மாணவர்களை தனித் திறன்களோடு தயாராக்கும் தலைமை ஆசிரியை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 10, 2019

மாணவர்களை தனித் திறன்களோடு தயாராக்கும் தலைமை ஆசிரியை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
ஆசிரியர் பணி என்பது அனைத்துப் பணிகளையும் விட மேன்மை பெற்றது. சொல்லப்போனால், இதனைப் பணி என்று கூறுவதை விட சேவை என்றே சொல்ல வேண்டும். ஆசிரியர் பணியை சேவை செய்யும் உள்ளத்தோடு சிறப்பாக செய்பவர்கள் கிடைத்துவிட்டால் மாணவர்கள் அதிஷ்டக்காரர்கள்தான். இதற்கு உதாரணமாக வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் கந்திலி ஒன்றியத்தில் உள்ள ராஜாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை இந்திராவைச் சொல்லலாம்.
தலைமை ஆசிரியை இந்திரா, ‘‘குழந்தைகள் இன்றைக்கு பல்வேறு சூழல்களைக் கடந்துதான் பள்ளிக்கு வருகிறார்கள். அவர்கள் சரியாகப் படிக்கவில்லையே, நேர்த்தியாக ஆடை அணியவில்லையே என்பதை ஒரு குறையாகக் கருதாமல் அவர்களின் தேவைகளை அறிந்து உதவுவதோடு ஒரு தாயாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள்’’ என்கிறார். ‘‘வேலூர் மாவட்டம் கடைக்கோடியில் இருக்கும் ஒரு சிறிய கிராமமான ராஜாவூர் தொடக்கப்பள்ளியில் 2008ஆம் ஆண்டில் தலைமையாசிரியராக வேலைக்கு வந்தேன். ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள இந்தப் பள்ளி கட்டடத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் கிடையாது. பள்ளமும் மேடும் சுற்றுச்சுவர் எதுவுமில்லாமல் ஏதோ ஒரு பழைய வீடுபோல் இருப்பதைப் பார்த்ததும் பயமாக இருந்தது என்றே சொல்லலாம். அந்தப் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிக்கொண்டிருந்தார் எனது கணவர் ‘‘இந்தப் பள்ளியை மாதிரிப் பள்ளியாக நீ மாற்றிக் காட்டுவாய். அதனால் தயங்கக்கூடாது’’ என தைரியம் சொன்னார். ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என பொதுவாகச் சொல்வார்கள். ஆனால், என்னுடைய வெற்றிக்குப் பின்னால் அப்போது எனது கணவர்தான் இருந்தார். ஏன் அப்போது என்று சொல்கிறேனென்றால் எனது கணவர் 2011-ல் காலமாகிவிட்டார். நான் செய்த, செய்கின்ற பணிகளுக்காக கிடைத்துள்ள விருதுகளைப் பார்க்க அவர் இல்லையே என்று நினைக்கும்போது கவலையாக உள்ளது’’ என்று சோகமாக தெரிவித்தார். ‘‘முதன்முதலாக பள்ளியைச் சுற்றி நான்குபுறம் மதில்சுவர் அமைக்க ஊர் மக்களை அழைத்து பேசினேன். நம் ஊர் பள்ளியின் மீது ஆசிரியைக்கு நல்லதொரு அக்கறை இருக்கிறது என ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து நான்குபுறமும் மதில்சுவர் அமைத்துக்கொடுத்தார்கள்.
அவ்வூரைச் சேர்ந்த ராணுவவீரர், கல்விக்குழுத் தலைவர் மற்றும் கல்வி மேலாண்மைக் குழுத் தலைவர் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து மதில்சுவருக்கு ரூ.50 ஆயிரம் செலவில் இரும்புக்கதவு அமைத்துக் கொடுத்தார்கள். பள்ளி வளாகத்தில் பெரிய பெரிய பாறாங்கற்கள் கிடந்தன, ஜேசிபி கொண்டு எனது சொந்த செலவில் மைதானமாக சீர்படுத்தினேன். ஆசிரியர் நல்லவர்களாக இருந்தாலே மாணவர்கள் நல்ல ஒழுக்கத்துடன் வளர்வார்கள் என்பது என்னுடைய கருத்து. கஷ்டப்படும் குழந்தைகள், அவர்கள் நன்றாக இருக்க வேண்டும், நேர்த்தியாக ஆடை அணிய வேண்டும் என்பதற்காக எனது சொந்த செலவில் அவர்களுக்கு ஆடைகளை வாங்கிக் கொடுத்துவருகிறேன். தனியார் பள்ளிக் குழந்தைகள் போன்று மிடுக்காக இருக்க அவர்களுக்கு அடையாள அட்டை, பெல்ட், டை, பேட்ஜ், அவர்கள் சாப்பிட நல்ல தட்டு, டம்ளர் என எல்லாமே வாங்கிக் கொடுத்துவருகிறேன். விழாக்காலங்களில் அவர்களுக்கு பரிசுப் பொருட்கள் அளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். அதுவும் ரூ.3,000 முதல் ரூ.4000 வரை மதிப்பிலானதாக இருக்க வேண்டும் என பார்த்துக்கொள்வேன். ஏனெனில், அது அவர்களை அவ்விழாவில் பங்களிப்பு செய்ய மேலும் மேலும் ஊக்கப்படுத்தும்’’ என்கிறார் தலைமை ஆசிரியை இந்திரா. ‘‘எனது மாணவர்கள் ஒவ்வொருவர் பிறந்தநாளின்போதும், ஒரு மாணவர் சேர்க்கையின்போதும் ஒரு மரக்கன்று நடுவது என ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் மரக்கன்றுகளை நட்டுவருகிறேன். பள்ளி மைதானம் முழுக்க நிழல்தரும் மரங்கள், கனி தரும் மரங்கள், மருத்துவக் குணம் கொண்ட மரங்களை அதிகமாக வளர்த்துள்ளோம். வெட்டவெளியாக இருந்த பகுதி இன்று 300 மரங்களோடு சோலைவனமாக காட்சியளிக்கிறது. வெளியிலிருந்து பார்ப்பவர்கள் ஏதோ ஒரு தனியார் பள்ளி என நினைக்கும் அளவுக்கு அமைத்துள்ளோம்’’ என்ற ஆசிரியை இந்திரா மாணவர்கள் தனித்திறனை வளர்ப்பதையும் பட்டியலிட்டார். ‘‘மாணவர்களின் தனித்திறமைகளைக் கண்டறிய அவர்களை உன்னிப்பாக கவனித்து வந்தேன். அப்படி கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிறுமிதான் 3ஆம் வகுப்பு படிக்கும் சினேகா. 1330 திருக்குறளையும் சொல்ல வைத்தேன். முதலில் 100 சொன்னவள், 4ஆம் வகுப்பு படிக்கும்போது 1000 திருக்குறள் சொன்னாள், 5ஆம் வகுப்பு வரும்போது 1330 திருக்குறளையும் சொன்னாள். இதனைப் பரிசோதிக்க வேலூரில் ஒரு நிகழ்ச்சி நடத்தினார்கள். இதில், வெவ்வேறு அதிகாரங்களிலிருந்து மாற்றி மாற்றி கேட்டார்கள். எப்படிக் கேட்டாலும் அதனை சரியாகச் சொன்னதால் அரசின் தமிழ் வளர்ச்சித்துறை மூலமாக ரூ.10 ஆயிரம் பரிசளிக்கப்பட்டது.
இதுபோன்ற சேவைகளைப் பாராட்டி எனக்கு 2013ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கினார்கள். இதனையடுத்து தலைமைச் செயலகத்தில் சில நிகழ்ச்சிகளை நடத்தினோம். 220 உலக நாடுகளின் கொடிகளை ஒரு நிமிடம் 32 செகண்டில், 2-வது படிக்கும் குழந்தையிடம் எப்படி மாற்றி மாற்றிக் கேட்டாலும் சரியாகச் ெசான்னாள். அதேபோல், 99 வகையான பூக்களை எப்படி மாற்றிக் கேட்டாலும் 1ஆம் வகுப்பு மாணவி சொன்னாள். அடுத்து உலகக் கோப்பைப் போட்டி நடந்த சமயத்தில் கலந்துகொண்ட 5 நாடுகளின் வீரர்களின் பெயர்களையும் 1 நிமிடம் 30 செகண்டில் 3வது படிக்கும் மாணவன் சொன்னான். இந்த நிகழ்வுகளுக்காக பதிவுச் சான்றிதழ் மட்டும் கிடைத்துள்ளது. அதற்கான உண்மையான சான்றிதழை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். தற்போது எங்கள் பள்ளியை புத்தாக்க (இன்னோவேட்டிவ்) பள்ளியாக தேர்வு செய்துள்ளார்கள். இதுவரையில் நான் பெற்றுள்ள 80க்கும் மேற்பட்ட விருதுகள் எல்லாமே என்னுடைய மாணவர்களுடைய திறமையைப் பாராட்டிக் கொடுத்ததுதான். அதனால், இந்த வெற்றி அவர்களையே சேரும்’’ என்று தன்னடக்கத்தோடு பேசி முடித்தார் தலைமை ஆசிரியை இந்திரா.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews