👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கல்வி உதவி தொகை வழங்கும் ஒரு செயலால் மட்டும் உங்களை நீங்களே கல்வியாளர் என்று நினைத்துக்கொண்டு மக்களை தவறாக திசை திருப்புவது வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரியது என சூர்யாவுக்கு வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2019 வரைவு பற்றி சமீபத்தில் நடிகர் சூர்யா பரபரப்பான கருத்துக்களை தெரிவிக்க, திரையுலகினர் பலர் அதற்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். தனது பேச்சை தொடர்ந்து சூர்யா 10 கேள்விகளைக் கேட்டிருந்தார். இந்த கேள்விகளுக்கு பாஜக தமிழக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனின் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
1.முப்பது கோடி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் புதிய கல்வி கொள்கையை நிறைவேற்ற ஏன் இத்தனை அவசரம்?
யாருக்கும் எந்த அவசரமும் இல்லை. புதிய தேசிய கல்வி கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்கிற விதை 2015 போடப்பட்டு டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையிலான குழு அதற்கான பணிகளை தொடங்கி தனது அறிக்கையை 2016 இல் சமர்ப்பித்தது. அதன் தொடர்ச்சியாக அறிவியல் அறிஞர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு தனது பணிகளை மேற்கொண்டு 2018 டிசம்பர் மாதம் தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அனைத்து தரப்பின் கருத்துக்களையும் கேட்டபின்பே இதை செயல்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் சென்ற மாதம் இறுதி வரை அவகாசம் தரப்பட்டது. எனினும் பலதரப்பில் இருந்தும் கால நீட்டிப்பு கோரப்பட்டதால் இந்த மாத இறுதிவரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு கருத்துக்களும் கவனமாக பரிசீலிக்கப்பட்டு அதன்பின்பே இவை நடைமுறைக்கு வரும். கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் எடுத்துக்கொண்டு மிகவும் கவனமாகவும் நிதானமாகவும் செயல்படுத்தப்படும் ஒரு கொள்கை முடிவை ‘அவசரம்’ என்று சொல்ல சூர்யாவுக்கு என்ன அவசியம் என்று தெரியவில்லை.
2.மூன்று வயது குழந்தையால் மூன்று மொழி படிக்க முடியுமா?
ஒரு குழந்தையின் மூளை வளர்ச்சியின் 85 சதவிகிதம் அதன் 6 வயதிற்குள் நடைபெறுகிறது என்பது அறிவியல்பூர்வமான உண்மை. அதை இந்த அறிக்கையிலும் அறிஞர்கள் உறுதி செய்திருக்கிறார்கள். எனவே 3 வயது குழந்தையால் மூன்றுக்கும் மேற்பட்ட மொழிகளை கூட படிக்க முடியும் என்பதுதான் உண்மை.
3. நாட்டில் 1848 பள்ளிகள் மூடப்படப்போகிறதே இதற்கு பதில் என்ன?
இப்படி ஒரு புள்ளி விவரமும் தகவலும் கல்வி கொள்கையின் எந்த ஒரு இடத்திலும் இடம்பெறாத போது எதன் அடிப்படையில் இப்படி ஒரு கேள்வி என்றே தெரியவில்லை. சொல்லப்போனால் நாட்டிலுள்ள 1,19,303 ஓராசிரியர் பள்ளிகளை மூடாமல் இருப்பதற்கான வழிமுறைகள்தான் கொள்கையில் சொல்லப்பட்டுள்ளன. ஓராசிரியர் பள்ளிகளை அவற்றின் அருகிலுள்ள பெரிய பள்ளிகளோடு இணைத்து செயல்பட வைக்கும் பள்ளி வளாகம் எனும் புதிய முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது,
4. கல்வியில் சிறந்த நாடுகளில் 8ம் வகுப்பு வரை எந்த தேர்வும் இல்லை என்கிற நிலையில் 3, 5, 8ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு என்பது எப்படிச் சிறந்த கல்வியாகும்?
3,5,8ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு என்கிற விஷயமும் இந்த கல்வி கொள்கையில் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. சொல்லப்போனால் ஏற்கனவே உள்ள பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் மாற்றியமைக்கப்பட்டு ஒன்பதாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான தொடர் மதிப்பீட்டு முறையில் அவை எளிமையாக இருக்க வேண்டும் என்றுதான் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
5. நுழைவு தேர்வு, பொதுத் தேர்வு, தகுதி தேர்வு, நீட் தேர்வு என்று மாணவர்கள் தொடர்ந்து தேர்வை எழுதிக் கொண்டிருந்தால் அவர்கள் வாழ்க்கையை படிப்பது எப்போது?
ஆரம்ப கல்வியிலிருந்து உயர் கல்வி வரை அனைத்து நிலைகளும் வாழ்க்கைக்கேற்ற கல்வியாக இருக்க வேண்டும் என்கிற ஒரே மையப்புள்ளிதான் இந்த ஒட்டு மொத்த கல்விக்கொள்கையின் அடிநாதம் என்பது முழுமையாக பொறுமையாக படித்தால் கண்டிப்பாக புரியும்.
6.ஒரு லட்சத்து 80 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில் ஒருவர் மட்டுமே பாஸ் என்றால் இதை எப்படி பார்ப்பது?
இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து NEET தேர்வு எழுதிய ஒட்டு மொத்த மாணவர்களின் எண்ணிக்கையே 1,23,078 தான். இவர் சொல்லும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. இந்த புதிய கல்வி கொள்கை அரசு பள்ளி மாணவர்களுக்கும் தாய்மொழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் சாதகமானதாக அமையும்.
7.ஐம்பது ஆயிரம் கல்லூரிகள் 12 ஆயிரமாக குறைக்கப்படுவதும், கோச்சிங் செண்டர்கள் அதிகரிப்பதும்தான் புதிய கல்வி கொள்கையா?
தற்போது நாட்டிலுள்ள கல்லூரிகளின் எண்ணிக்கை சுமார் 40,000. இவை தன்னாட்சி பெற வழி செய்யப்படும் என்று சொல்லப்பட்டு இருக்கிறதே தவிர குறைக்கப்படும் என்று சொல்லப்படவில்லை. கோச்சிங் செண்டர்களை ஊக்குவிக்கும் செயலை கல்வி கொள்கை செய்யவில்லை.
8.சுமார் 80 லட்சம் ஆசிரியர்களை கொண்ட இந்தியாவில் புதிய கல்வி கொள்கையை ஒரேயொரு ஆசிரியர் அமைப்பும், ஒரேயொரு மாணவர் அமைப்பும் சேர்ந்து தீர்மானிப்பது எந்த விதத்தில் நியாயம்?
நாட்டிலுள்ள நூற்றுக்கணக்கான கல்வியாளர்களையும் கல்வி நிறுவனங்களையும் தொண்டு நிறுவனங்களையும் அறிஞர் பெருமக்களையும் சந்தித்து அத்தனை ஆலோசனைகளையும் உள்வாங்கிக்கொண்டு வடிவமைக்கைப்பட்டதே இந்த புதிய கல்வி கொள்கை. எந்த ஒரு தனி அமைப்பின் பின்புலமும் இல்லாத வெளிப்படையான பரிந்துரைகள்தான் இவை.
9.விதவிதமான கல்வி முறைகளை வைத்துக் கொண்டு தேர்வு மட்டும் பொதுவானது என்பது எப்படிச் சரியாகும்?
விதவிதமான கல்விமுறைகள் மாணவர்களை குழப்பக்கூடாது, சமூகத்தின் அனைத்து தரப்பும் பயனடையும் வகையில் ஒட்டு மொத்த நாடும் ஒரே விதமான கல்வி திட்டத்தில் பயனடைய வேண்டும் என்பதே இந்த புதிய கல்வி கொள்கையின் நோக்கம்.
10.எதிர்கால தலைமுறையின் தலையெழுத்து எழுதப்படும் நேரத்தில் நாம் ஏன் இன்னும் விழிப்படையாமல் இருக்கிறோமே ஏன்?
மக்கள் விழிப்படைய வேண்டும் என்கிற உங்கள் அக்கறை நல்லதுதான். ஆனால் உங்களைப்போன்ற தவறான தகவல்களை தருபவர்களிடமிருந்தும் விழிப்படைய வேண்டியது இன்னும் அவசியமானதாக இருக்கிறது, மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்குகிற உங்கள் பணி பாராட்டுக்குரியது. அந்த ஒரு செயலால் மட்டும் உங்களை நீங்களே கல்வியாளர் என்று நினைத்துக்கொண்டு மக்களை தவறாக திசை திருப்புவது வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது’’ என சூர்யாவின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் வானதி ஸ்ரீனிவாசன்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U