அரசு விடுதி மாணவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு நிதி 10: கூடுதலாக ஒதுக்க வேண்டும் என கோரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 18, 2019

அரசு விடுதி மாணவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு நிதி 10: கூடுதலாக ஒதுக்க வேண்டும் என கோரிக்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அரசு நலத்துறை விடுதிகளில், ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும் ஒரு வேளை உணவுக்கு ₹10 மட்டுமே ஒதுக்கீடு செய்வதால், மாணவர்களுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. ஒரு மாதத்திற்கு ஒதுக்கப்படும், ₹900 என்ற நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.தமிழகத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம், மாணவ, மாணவியருக்காக விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில், அரசு விதிகளின்படி மாணவர்களுக்கு குறிப்பிட்ட உணவுகள் வழங்கப்பட வேண்டும்.ஆனால், விலைவாசி ஏற்றம் காரணமாக, குறிப்பிட்ட உணவுகள், சரியான முறையில் வழங்கப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது. நாள் தோறும் ஏறும் பொருட்களின் விலையால், மாணவ, மாணவியருக்கு எந்த உணவு பொருட்களையும் சரிவர கொடுக்க முடியாமல், விடுதி வார்டன்கள் தவித்து வருகின்றனர்.விடுதிகளுக்கு வழங்கப்படும் தொகையை, அரசு நலத்துறைகள் அதிகரித்து வழங்கினால் மட்டுமே இப்பிரச்னைக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும்.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் 750 என்ற ஒதுக்கீடு, ₹900 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த தொகை யானைப்பசிக்கு சோளப்பொறி என்ற அளவே இருப்பதாக தெரிவிக்கின்றனர்.அரசு சார்பில், ஒரு மாணவருக்கு, ஒரு நாளைக்கு, ₹30 வீதம், ஒரு மாதத்திற்கு, ₹900 ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு, 30 என்றால், ஒரு வேளைக்கு, ₹10 கிடைக்கிறது. இன்றைய விலைவாசியில், ஒரு வேளை சாப்பாடு, 10ல் எவ்வாறு வழங்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. மேலும், காலையில் டீ அல்லது காபி, மாலையில் சுண்டல், காலையில் டிபன், மதிய உணவில் பொரியல், ரசம், மோர் கட்டாயம் இருக்க வேண்டும். புதன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அசைவ உணவு; மற்ற நாட்களில் மதிய உணவுடன் முட்டை போன்றவை மாணவருக்கு வழங்க வேண்டும். இத்தனை உணவு வகைகளையும், வெறும், 10 ரூபாயில் வழங்க வேண்டும்.திருவள்ளூர் மாவட்டத்தில், 48 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவிகளுக்கான விடுதிகள், 36 பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியர்கள் விடுதிகள் உள்ளன. இதில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் தங்கி படிக்கிறார்கள்.
இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 47 ஆதிதிராவிடர் நல விடுதிகள், 35 பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியர் விடுதிகள் உள்ளன. இங்கும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் தங்கி படிக்கின்றனர். இதில் பல விடுதிகளில், சுவையற்ற உணவு வழங்கப்படுவதும்; சில உணவுகள் வழங்கப்படாமலும் இருப்பதாக புகார் உள்ளது. சுவையற்ற உணவால், பல மாணவர்கள், தங்களின் அன்றாட உணவை வீணடிக்கின்றனர். இந்த விவகாரத்தில், எரிவாயு சிலிண்டருக்கே அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளதாக வார்டன்கள் புலம்புகின்றனர். இன்றைய சூழலில், ஒரு காஸ் சிலிண்டரின் விலை, சராசரியாக 700க்கும் அதிகமாக இருப்பதாக கூறுகின்றனர். இவ்வாறு, உள்ள சூழலில், அரசு வழங்கும் நிதியை கொண்டு, காய்கறி, சிலிண்டர், அரிசி, இறைச்சி போன்றவற்றை எவ்வாறு வாங்க முடியும் என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர்.எனவே, அரசு விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியருக்கு, அரசு வழங்கும் மிக குறைந்த நிதியை உயர்த்தி வழங்கினால் மட்டுமே, மாணவ, மாணவியர் நிம்மதியாக உணவருந்த முடியும்.
இரவு காவலர்கள் இல்லாததால் அச்சம் ஒவ்வொரு விடுதியிலும் காப்பாளர், இரவு காவலர், சமையலர், துப்புரவு பணியாளர், போதகர் (டியூஷன் கற்று தருபவர்) ஆகியோர் இருக்க வேண்டும். ஆனால், இரு மாவட்டங்களிலும் 100க்கும் மேற்பட்ட இரவு காப்பாளர், துப்புரவு பணியாளர் பணியிடம் காலியாக உள்ளது.இதனால் மாணவ, மாணவியர் இரவு நேரங்களில் விடுதியில் தங்க அச்சப்படுகின்றனர். விடுதிகளை தூய்மைபடுத்துவதற்காக பணியாளர் இல்லை. இதனால் விடுதி முழுவதும் அசுத்தமாக உள்ளது. மாணவர்களே சுத்தப்படுத்த வேண்டியது உள்ளது.சமையல் வேலைக்கும் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. விடுதியில் 20 மாணவருக்கு ஒரு காப்பாளர், சமையலர் இருக்க வேண்டும். தற்போது 50 பேருக்கு ஒரு காப்பாளர், சமையலர் உள்ளனர். விடுதிகள் போதிய பராமரிப்பின்றி உள்ளது. ஜன்னல் உடைந்துள்ளது, மின்விளக்கு சரியாக எரிவதில்லை. சமையலர் பற்றாக்குறையால் மாணவர்களுக்கு சரியாக உணவு கிடைப்பதில்லை. மின் விளக்கு இல்லாததால் படிக்க முடியவில்லை. காப்பாளர் இல்லாததால் கண்காணிப்பில் சிக்கல் உள்ளது. இதனால் மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படுகிறது. எனவே அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளை திடீர் ஆய்வு செய்து, மாணவ, மாணவியர்களின் தேவைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews