அரசுப் பள்ளிகளில் வேளாண்மையை ஒரு பாடமாகச் சேர்க்க வேண்டும்: அன்புமணி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 13, 2019

அரசுப் பள்ளிகளில் வேளாண்மையை ஒரு பாடமாகச் சேர்க்க வேண்டும்: அன்புமணி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அரசுப் பள்ளிகளில் வேளாண்மையை ஒரு பாடமாகச் சேர்க்க வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தின் முதன்மைத் தொழிலாக வேளாண்மை திகழும் நிலையில், அதுகுறித்த பாடங்களை நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை 30 ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால், அக்கோரிக்கை இன்று வரை நிறைவேற்றப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் தொழிற்படிப்புகளில் மருத்துவம், பொறியியல் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்வது விவசாயம் ஆகும். உயர்கல்வியில் முதன்மைப் படிப்பாக இருக்கும் விவசாயம், பள்ளிகளில் கற்றுத் தரப்படுவதில்லை என்பது தான் மிகவும் முரணான விஷயமாகும். மேல்நிலைக் கல்வியில் சுமார் 200 பள்ளிகளில் மட்டும் வேளாண்மை ஒரு பாடமாக இருக்கிறது. ஆனால், தொடக்கக் கல்வியிலோ, நடுநிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளிலோ விவசாயம் ஒரு பாடமாக்கப்படவில்லை. இதுகுறித்த கோரிக்கைகள் எதுவும் செவிமடுக்கப்படவில்லை. 1991 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் பள்ளிகளில் வேளாண்மை ஒரு பாடமாக சேர்க்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து யோசனைகள் முன்வைக்கப்பட்ட போது அதுகுறித்து ஆராய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், 1995-96 ஆவது கல்வியாண்டு முதல் பள்ளிகளில் வேளாண்மைப் பாடம் சேர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது நடக்காத நிலையில், அடுத்து வந்த திமுக ஆட்சியிலும் அக்கோரிக்கை நிறைவேறவில்லை.
2001 ஆம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையிலான அரசு மீண்டும் பதவியேற்ற போது, ஆறாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை வேளாண்மை ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, முதல்கட்டமாக 100 அரசுப் பள்ளிகளில் மட்டும் வேளாண்மைப் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக வேளாண்மைக்குத் தனியாக பாடநூல்கள் தயாரிக்கப்பட்டு, அச்சிடப்பட்டன. ஆனால், வேளாண்மைப் பாடத்தை நடத்துவதற்காக தனி ஆசிரியர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை; அடுத்தடுத்த கட்டங்களில் கூடுதல் பள்ளிகளுக்கு வேளாண் பாடம் நீட்டிக்கப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. பின்னர் வந்த திமுக அரசிடமும் இந்தக் கோரிக்கை குறித்து பாமக வலியுறுத்தியது. ஆனால், அந்தக் கோரிக்கையை ஏற்க முடியாது என்று அறிவித்த அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கூடுதல் மேல்நிலைப் பள்ளிகளுக்கு அப்பாடத்தை நீட்டிக்க முடியாது என்றும் கூறிவிட்டார். அதனால், பள்ளிகளில் வேளாண்மையைப் பாடமாக்க வேண்டும் என்ற கனவு பகல் கனவாகவே இருக்கிறது. தமிழ்நாடு விவசாயத்தை முதன்மைத் தொழிலாக கொண்ட மாநிலம் என்பதாலும், தமிழகத்தில், வேளாண்மை அறிவியல் தொழில்படிப்பாக இருப்பதாலும் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை விவசாயத்தை ஒரு பாடமாகக் கற்பிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். வேளாண்மை என்பது இன்றைய இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் முதன்மை விருப்பமாக உள்ளது. விவசாயத்தை உயர்கல்வி வாய்ப்பாகவும், தொழிலாகவும் பார்க்கும் மாணவர்களை விட, விவசாயத்தை தங்கள் வாழ்க்கையின் அங்கமாக கருதும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இப்போதே தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் சொந்த விருப்பத்தில் இயற்கை விவசாயம், பல்வேறு வகை கீரைகள் சாகுபடி போன்றவை நடைபெற்று வருகின்றன. இத்தகைய தருணத்தில் தமிழகப் பள்ளிகளில் விவசாயத்தை ஒரு பாடமாக அறிமுகப்படுத்துவது மாணவர்களிடையே விவசாயம் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும்.
தமிழகத்திலுள்ள பள்ளிகளில் ஓவியம், இசை, தையல் போன்ற தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதற்காக அப்பாடங்களில் தொழிலாசிரியர் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் சிறப்பாசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். அதேபோல், விவசாயத்தில் பல்லாயிரக்கணக்கானோர் தொழிலாசிரியர் பயிற்சி பெற்றுள்ளனர். ஆனால், பள்ளிகளில் வேளாண்மை ஒரு பாடமாக இல்லாததால் அவர்கள் வேலைவாய்ப்பின்றி வாடுகின்றனர். எனவே, தமிழகத்திலுள்ள பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை வேளாண்மையை ஓர் பாடமாக அறிமுகம் செய்ய வேண்டும். வேளாண்மைப் பாடத்தை நடத்துவதற்காக சிறப்பாசிரியர்களை நியமிக்க வேண்டும். இதன்மூலம் வேளாண்மை குறித்த அடிப்படைகளை மாணவர்களுக்குக் கற்றுத் தருவதுடன், வேளாண் சிறப்பாசிரியர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்", என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews