ஆறாம் வகுப்பு படிக்கும்போதே முனைவர் பட்டம்! அசத்தும் அரசுப் பள்ளி மாணவன்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 10, 2019

ஆறாம் வகுப்பு படிக்கும்போதே முனைவர் பட்டம்! அசத்தும் அரசுப் பள்ளி மாணவன்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
இளைஞர்களும் பெரியவர்களும் சாதனைகளைப் படைக்கும்போது அவர்கள் சிறப்பிக்கப்படுவது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், சிறுவர் சிறுமியர் சாதனை படைத்தால் அது சிறப்பிக்கப்படுவதோடு போற்றப்பட வேண்டும். அப்படி போற்றப்பட வேண்டிய சாதனையை சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டியைச் சேர்ந்த தனியார் நிறுவனக் காவலாளி செல்வகுமாரின் மகன் மதுரம் ராஜ்குமார் படைத்துள்ளார். அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துவரும் மதுரம் ராஜ்குமார் எந்தத் தலைப்பைக் கொடுத்தாலும் நொடிப்பொழுதில் கவிதை புனையும் திறன் கொண்டவராக உள்ளார். இவர் தன் பத்து வயதில் கவிதை எழுதுவதில் உலக சாதனை படைத்து மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இளம் வயதிலேயே இளங்கம்பனாக வலம்வரும் மதுரம் ராஜ்குமாருக்கு முதல்வர், சகாயம் ஐஏஎஸ் உட்பட கல்வியாளர்கள், இலக்கியவாதிகள் என அனைத்துத் தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. 11 வயதான மதுரம் ராஜ்குமார் இதுவரை இரண்டு கவிதைத் தொகுப்புகளைப் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
தன் மகனின் கவித்திறனை அடையாளம் கண்ட விதத்தை செல்வகுமார் கூறும்போது, ‘‘நான் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறேன். சொந்த வீடு இல்லாமல் இன்னொருவரின் தோட்டத்தை பார்த்துக் கொண்டு அந்தத் தோட்டத்து வீட்டில் குடியிருக்கிறேன். குறைவான வருவாயிலும் நிறைவான மகிழ்சியுடன்தான் வாழ்ந்துவருகிறோம். அடிப்படையில் எனக்குப் புத்தக வாசிப்புப் பழக்கம் இருப்பதால் வீட்டில் டிவி, ஃபிரிட்ஜ் இல்லையென்றாலும், பாரதியார், பாரதிதாசன் கவிதைப் புத்தகங்கள், அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு சார்ந்த புத்தகங்கள் நிறைய இருக்கும். நான் புத்தகம் படிக்கும்போதெல்லாம் என் மகன் மதுரம் ராஜ்குமார் அருகில் வந்து புத்தகத்தை பார்த்து கேள்வி கேட்பார். கதைகளைப் படித்துவிட்டு ‘நல்லா இருக்குது அப்பா’ என்பார். நான், ‘புத்தகம் என்பதே நல்ல விஷயம்தான்’ என்பேன். இவ்வாறு மிகச்சிறிய வயதிலேயே அவருக்குள் வாசிப்புப் பழக்கம் நுழைந்தது. வெற்றி தோல்வி என்பது இரண்டாவது பட்சம், போட்டிகளில் கலந்துகொள்வதுதான் முக்கியம் எனப் பள்ளிகளில் நடக்கும் கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகளில் கலந்துகொள்ள ஊக்கப்படுத்தினேன். அவ்வாறு அவர் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் கவிதைப் போட்டி நடந்தது. ‘குழந்தை’ என்ற தலைப்பில் கவிதை எழுத வேண்டும் என என்னை எழுதித் தரச் சொன்னார். இல்லை அந்த கவிதை உன்னுடையதாக இருக்க வேண்டும் எனச் சொல்லி நீயே எழுது என்றேன். நொடிப்பொழுதில் அவர் எழுதிய கவிதையில் மொழியைக் கையாண்ட நுட்பமும், வார்த்தைப் பிரயோகமும் என்னை ஆச்சரியப்படுத்தியது. அந்த கவிதைக்கு பள்ளி அளவில் இரண்டாவது பரிசும் கிடைத்தது. அப்போதுதான் அவருக்குள் இருக்கும் திறமையையும், நொடிப்பொழுதில் கவிதை படைக்கும் திறனையும் கண்டுகொண்டேன்’’ என மகிழ்ச்சி பொங்கும் மனதோடு சொல்லி முடித்தார் மதுரம் ராஜ்குமாரின் தந்தை.
‘‘பள்ளி கவிதை போட்டியில் பரிசு பெற்றது மிகவும் சந்தோஷமாக இருந்தது. அடுத்தடுத்த முயற்சிகளுக்கு உந்துதலாக அமைந்தது. எனது திறமையை அறிந்து ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஊக்கப்படுத்தினர். பல்வேறு தலைப்புகளைக் கொடுத்து தொடர்ந்து கவிதை எழுதுவதற்கு அப்பா பயிற்சிகளை கொடுத்தார். நான்காம் வகுப்பு படிக்கும்போது பள்ளி, மகிழ்ச்சி, துன்பம் என சுமார் 55 தலைப்புகளில் கவிதைகள் எழுதினேன். அதுவரை எழுதியதை எல்லாம் தொகுத்து ‘நல் விதையின் முதல் தளிர்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டோம். பல்வேறு இலக்கிய அமைப்புகளிடமிருந்தும் பாராட்டுகளும், விருதுகளும் கிடைத்தன. வாழப்பாடி இலக்கியப் பேரவை எனக்கு இளங்கம்பன் விருது அளித்தது’’ என உற்சாகமாக கூறும் ராஜ்குமார் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளுக்குச் சென்று தன் கவிதை எழுதும் திறனை மேம்படுத்தியுள்ளார். மேலும் தொடர்ந்த மதுரம் ராஜ்குமார், ‘‘பள்ளி விடுமுறை நாட்களில் சேலம், ஈரோடு, திருப்பூர், சென்னை, மதுரை என தமிழகம் முழுவதும் நடக்கும் பல்வேறு இலக்கிய நிகழ்வுகள், கவி அரங்குகளுக்கு அழைத்துச் சென்று எழுத்தாளர்கள், கவிஞர்களின் உரைகளை அப்பா கேட்கச் செய்வார். என்னுடைய கவிதைகளையும் அரங்கில் வாசித்தேன். பின்னாளில் கவிதை எழுதுவதில் உலக சாதனை படைப்பதற்கு அந்த அனுபவம் மிகவும் உபயோகமாக இருந்தது. அவ்வாறு திருவண்ணாமலையில் கவி அரங்கிற்குச் சென்றபோது ‘யுனிவர்செல் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்‘ நிறுவனரின் அறிமுகம் கிடைத்தது. ‘கண்டிப்பாக உலக சாதனை செய்யும் திறன் உன்னிடம் உள்ளது. இதைக் கண்டிப்பாகப் பதிவு செய்ய வேண்டும்’ என்று சொல்லி சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்’’ என்கிறார் ராஜ்குமார்.
‘‘உலக சாதனை நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குச் சுமார் ஒண்ணேகால் லட்சம் ரூபாய் செலவானது. அன்றாட செலவுகளுக்கே தடுமாறும் பொருளாதாரச் சூழலில் நண்பர்கள், தன்னார்வலர்கள் மற்றும் சுற்றத்தார் உதவியுடன் அந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது. 2018ம் ஆண்டு பாரதியார் பிறந்த நாளான டிசம்பர் 11ம் தேதி சுமார் பத்து மணிநேரம் நிகழ்சி நடைபெற்றது. மாணவர்கள், கல்வியாளர்கள், மாவட்ட, வட்டார கல்வி அலுவலர்கள், வருவாய் அதிகாரிகள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், ‘யுனிவர்செல் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்’ நிறுவனர் என கூடியிருந்த அனைவரும் ஒவ்வொரு தலைப்பாகக் கொடுக்க சிறிதும் யோசிக்காமல் நொடிப்பொழுதில் கவிதை படைத்தார் ராஜ்குமார். சுமார் பத்து மணிநேரம் ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு 173 தலைப்புகளில் கவிதை படைத்த ராஜ்குமாருக்கு ‘யுனிவர்செல் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்’ உலக சாதனை விருது அளித்தது. ராஜ்குமாரின் கவிப்புலமையைக் கண்ட சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம், 2019ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி சென்னையில் நடந்த விழாவில் மதிப்புறு முனைவர் பட்டமும் வழங்கியது. தன்னம்பிக்கை உரையாற்ற பல்வேறு பள்ளிகளிலிருந்து மதுரம் ராஜ்குமாருக்கு அழைப்பு வருவது மகிழ்சியை அளிக்கிறது. சக மாணவர்கள் மத்தியில் உரையாற்றுவது மாணவர்களுக்கு உகந்ததாக அமையும் என்பதால் பள்ளி மாணவர்களிடையே தன்னம்பிக்கை உரையாற்ற தொடர்ந்து அழைப்பு வருகிறது’’ என்கிறார் ராஜ்குமாரின் தந்தை. ‘‘நடந்து முடிந்த நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் மூத்த எழுத்தாளர்கள் மத்தியில் ராஜ்குமாருக்குப் பத்தாயிரம் ரூபாய் பொற்கிழி பரிசு கிடைத்துள்ளது. இதுபோன்ற விருதுகளும், பரிசுகளும் அடுத்தகட்ட முயற்சிகளுக்கான ஊக்கசக்தியாக அமைகிறது’’ என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார் மதுரம் ராஜ்குமார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews