‘ஸ்மார்ட்’ வகுப்பறையுடன் கற்பித்து அசத்தும் மலை கிராம அரசு பள்ளி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 20, 2019

‘ஸ்மார்ட்’ வகுப்பறையுடன் கற்பித்து அசத்தும் மலை கிராம அரசு பள்ளி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே அரசு பள்ளி ஆசிரியர்களின் கூட்டு முயற்சியால் நவீன முறையில் பாடம் கற்பிக்கப்படுகிறது. இதனால் மலைவாழ் மாணவர்கள், ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடி அருகே அச்சம்பட்டி மலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஏற்காடு சேர்வராயன் மலையின் வடக்கு பகுதியில் மலையடிவாரத்தில் அச்சம்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 94 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் ராமு உள்ளிட்ட 7 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளிக்கு மலைவாழ் சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் மட்டுமே கல்வி பயில வருகின்றனர். இந்த மாணவர்கள் பள்ளிக்கு ஆர்வமுடன் வரவேண்டும் என்பதற்காக, பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து மாறுதல் மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்களின் வருகை மற்றும் மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க ஆலோசனை மேற்கொண்டனர். இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் அதிகமாக விரும்புவது தொலைக்காட்சி மற்றும் செல்போன் பார்ப்பதையே.
இதனால் அவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில், பள்ளியில் தொலைக்காட்சி மற்றும் செல்போன் வழியாகவே கல்வி கற்பிக்க முடிவு செய்தனர். இதற்காக ஆசிரியர்கள் தங்களது சொந்த பங்களிப்புடன் மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதற்காக, ஸ்மார்ட் டிவி, புரஜெக்டரை சுமார் ₹1 லட்சம் செலவில் வாங்கி பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் அறிமுகம் செய்தனர். மேலும் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள், அவர்களே செல்போன்களில் அதிவிரைவு குறியீடு வைத்து தேவையான பாடங்களை பயின்று வருகின்றனர். அதேபோல் 6 மற்றும் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு இணையதளத்தில் யூ டியூப் வழியாக பாடப்புத்தகத்தில் உள்ள பாடங்களை தாமாகவே காணொளியாக அகன்ற திரையில் தெளிவாக காணும் வகையில், அன்றைய பாடத்தை அன்றே அவர்கள் படிக்கும் வகையில் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் விடுமுறை எடுக்கும் நாட்களில், மாணவர்கள் தாங்களாகவே, தங்களது பாடப்புத்தகத்தில் உள்ள பாடங்களுக்கான வீடியோக்களை யூ டியூப்பில் தேடி, புரஜெக்டர் வழியாக பயிலுகின்றனர். ஆசிரியர் செல்போனை கையில் வைத்துக்கொண்டு, மாணவர்கள் ஸ்மார்ட் டிவியில் பார்த்துக்கொண்டு பதில் அளிக்கின்றனர். இவ்வாறு ஆசிரியர்கள் கூட்டு முயற்சியால் செய்யப்பட்டுள்ள நவீன வசதிகளை கண்ட கிராம மக்கள், தனியார் பள்ளிகளுக்கு அனுப்பிவந்த தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க தொடங்கியுள்ளனர். இதனால் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. நடப்பாண்டு தனியார் பள்ளியில் இருந்து விலகிய 6 மாணவர்கள்,இப்பள்ளியில் சேர்ந்துள்ளனர்.
தினமும் காலை இறைவணக்க கூட்டத்தில் மாணவர்கள் தமிழ், ஆங்கில நாளிதழ்களை வாங்கி வந்து செய்திகளை வாசிக்கின்றனர். அதேபோல் தினமும் நீதிக்கதைகள் போதிக்கப்படுகிறது. மேலும் தனியார் பள்ளிகளை போல் ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் கற்றுக் கொடுக்கின்றனர். முதல் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம் முறையாக படிப்பதற்கு கற்றுக் கொடுக்கின்றனர். மலைவாழ் மக்களுக்கு போதிய படிப்பறிவு இல்லாததால், தினமும் பள்ளியில் இருந்து மாணவர்களுக்கு வழங்கப்படும் வீட்டுப்பாடங்களை பெற்றோர்கள் சொல்லித்தர இயலாது என்பதால், பள்ளி முடிந்து மாலை வேளையில் கூடுதலாக ஒரு மணி நேரம் ஆசிரியர்கள் மாணவர்களை அமர வைத்து வீட்டு பாடங்களை முடிக்க வைத்து, பின் வீடுகளுக்கு அனுப்பி விடுகின்றனர். தங்களுக்கு பிடித்த வழியில் பாடங்களை கற்றுக் கொடுப்பதால் மாணவர்கள் பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் ஆர்வத்துடன் வந்து படிக்கின்றனர்.
இதுகுறித்து பள்ளியின் அறிவியல் ஆசிரியர் கலையரசன் கூறுகையில், 1ம் வகுப்பு முதல் 2ம் வகுப்பு வரை ஸ்மார்ட் டிவி மூலமும், 3ம் வகுப்பு முதல் 4ம் வகுப்பு வரை டிவி மூலமும், 6, 7, 8ம் வகுப்புகளுக்கு ஸ்மார்ட் டிவி மற்றும் புரஜெக்டர் மூலமாக பாடம் நடத்தப்படுகிறது. அடுத்தது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் புரஜெக்டர் அமைக்க தேவையான முயற்சிகளை ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். பொதுவாகவே மலை கிராம பள்ளிகள் என்றால் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமலும், ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமலும் இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கும். ஆனால் எங்கள் பள்ளி இதற்கு முற்றிலும் முரணாக, பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் கூட்டு முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுவதால் மலை கிராமத்தில் உள்ள ஏழை மலை வாழ் மக்களின் குழந்தைகளுக்கும் நவீன முறையில் தரமான கல்வி கற்பிக்கப்பட்டு வருவது மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews