நீட் தேர்வு மோசடி விஸ்வரூபம் 50 மாணவர்கள் ஆள்மாறாட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 29, 2019

Comments:0

நீட் தேர்வு மோசடி விஸ்வரூபம் 50 மாணவர்கள் ஆள்மாறாட்டம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தை கலக்கி வரும் நீட் தேர்வு முறைகேடு, வடமாநிலங்களில் நடைபெற்றுள்ளதும், சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. உதித் சூர்யா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் மாணவி உள்பட 3 மாணவர்கள் மற்றும் அவர்களது 3 பெற்றோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு டாக்டர், ஒரு மாணவர் மற்றும் புரோக்கரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் டாக்டராக இருப்பவர் வெங்கடேசன். இவரது மகன் உதித் சூர்யா. இவர், 2019-20ம் ஆண்டு ‘நீட்’ தேர்வின் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் இளங்கலை மருத்துவ படிப்பில் சேர்ந்தார். கடந்த சில நாட்களுக்கு முன், அசோக் கிருஷ்ணன் என்ற பெயரில் உதித்சூர்யா படிக்கும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு இ.மெயில் மூலம் புகார் ஒன்று வந்தது.
அதில், ‘உதித்சூர்யா ஆள்மாறாட்டம் செய்து ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். தேர்வு விண்ணப்பத்தில் உள்ள மாணவரின் புகைப்படத்திற்கும் தற்போது தேனி மருத்துவக் கல்லூரியில் படிக்கும் உதித்சூர்யாவின் புகைப்படத்திற்கும் வித்தியாசங்கள் உள்ளன’ என்று அதில் கூறப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, கல்லூரி நிர்வாகம் புகாரின் பேரில் தேனி மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. டிஜிபி ஜாபர்சேட் உத்தரவின்பேரில், ஐஜி சங்கர் மேற்பார்வையில் எஸ்பி விஜயகுமார் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் நடத்திய விசாரணையில், ‘பெரிய அளவில் ‘நெட்ஒர்க்’ அமைத்து பலர் முறைகேடாக நீட் தேர்வு எழுதியது தெரியவந்தது. அதையடுத்து, மாணவன் உதித்சூர்யா மற்றும் அவரது தந்தைடாக்டர் வெங்கடேசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். டாக்டர் வெங்கடேசன் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் கூறியதாவது: என் மகன், அண்ணாநகரில் உள்ள நீட் கோச்சிங் சென்டரில் படித்து வந்தான். அவர் 2 முறை நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்தான். நான் அவனை எப்படியாவது டாக்டராக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் அவன் தொடர்ந்து ேதால்வியடைந்து வந்தான். இதனால் 3வது முறையும் தேர்வு எழுதுவதற்காக நீட் பயிற்சி மையத்தில் சேர்த்து விட்டேன். என் மகன் படிக்கும் பயிற்சி மையத்தில் மாணவர்கள் வாணியம்பாடியைச் சேர்ந்த இர்பான், திருவேற்காட்டைச் சேர்ந்த பிரவீன், அயனாவரத்தைச் சேர்ந்த ராகுல் மற்றும் அபிராமி ஆகியோர் படித்து வந்தனர். இவர்களும் என் மகனைப் போல 2 முறை தேர்வு எழுதி தோல்வியுற்றவர்கள். 3 முறையாக பயிற்சி மையத்தில் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் நண்பர்களாக சேர்ந்தனர். அப்போது, இர்பான், தன்னுடைய தந்தை டாக்டராக உள்ளார்.
அவர் தன் மகனை, ஆள் மாறாட்டம் மூலம் தேர்வு எழுத ஏற்பாடு செய்திருப்பதாக நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். அப்போதுதான் என் மகனும், இர்பான் மற்றும் அவரது தந்தை குறித்து என்னிடம் தெரிவித்தனர். நானும் இர்பானின் தந்தையிடம் பேசினேன். என்னைப் போல மற்ற மாணவர்கள், மாணவியின் தந்தையும் பேசினர். பின்னர் நாங்கள் ஒன்று சேர்ந்து பெங்களூரைச் சேர்ந்த புரோக்கர் ஜார்ஜ் ஜோசப்பை சந்தித்தோம். இவரது பூர்வீகம் கேரளா. அவர், ஒரு மாணவனுக்கு ₹20 லட்சம் கேட்டார். நாங்கள் கொடுத்தோம். அவர் என் மகனின் பெயரிலேயே படித்த மாணவன் ஒருவனை தேர்வு எழுத ஏற்பாடு செய்வதாக கூறினார். இர்பானின் தந்தை மீது உள்ள நம்பிக்கையில்தான் நாங்கள் தலா 20 லட்சத்தை புரோக்கரிடம் கொடுத்தோம். நாங்கள் ஒரு முறைதான் அவரை சந்தித்தோம். ஆனால் போனில் பல முறை பேசியுள்ளோம். எங்கள் மகன்கள் தேர்வு எழுத செல்லவில்லை. ஆனால் மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், எங்களுடைய மகனின் பெயரில் எழுதிய தேர்வில் வெற்றி பெற்றோம். நாங்கள் நினைத்தபடி மருத்துவத்திலும் சேர்த்து விட்டோம். ஆனால் என் மகன், தான் செய்த தவறை தெரியாமல் மற்றொரு மாணவனிடம் தெரிவித்துள்ளார். அதில் ஒரு மாணவன் நிர்வாகத்தில் புகார் செய்து விட்டார். நாங்கள் மொத்தமாக மாட்டிக் கொண்டோம். ஆனால் புரோக்கர் ஜோசப், நீட் தேர்வு தொடங்கியது முதல், இதுபோன்று ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு சென்னை மட்டுமல்லாது கேரளா மற்றும் பல மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பணம் கொடுத்துள்ளனர். வட மாநிலங்களில்தான் ஆள் மாறாட்டம் செய்ய முடியும் என்று கருதி தேர்வு எழுத வைத்தனர். தமிழகத்தில் நீட் தேர்வு எழுத கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதனால்தான் வெளிமாநிலத்தில் மோசடி செய்தோம். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளதா கூறப்படுகிறது.
டாக்டர் வெங்கடேசன் கொடுத்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில், ‘‘சென்னையைச் சேர்ந்த சரவணன் அவரது மகன் பிரவீன், டேவிட் மற்றும் அவரது மகன் ராகுல், மாதவன் மற்றும் அவரது மகள் அபிராமி ஆகிய 6 பேரையும் போலீசார் சென்னையில் கைது செய்தனர். அவர்களது சான்றிதழ்களை பரிசோதித்தபோது, அவர்கள் அனைவருமே ஆள் மாறாட்டம் மூலம் நீட் தேர்வு எழுதியது தெரியவந்துள்ளது. இதனால் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெங்களூரைச் சேர்ந்த புரோக்கர் ஜார்ஜ் ஜோசப்பிடம் ₹20 லட்சம் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து. நேற்று காலை தேனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு அவர்களை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே, தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரனும், உதித்சூரியாவின் தந்தை வெங்கடேசனும் ஒன்றாக பணி புரிந்துள்ளனர். அதனால், கல்லூரி முதல்வர் வெங்கடேசனுக்கு உதவியிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. மேலும், தமிழகம் மட்டுமின்றி கேரளா, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் வரை, நீட் தேர்வு மோசடி நடந்துள்ளதால், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு கடுமையான விதிமுறைகளை பின்பற்றுவதால், வடமாநிலங்களில் எந்த கெடுபிடியும் இல்லாததால் அங்கு பெருமளவில் மோசடி நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. நீட் தேர்வு ஆரம்பம் முதல் இந்த முறைகேடு நடந்துள்ளது. இதனால் தமிழகம் மட்டுமல்லாது வட மாநிலங்களில் தேர்வு நடைமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும். தமிழகத்தில் மாணவர்கள் கஷ்டப்பட்டு படிக்கின்றனர். ஆனால் இதுபோன்ற பல முறைகேடுகளை செய்து, வட மாநில மாணவர்கள் எளிதாக தேர்ச்சி பெற்று தமிழகத்திலேயே படிக்க வந்து விடுகின்றனர். இதனால் வட மாநிலங்களில் தேர்வு முறையை கடுமையாக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழகத்தில் வட மாநிலங்களைப் போல தேர்வு முறையை எளிமையாக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
வட மாநிலங்களில், மத்தியப்பிரதேசத்தில் நடந்த வியாபம் ஊழல் போல நடந்துள்ளதால், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. சிபிசிஐடி போலீசார் திறம்பட பணியாற்றினாலும், வடமாநிலங்களில் முறைகேடு நடந்திருப்பதால் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். புரோக்கர் ஜோசப் கைது செய்யப்பட்டால்தான் எத்தனை ஆண்டுகளாக? எவ்வளவு மாணவர்களை ஆள் மாறாட்டம் செய்து சேர்த்துள்ளார் என்பது தெரியவரும். அதேநேரத்தில் அவர் தலைமறைவாக இருக்கும் ஒவ்வொரு நாளும் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீட் தேர்வு மையங்களுக்கு சிபிசிஐடி வேண்டுகோள்: இதுகுறித்து, சிபிசிஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழகத்தில் உள்ள அனைத்து நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு, அந்த பயிற்சி மையத்தில் தேர்வு பெற்றவர்களின் விவரங்கள் கோரப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்திருந்தவர்களின் ஒரே பெயர், முகவரியில் ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்கள் கோரப்பட்டு, நீட் தேர்வை நடத்தும் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மாணவன், தந்தை மொரிஷியசுக்கு தப்பி ஓட்டம்: நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த இர்பான், அவரது தந்தை ஆகியோர் மொரிஷியஸ் தீவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அவர்களை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews