள் சிலர் சைக்கிள்களிலும், நடந்தும் கல்லூரிக்கு வருகின்றனர். இவ்வாறு கல்லூரிக்கு வந்து செல்லும் மாணவ, மாணவிகளுக்கு போதுமான பஸ் வசதி இல்லாததாலும், குறித்த நேரத்தில் பஸ்கள் இயக்கப்படாததாலும் மாணவ, மாணவிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.
மேலும் கல்லூரி முடிவடைந்த பிறகு மாணவ, மாணவிகள் தங்களது வீட்டுக்கு திரும்பிச் செல்வதற்கு பஸ் வசதி போதுமான அளவு இல்லாததால் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். கல்லூரி முடிந்ததும் தங்களுடைய ஊர்களுக்கு செல்ல செங்கம், பெங்களூர் மார்க்கமாக இருந்து வரும் பஸ்களிலேயே அவர்கள் செல்ல வேண்டியது உள்ளது.
அவ்வாறு வரும் பஸ்களில் ஏற்கனவே பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூட்ட நெரிசலில் மாணவ, மாணவிகள் முண்டியடித்து ஏறிச் செல்கின்றனர். பஸ்களில் நிற்க கூட இடம் இல்லாத பட்சத்தில் ஆபத்தை உணராமல் பஸ்களில் தொங்கி கொண்டு செல்ல வேண்டிய நிலைக்கு மாணவ, மாணவிகள் தள்ளப்பட்டு உள்ளனர். இதனால் மாணவ, மாணவிகள் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. சில நேரங்களில் இந்த இடங்களில் பஸ்கள் நிற்பதும் இல்லை. எனவே தங்களுக்கு கூடுதல் பஸ் வசதி கேட்டு பல முறை கல்லூரி மாணவ, மாணவிகள் முறையிட்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் செங்கம், பெங்களூர் மார்க்கமாக வரும் அரசு ரூட் பஸ்கள் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் பெரும்பாலும் நிற்பதில்லை. டவுன் பஸ்கள் மட்டுமே நிற்கின்றன. அவ்வாறு நிற்கும் பஸ்களில் கூட்டம் அதிகமாக உள்ளது.
திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் இருந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கென பிரத்யேகமாக டவுன்பஸ்கள் இயக்கப்படுவதைபோல, மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு கலைக் கல்லூரிக்கென கூடுதலாக டவுன் பஸ்களை கல்லூரி வகுப்புகள் தொடங்கப்படும் நேரத்திலும், கல்லூரி வகுப்புகள் முடிவடையும் நேரத்திலும் இயக்க வேண்டும். இது ஒருபுறம் என்றால் போதிய ஆசிரியர்கள் இன்றியும் கல்லூரி தவித்து வருகிறது. இக்கல்லூரியில் தற்காலிக மற்றும் நிரந்தரமாக 90 பேராசிரியர், பேராசிரியைகள் பணியாற்றி வருகிறார்கள். தற்போது இக்கல்லூரியில் சுமார் 25 பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் சம்பந்தப்பட்ட பாடங்களை தற்போதுள்ள பேராசிரியர்களை வைத்தே நடத்துகிறார்கள்.
இதனால் மாணவ, மாணவிகள் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் இக்கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு போதுமான அளவு வகுப்பறைகளோ, கழிப்பிட வசதியோ, தண்ணீர் வசதியோ இல்லை. இது ஒருபுறம் என்றால் புதிய பாடப்பிரிவுகளும் பல ஆண்டுகளாக தொடங்கப்படவே இல்லை. எனவே திருவண்ணாமலை அரசு கல்லூரியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாணவ, மாணவிகளின் கோரிக்கையாக உள்ளது.
ஆசிரியர் கழக கிளை நிர்வாகிகள்
இதுகுறித்து தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரி ஆசிரியர் கழக திருவண்ணாமலை கிளை நிர்வாகிகள் கூறியதாவது: எங்கள் கல்லூரிியில் படிக்கும் சுமார் 6 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு தேவையான எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. குறிப்பாக கழிப்பிட வசதி, தண்ணீர் வசதி போதுமானஅளவுக்கு இல்லாததால் மிகவும் சிரமப்படுகிறார்கள். வகுப்பறைகளும் கூடுதலாக கட்டப்பட ேவண்டும். இன்னும் சொல்லப்போனால் பேராசிரியர்களுக்கே கழிப்பிட வசதி இல்லை. புதிய பாடப்பிரிவுகளும் தொடங்கப்பட வேண்டும்.
மாணவர்கள் கல்லூரிக்கு வரும் சமயத்திலும், கல்லூரிமுடிந்து விட்டுக்கு திரும்பி செல்லும் நேரத்திலும் போதிய பஸ் வசதி இல்லை. இதனால் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். செங்கம், பெங்களூர் மார்க்கத்தில் இருந்து வரும் பஸ்களிலேயே தொங்கிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சொல்லியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. மேலும் எங்கள் கல்லூரி மாணவர்களுக்கு இதுவரை பஸ்பாஸ் வழங்கப்படவில்லை. இதனால் மாணவ, மாணவிகள் அனைவரும் காசு கொடுத்தே பஸ்களில் செல்கிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
மண்டல இணை இயக்குனர் எழிலன்
திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் போதுமான பேராசிரியர்கள் இல்லை என்ற தகவல் எனது கவனத்துக்கு வந்தது. இதையொட்டி இங்கு தேவையான பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் இக்கல்லூரிக்கு பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அதேபோல மாணவ, மாணவிகளுக்கு போதுமான அளவுக்கு கழிப்பிட வசதி, குடிநீர் வசதி இல்லை. வகுப்பறைகள் இல்லை போன்ற குறைகளை களைய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் மாணவ, மாணவிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U