மாணவர்களே காய்கறிகளை எடுத்துக்கலாம்; ஆனா, ஒரு காய் மட்டும் எனக்கு!" - ஆசிரியையின் புது முயற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 02, 2019

மாணவர்களே காய்கறிகளை எடுத்துக்கலாம்; ஆனா, ஒரு காய் மட்டும் எனக்கு!" - ஆசிரியையின் புது முயற்சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
`பு த்தகக் கல்வியைத் தாண்டி, மாணவர்கள் இயற்கை விவசாயம் சார்ந்த விஷயங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். அதன் மூலம் அவர்களுக்கு ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கான வாசல் பிறக்கும்' என்ற எண்ணத்தில் புதிய முயற்சிகளை சிறப்பாகச் செய்துவருகிறார் ஆசிரியை புவனேஸ்வரி. இவர், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையிலுள்ள கலைமகள் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் பணியாற்றிவருபவர். தன் வகுப்பு மாணவர்களை இயற்கை முறையில் செடிகள் வளர்க்க ஊக்கப்படுத்துபவர், அதன் மூலம் பாரம்பர்ய விதைகளைச் சேகரித்துவருகிறார். இதுகுறித்து புவனேஸ்வரி புன்னகையுடன் பேசுகையில்... ``எனக்கு இயற்கை விவசாயத்தில் அதிக ஆர்வமுண்டு. அதனால் பள்ளி வேலை நேரம்போக, விவசாயம் சார்ந்த தேடலில் கவனம் செலுத்துவேன். நான் தெரிந்துகொண்ட விஷயங்களைப் படிப்படியா மாணவர்களுக்கும் கற்றுக்கொடுப்பேன். கடந்த வருடம் விதைப் பந்து தயாரிக்க ஆரம்பிச்சோம். மாணவர்களும் ஆர்வமுடன் விதைப் பந்துகளைத் தயாரிச்சாங்க. அடுத்த முயற்சியாக, `தினம் ஓர் இயற்கை விவசாயி' திட்டத்தைச் செயல்படுத்தினேன்.
நான் பெரும்பாலான காய்கறிகள் மற்றும் கீரை விதைகளைச் சேகரித்து வெச்சிருக்கேன். பாரம்பர்ய விதைகள் அழிஞ்சுடக்கூடாதுனு நினைச்சேன். என் நான்காம் வகுப்பில் 35 மாணவர்கள் இருக்காங்க. ஒரு நாளைக்கு ஒரு மாணவர் வீதம், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாணவருக்கும் ஏதாவதொரு விதையைக் கொடுப்பேன். தவிர, அந்தக் காய்கறியால் கிடைக்கும் நன்மைகளையும் விளக்கிச் சொல்வேன். அதை வீடியோவா எடுத்து ஃபேஸ்புக்ல பதிவிடுவேன். இதனால் மாணவர்களுக்கு உற்சாகம் கிடைக்குது. நான் கொடுத்த விதைகளை மாணவர்கள் தங்கள் வீட்டில் பயிரிடணும். விளையும் காய்கறிகளை தங்கள் வீட்டுத் தேவைக்குப் பயன்படுத்திக்கலாம். அதில் ஒரு காயை மட்டும் விதைக்குவிட்டு அதிலிருக்கும் விதையை எனக்குக் கொடுத்திடணும். இதனால் தொடர்ந்து விதைகளைச் சேகரிக்க முடியும். அதைவிட மாணவர்களுக்கு இயற்கை விவசாயத்தின் மீதான ஆர்வம் கூடிகிட்டே இருக்கும். எங்களுடையது கிராமப்புறப் பகுதி என்பதால், எல்லா மாணவர்களாலும் நிச்சயம் செடி வளர்க்க முடியும்." - தன் முதல் முயற்சி வெற்றி பெற்ற நிலையில், அடுத்தடுத்து புதிய முயற்சிகளைச் செயல்படுத்திவருகிறார் புவனேஸ்வரி.
``விதைகள் கொடுப்பதோடு இல்லாம, வாரத்தில் ஒருநாள் இயற்கை விவசாய வழிமுறைகளை மாணவர்களுக்குப் புரியும்படிச் சொல்லிக்கொடுப்பேன். வேப்பெண்ணெய் கரைசல், பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், அமுத கரைசல்னு இயற்கை வளர்ச்சியூக்கிகள் மற்றும் இயற்கை உரங்கள் தயாரிக்கவும் சொல்லிக்கொடுப்பேன். நேரிடையாகச் செய்முறை வழியில்தான் சொல்லிக்கொடுப்பேன். பள்ளியில் செடிகள் வளர்க்க பெரிசா இடவசதியில்லை. அதனால என் வகுப்பு மாணவர்கள் அவரவர் வீட்டுலயே ஆர்வமா செடிகள் வளர்க்கிறாங்க. தவிர எங்க வகுப்புக்குள் தானிய வகை பயிர்களையும் சிறிய அளவில் வளர்க்கிறோம். சமீபத்தில் என் பிறந்த நாள் முடிஞ்சது. அப்போ வகுப்பு மாணவர்களுக்கு இனிப்பு கொடுத்ததுடன், எல்லோருக்கும் புங்கன் மரக் கன்றையும் கொடுத்தேன். ஆரோக்கியம்ங்கிறது உணவுப் பழக்க வழக்கத்திலிருந்துதானே தொடங்குது. அதனால், இயற்கை விவசாய செயல்பாடுகளை மாணவர்களுக்குத் தொடர்ந்து கத்துக்கொடுப்பேன்.
பொதுவா அரசுப் பள்ளிகளுக்கும், அதில் படிக்கிற மாணவர்களுக்கும்தான் பலரும் உதவிசெய்வாங்க. ஆனா, அரசுப் பள்ளி மாணவர்கள் மத்தவங்களுக்கு உதவணும்னு நினைச்சேன். அதனால், படிக்கச் சிரமப்படும் வேறு அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் கஷ்ட நிலையிலிருக்கும் பிறருக்கு உதவி செய்யலாம்னு நினைச்சோம். ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்னு எங்களால் இயன்ற சிறு தொகைகளைச் சேகரித்து, பிறருக்குக் கொடுத்து உதவுவோம். கொடுக்கிற தொகை நூறு ரூபாயா இருந்தாலும், அதுவும் சிறு உதவிதானே! என் வகுப்புல எல்லா மாணவர்களும் ஒவ்வொரு துறை அமைச்சர் பொறுப்பில் இருக்காங்க. இத்தகைய செயல்பாடுகளால், புத்தகக் கல்வியைத் தாண்டி மாணவர்கள் நல்ல விஷயங்களைத் தெரிஞ்சுக்கிறாங்க; ஆளுமைத்திறனுடன் வளர்றாங்க" என்று உற்சாகமாகக் கூறுகிறார் புவனேஸ்வரி.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews