திரை 'ராட்சசி' ஜோதிகாவைப் போல இவர்கள் நிஜ ராட்சச ஆசிரியர்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 11, 2019

திரை 'ராட்சசி' ஜோதிகாவைப் போல இவர்கள் நிஜ ராட்சச ஆசிரியர்கள்!


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups


தமிழக அரசுப் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களில் சிலர்...



சமீபத்தில் ஜோதிகா நடித்த 'ராட்சசி' திரைப்படம், அரசுப் பள்ளிகள் பற்றிய ஓர் உரையாடலைத் தொடங்கி வைத்திருக்கிறது. ஓர் ஆசிரியர் நினைத்தால் அந்தப் பள்ளியை மிகச் சிறந்ததாக மாற்ற முடியும்; அங்கு படிக்கும் மாணவர்களின் கல்வியை மேம்படுத்த முடியும் எனக் காட்டிய 'நிழல்' ஜோதிகாவைப் பார்க்கும்போது, அப்படி நிஜத்தில் இருக்கிறார்களா என்ற கேள்வியும் எழாமல் இருக்காது. ஏராளமான ரியல் ஜோதிகாக்கள் இருக்கிறார்கள் என்பதே உண்மை. தமிழகம் முழுக்க அரசுப் பள்ளிகளில் இப்படியான ஆசிரியை ஏராளமானோர் இருக்கின்றனர். அவர்களில் சிலரைப் பற்றிய சுருக்கமான அறிமுகம்.



மகாலட்சுமி



மகாலட்சுமி

மகாலட்சுமி:

ஜவ்வாதுமலை, அரசுப் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியின் ஆசிரியை. 'ராட்சசி' படத்தின் ஜோதிகா கதாபாத்திரத்திரம் உருவாவதற்கான மூலமே இவர்தான் என்பதால், படத்தில் நன்றி தெரிவித்திருப்பார்கள். இவர் பணிபுரியும் பள்ளியில் பெரும்பான்மையோர் முதல் தலைமுறையாகக் கல்விபெறும் மலைவாழ் மக்களின் குழந்தைகள். எனவே, வெறுமனே பாடங்களை நடத்தும் ஆசிரியராக மட்டுமே அங்கு பணிபுரிய முடியாது. அந்தச் சவாலை ஏற்ற மகாலட்சுமி, குழந்தைகளுக்குக் கல்வி அவசியம் என்பதை பெற்றோர்களுக்கு உணர்த்தும் வேலையை முதலில் செய்தார். அடுத்து, அங்கு படிக்கும் குழந்தைகளுக்கு முடிவெட்டுவது முதல் உடைகளைச் சீர்செய்வது வரை அனைத்தும் தம் பொறுப்பு என முழுமனத்தோடு ஏற்றுக்கொண்டார். காட்டு வேலைகளுக்காகக் குழந்தைகளை அழைத்துச்செல்லப்பட்ட குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பது முதல், நடக்கவிருந்த குழந்தைத் திருமணங்களை நிறுத்தி, அவர்களைப் பள்ளிக்கு அழைத்துவந்தது வரை மகாலட்சுமியின் பணி மகத்தானது. பள்ளிப் படிப்பு முடிந்தாலும், அடுத்து கல்வி கற்பதற்கு வாய்ப்பும் ஏற்படுத்திக்கொடுப்பதில் வெளிப்படுகிறது இவரின் எதிர்பார்ப்பற்ற அர்ப்பணிப்பு.
பெண் குழந்தைகளின் உடல் மற்றும் மனம் சார்ந்த விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பவர்.,
சுடரொளி



சுடரொளி



சுடரொளி

சுடரொளி:

திருவள்ளூர் மாவட்டம் கரிக்கலவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியை சுடரொளி. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பெற்றோர்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளி. குறிப்பாக, படிப்பைப் பாதியில் நிறுத்த நினைக்கும் பெற்றோர்களே அதிகம். அவர்களின் மனத்தை மாற்றியும், பெண் குழந்தைகளின் உடல் மற்றும் மனம் சார்ந்த விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பவர். பருவம் எய்தும் வயதுடைய பெண்கள் படிக்கும் நடுநிலைப் பள்ளி என்பதால், மாதவிடாய் குறித்தும் நாப்கின் பயன்படுத்துவது குறித்தும் மாணவர்களைத் தயார்செய்வது உட்பட, பல செயல்களை முன்னெடுப்பவர். எதையும் தன் பள்ளிக்கானதாக மட்டும் பார்க்காமல், தமிழகம் முழுவதுமுள்ள மாணவர்களுக்குச் சேரும் விதமாகப் பொதுவெளியில் குரல்கொடுப்பவர்.
தமிழகத்தில் செயல்வழி கற்றல் முறை அறிமுகப்படுத்தியபோது, அதற்கான எதிர்ப்புகள் வந்தபோது, “செயல்வழிக் கற்றல் எதிர்ப்புகளும் சில உண்மைகளும்” என்று இவர் எழுதிய நூல் இந்தத் திட்டம் கிராமப்புற குழந்தைகளுக்கு எவ்வளவு உதவியாகவும், கற்றலை எளிமையாக்கும் என்பதையும் பறைசாற்றியது. அந்தத் திட்டம் வருவதற்குமுன்பே செயல்வழிக் கற்பிப்பதைச் செய்துவந்தவர். மாணவர்களோடு சேர்ந்து அமர்ந்து, கற்பிக்கும் முறையை மேற்கொள்பவர். 'குழந்தைகளைக் கொண்டாடுவோம்' என்கிற சிறு அமைப்பை ஏற்படுத்தி, கல்விகுறித்த உரையாடல்களை ஆசிரியர்களுடன் தொடர்ச்சியாக நடத்திவருகிறார். கல்விப் பாடத்திட்டக் குழுவில் பங்கேற்பதுடன், தமிழக சூழலுக்கு ஏற்ப, அதிலும் முதல் தலைமுறை குழந்தைகளை மனத்தில் கொண்டு பாடமுறை அமைக்கப்பட வேண்டும் என்பதில் முனைப்போடு செயல்படுபவர். கல்விப் பாடத்திட்டம் குறித்து, மிகத் தீவிரமாகச் சிந்திப்பதும், செயல்படுவதும் இவரின் தனிச்சிறப்பு.


வேறெந்த யோசனையுமின்றி, அந்தத் தொகையுடன் தன் சம்பளப் பணத்தையும் சேர்ந்து 90,000 ரூபாய்க்கு ஸ்மார்ட் கிளாஸ் ரூம் அமைத்துவிட்டார்.
ஹேம்குமாரி



ஹேம்குமாரி



ஹேம்குமாரி

ஹேம்குமாரி:

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் மேற்கு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை. நடக்க இயலாத மாற்றுத்திறனாளி இவருக்கு, ஆசிரியராக வேண்டும் என்பதே சிறுவயது கனவு. அது நிறைவேறியது. மாணவர்கள் விரும்பும் விதத்தில் கற்றுத்தருவதை மாற்ற நினைத்தார். அதற்காக, பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டார். அப்போதுதான் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் பற்றி இவருக்குத் தெரிய வந்தது. தனது வகுப்பறையையும் அவ்வாறு மாற்ற நினைத்தபோது, அதற்கு ஒரு லட்சம் ரூபாய் செலவாகும் எனத் தெரிந்ததும் கொஞ்சம் சோர்வாகிவிட்டார். ஆனால், அந்த நேரத்தில் எம்.ஏ ஆங்கிலம் படித்ததற்கு அரசின் ஊக்கத்தொகை 60,000 ரூபாய் வந்தது. வேறெந்த யோசனையுமின்றி, அந்தத் தொகையுடன் தன் சம்பளப் பணத்தையும் சேர்ந்து 90,000 ரூபாய்க்கு ஸ்மார்ட் கிளாஸ் ரூம் அமைத்துவிட்டார். கற்றலின் சுமையைக் குறைத்துவிட்ட பெரு மகிழ்ச்சியில் திளைக்கும் ஹேம்குமாரிக்கு, மாணவர்களின் அன்பும் கூடுதலாகக் கிடைத்தது.



எளிய முறையில் ஆங்கிலம், சிறந்த வகுப்பறையுமாக மாணவர்கள் கல்வி கற்கும் ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறார், அன்னபூர்ணா.



அன்னபூர்ணா



அன்னபூர்ணா

அன்னபூர்ணா:

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், கந்தக்காடு அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பெரும் அச்சமே ஆங்கிலம்தான். அந்தப் பயத்தை மாணவர்களிடமிருந்து அகற்ற முயற்சி எடுத்துவருபவர் அன்னபூர்ணா. இந்தப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் மிகத் தெளிவான, சரளமான ஆங்கிலத்தில் உரையாடும் திறனுடையவர்கள். இது எளிதில் சாத்தியமானதல்ல. சக ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு ஆங்கிலத்தில் 10,000 சொற்களையும் அதற்கான விளக்கத்தையும் கொண்ட சி.டி-யை வெளியிட்டுள்ளார். மேலும், வகுப்பறைகளின் அமைப்பும் கற்றலுக்கு ஒரு முக்கியக் காரணி என்பதால், சின்னச் சின்ன நாற்காலிகள், பெஞ்சுகள், அழகான கரும்பலகை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க நினைத்தார். அதற்குத் தேவைப்படும் செலவுகளுக்காக, யாரிடமும் உதவி கேட்காமல் தன்னுடைய நகைகளை அடகுவைத்து அந்த வசதிகளை ஏற்படுத்தினார். எளிய முறையில் ஆங்கிலம், சிறந்த வகுப்பறையுமாக மாணவர்கள் கல்வி கற்கும் ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறார் அன்னபூர்ணா.



கணக்கு டீச்சர் என்பதன் ரோல்மாடலாகத் திகழ்கிறார், ரூபி கேத்தரின் தெரசா



ரூபி கேத்தரின் தெரசா



ரூபி கேத்தரின் தெரசா

ரூபி கேத்தரின் தெரசா:

திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் கணித ஆசிரியை இவர். கணக்கு என்றாலே முகத்தைச் சுளிக்கும் மாணவர்களையும் விரும்பிப் படிக்க வைத்துவருபவர். கணக்குப் பாடத்தை கரும்பலகையில் எழுதிக்காட்டி நடத்தும்போது, புரியகிற மாதிரி இருக்கும். ஆனால், வீட்டுக்குச் சென்று நோட்டில் எழுதிப்பார்க்கையில் குழப்பம் வரும். இது எல்லோருக்குமான இயல்புதான். அதனால்தான் ரூபி டீச்சர், தான் நடத்தும் பாடங்களை வீடியோவாக எடுத்து யூ டியூபில் பதிவேற்றிவருகிறார். மாணவர்களுக்கு எந்த இடத்தில் சந்தேகம் என்றாலும் அந்த வீடியோவைப் பார்த்தால் எளிதில் தீர்ந்துவிடும். அப்படியும் சந்தேகம் எழும் மாணவர்கள், எந்நேரத்திலும் இவரைத் தொடர்புகொள்ளும் வகையில், மாணவர்களோடு நட்போடு பழகி வருபவர். இதுவரை 500-க்கும் மேற்பட்ட வீடியோக்களைப் பதிவேற்றியுள்ளார். அவை, இந்தப் பள்ளிக்கு மட்டுமில்லாமல், தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளுக்குமாக அது மாறிவிட்டது. கணக்கு டீச்சர் என்பதன் ரோல்மாடலாகத் திகழ்கிறார் ரூபி கேத்தரின் தெரசா.
தன்னிடம் படிக்கும் மாணவர்களின் திறனை வெளிக்கொண்டுவரும் அற்புத ஆசிரியர்களில் அகஸ்லியா சுகந்திக்கு தனி இடம் உண்டு.



அகஸ்லியா சுகந்தி



அகஸ்லியா சுகந்தி

அகஸிலியா சுகந்தி:

விஜய் டிவி-யின் சூப்பர் சிங்கர் ஜூனியரில், சென்ற சீசனில் பட்டத்தைத் தட்டிச் சென்றவர் பிரித்திகா. கிராமத்து மணம் கமழும் பிரித்திகாவின் குரல், உலகம் எங்கும் உள்ள இசை ரசிகர்களை வசிகரித்தது. ஆனால் பிரித்திகா, திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். இவரின் திறமையை உலகமறியச் செய்ததில் இவர் படித்த அரசுப் பள்ளியின் ஆசிரியை அகஸிலியா சுகந்திக்குப் பெரும்பங்கு இருக்கிறது. தியானபுரம் அரசுப் பள்ளியில் பிரித்திகா படித்தபோது, பிரேயரில் அவர் பாடிய பாட்டைக் கேட்டு, அவரின் திறமையை அடையாளம் கண்டவர். அதை மெருகேற்றவும் தொலைக்காட்சியில் இடம்பெறவும் உறுதுணையாக நின்றவர். தன்னிடம் படிக்கும் மாணவர்களின் திறனை வெளிக்கொண்டுவரும் அற்புத ஆசிரியர்களில் அகஸ்லியா சுகந்திக்குத் தனித்த இடம் உண்டு.



சு.தமிழிச்செல்வி, தமிழ் இலக்கியத்தில் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர். அதனால், அதன்மூலம் கிடைக்கும் நட்புகளின் உதவிகளையும் பள்ளிக்காகவே பயன்படுத்தி வருபவர்.



தமிழ்ச்செல்வி



தமிழ்ச்செல்வி

சு. தமிழ்ச்செல்வி:

கடலூர் மாவட்டம், கம்மாபுரம் ஒன்றியம் கோ.ஆதனூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஆசிரியை. இந்தப் பள்ளி, இவர் பணிக்குச் சென்றபோது, வகுப்பறை மற்றும் கழிவறைகளுக்கு கதவு, தண்ணீர் வசதி என எதுவும் இல்லை. இவர் பெரும் முயற்சி எடுத்து ஒவ்வொன்றாக நிறைவேற்றினார். இந்தப் பள்ளி ஓர் ஏரியின் மிக அருகில் இருக்கிறது. சாலையிலிருந்து பள்ளிக்கு வரும் வழி என்பது குறுகலானது. மழைக்காலத்தில் கேட்கவே வேண்டாம். அந்தப் பாதை, சேறும் சகதியுமாகிவிடும். அதைக் கடந்து மாணவர்கள் பள்ளிக்குள் நுழையும்போது, அவர்களின் சீருடையின் நிறமே மாறியிருக்கும். கால்களில் சேறு அப்பியிருக்கும். இதைச் சரிசெய்ய பலரிடம் உதவிக்கேட்டு, ஜேசிபி கொண்டு அதைச் சரிசெய்தார். இதற்குப் பல எதிர்ப்புகளும் வந்தன. அவற்றைச் சரிசெய்வதில் விடாப்பிடியாக இருந்தார். இவர், தமிழ் இலக்கியத்தில் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர். அதனால், அதன்மூலம் கிடைக்கும் நட்புகளின் உதவிகளையும் பள்ளிக்காகவே பயன்படுத்திவருபவர். மாணவர்களின் நேசத்துக்கு உரிய ஆசிரியராக வலம்வருகிறார் தமிழ்ச்செல்வி.
மூடவிருந்த பள்ளியைச் சீராக்கி, துடிப்புடன் இயங்கவைத்த சிறப்பு மிகு ஆசிரியை ராஜ ராஜேஸ்வரி.



ராஜ ராஜேஸ்வரி



ராஜ ராஜேஸ்வரி

ராஜ ராஜேஸ்வரி:

திருச்சி, பீம்நகர் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை இவர். மாநகராட்சியின் மையப் பகுதியில் இருக்கும் இந்தப் பள்ளி, சில ஆண்டுகளுக்கு முன் மூடப்படுவதாக இருந்தது என்றால் நம்ப முடிகிறதா... அந்த நிலையை மாற்றி அமைத்த ஆசிரியை ராஜேஸ்வரி. 2009-ம் ஆண்டில் இந்தப் பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை 44 தாம். 2018 -ம் ஆண்டில் 240-க்கும் அதிகம் என்றால், இந்த ஆசிரியையின் உழைப்பும் அர்ப்பணிப்பும் அதில் இருக்கின்றன. சுற்றிலும் தனியார் பள்ளிகள் வசீகரமாய், பெற்றோர்களை ஈர்த்துக்கொண்டிருக்கும் சூழலில், நம் பள்ளியின் கட்டமைப்பில் மாற்றம் கொண்டுவந்தால் மட்டுமே மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், தன் சொந்தச் செலவில் சுமார் 5 லட்சம் ரூபாய்க்கு கணினி, சுவருக்கு வண்ணம் பூசுதல், கழிவறை அமைத்தல் பணிகளை மேற்கொண்டார். அதன் விளைவு, பெற்றோர்கள் பள்ளியை நோக்கிப் படையெடுத்தனர். மூடவிருந்த பள்ளியைச் சீராக்கி, துடிப்புடன் இயங்கவைத்த சிறப்பு மிகு ஆசிரியை ராஜ ராஜேஸ்வரி.



மாணவர்களின் முகம் பார்த்தே பசியறியும் அன்னையாகி விட்டார் ஆசிரியை கிருஷ்ணவேணி



கிருஷ்ணவேணி



கிருஷ்ணவேணி

கிருஷ்ணவேணி:

சென்னை, முகப்பேர் தொடக்கப் பள்ளி ஆசிரியை. பணியில் சேர்ந்தபோது, பள்ளியைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தார். இரவில் குடிமகன்கள் குடித்துவிட்டு போட்டுச் சென்றிருந்த பாட்டில்கள் குவிந்திருந்தன. அவற்றையெல்லாம் சுத்தப்படுத்தி பாடத்தை நடத்தினார். ஆனால், மாலை நேரத்தில் பள்ளி நேரத்திலேயே குடிமகன்கள் பள்ளிக்கு பாட்டில்களோடு வரத்தொடங்கினர். அக்கம்பக்கம் இருந்த இளைஞர்களின் துணையோடு அவர்களை விரட்டினார். இது, ஓரிரு நாள்களில் நடந்துவிடவில்லை. இதற்கென கடும் முயற்சியை கிருஷ்ணவேணி எடுக்கவேண்டியிருந்தது. அடுத்து, அந்தப் பள்ளியில் படிப்பவர்கள் அநேகர், பட்டியலினப் பிரிவினர். அவர்களின் பெற்றோர் அன்றாட கூலி வேலைகளுக்குச் செல்பவர்கள். அதனால், காலை நேரத்தில் சாப்பிடாமல் வருபவர் பலர். அவர்களைக் கண்டறிந்து, அம்மா உணவகத்து உணவுகளை அளிப்பதே அவரின் முதல் வேலை. அதன்பின்பே பாடங்களுக்குள் செல்வது. இப்படி மாணவர்களின் முகம் பார்த்தே பசியறியும் அன்னையாகிவிட்டார் இந்த ஆசிரியை. இன்று, அந்தப் பள்ளிக்கு பல துறை சார்ந்தவர்களும் வந்து மாணவர்களுடன் உரையாடி, தன்னம்பிக்கை அளிக்கின்றனர்.
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மிகச் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அவர்களில் சிலரே இவர்கள். இப்பட்டியலில் அடங்காத இருவர் பற்றிய குறிப்பு இது.



சபரிமாலா



சபரிமாலா
நீட் தேர்வு தமிழகத்திலும் நீட்டிக்கப்பட்டபோது, தன் பணியை உதறிச் சென்றவர் சபரிமாலா. தற்போது அவர், ஆசிரியப் பணியில் இல்லையெனினும் குறிப்பிடத் தகுந்தவர். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சுகந்தா, தனியார் பள்ளியில் பணியாற்றியவர். பள்ளி வேனில் குழந்தைகளுடன் பயணிக்கையில், வேன் குளத்தில் விழுந்துவிட, 11 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற தன் உயிரையும் விட்டவர். அவர் இன்று இருந்தால் குழந்தைகளின் நலனிலும் கல்வியிலும் மிகுந்த கவனம் வைக்கும் ஆசிரியராக மிளிர்ந்திருப்பார்

👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews